பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில், பெங்களூரிலும் மற்ற பகுதிகளிலும், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்த நிலையில், 'பொது முடக்கத்தால், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. அதனால், இனி பொது முடக்கம் கிடையாது. பொருளாதார நடவடிக்கைகள் தொடர வேண்டும்' என, முதல்வர், எடியூரப்பா கூறியுள்ளார். தமிழக அரசும், இதை நடைமுறைப்படுத்துமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநிலம் முழுதும், கொரோனா வைரஸ் பாதிப்பு திடீரென தீவிரமடைந்தது. குறிப்பாக, பெங்களூரு நகரில் பாதிப்பு அதிகரித்தது. இதையடுத்து, வைரஸ் பரவலைத் தடுக்க, ஜூலை, 14ம் தேதி, இரவு, 8:00 மணி முதல், இன்று காலை, 5:00 மணி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதிகரிப்பு:
இந்த நிலையில், பொது முடக்க காலத்திலும், மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்துள்ளது. மொத்தம், 71 ஆயிரத்து, 69 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 25 ஆயிரத்து, 459 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில், 1,464 பேர் உயிரிழந்தனர். பெங்களூரு நகரில் மட்டும், 34 ஆயிரத்து, 943 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. 'பாதிப்பு அதிகம் இருப்பதால், பொது முடக்கம், மேலும், 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம்' என, பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில், மாநில மக்களுக்கு, 'டிவி' மூலம் உரையாற்றிய, முதல்வர், எடியூரப்பா, 'பொது முடக்கம் நீடிக்கப்படாது' என, அறிவித்தார். அவர், மேலும் கூறியதாவது: மாநிலத்தில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் சரியான நடவடிக்கை எடுத்து, வெற்றி கண்டோம். பாதிக்கப்பட்டோரில், 98 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். ஆனால், சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில், மக்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
பொது முடக்கம் என்பது வைரஸ் பரவலை தடுப்பதற்கான தீர்வு அல்ல. மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவையே, வைரஸ் பரவலை தடுக்கும். மக்களின் சுகாதாரம் முக்கியம். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாநிலத்தின் பொருளாதாரமும் மிகவும் முக்கியம்.
வேலைக்கு போகலாம்:
அதனால், மாநிலம் முழுதும் பொது முடக்கம் தொடராது. பொருளாதாரத்தை மீட்கும் வகையில், மக்கள் தங்களுடைய வேலைகளுக்கு செல்ல வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும். அங்கு தீவிர கண்காணிப்பு இருக்கும். வைரஸ் பரவலை தடுக்க, பாதிப்பு உள்ளோரை அடையாளம் காண்பது, அவர்களை கண்டுபிடிப்பது, பரிசோதனை, சிகிச்சை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய உத்திகளை கையாளும்படி மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில், மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதில் 1 ரூபாய் கூட மோசடி நடக்கவில்லை. அனைத்து ஆவணங்களையும் எதிர்க்கட்சிகள் ஆய்வு செய்யலாம். அவற்றை பகிர்ந்து கொள்வதற்கு அரசு தயாராக உள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, அனைத்து தரப்பினரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
'கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொது முடக்கம் தீர்வாகாது' என, எடியூரப்பா கூறியுள்ளார். மாநிலம் மற்றும் மக்களின் பொருளாதார பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், இந்த முடிவை, கர்நாடக அரசு எடுத்துள்ளது. பொருளாதாரத்தை மீட்கும் வகையில், கர்நாடக அரசின் வழியை, தமிழக அரசு பின்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE