கொரோனா பரிசோதனையில் கொஞ்சமும் தாமதம் வேண்டாம்| Dinamalar

கொரோனா பரிசோதனையில் கொஞ்சமும் தாமதம் வேண்டாம்

Added : ஜூலை 22, 2020 | |
'கொரோனா' என்ற வார்த்தை இன்று அனைவராலும் அதிகமாக அச்சத்துடன் உச்சரிக்கப்படுகிறது. உலகையே நிறுத்தி வைத்துள்ள 'சார்ஸ் கோவிட் 2' என கூறப்படும் கொரோனா வைரஸ், கோவிட் என்னும் நோயை ஏற்படுத்துகிறது. 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் கண்டறியப்பட்ட இந்நோய் தற்போது உலகில் 1.5 கோடி மக்களை பாதித்துள்ளது.பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கையில் மூன்றாவது
கொரோனா பரிசோதனையில் கொஞ்சமும் தாமதம் வேண்டாம்

'கொரோனா' என்ற வார்த்தை இன்று அனைவராலும் அதிகமாக அச்சத்துடன் உச்சரிக்கப்படுகிறது. உலகையே நிறுத்தி வைத்துள்ள 'சார்ஸ் கோவிட் 2' என கூறப்படும் கொரோனா வைரஸ், கோவிட் என்னும் நோயை ஏற்படுத்துகிறது. 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் கண்டறியப்பட்ட இந்நோய் தற்போது உலகில் 1.5 கோடி மக்களை பாதித்துள்ளது.பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் உள்ளது இந்தியா. தற்போதைய நிலவரப்படி 10 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு 25 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர். இருப்பினும் 6.5 லட்சம் பேர் பூரண குணமடைந்துள்ளனர். மேலை நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு விகிதம் குறைவு என்பது ஆறுதல்.
அறிகுறிகள் என்ன:


தொண்டை வலி, தலைவலி, காய்ச்சல், உடம்புவலி, இருமல் போன்ற சாதாரண சளியின் அறிகுறிகளே கொரோனா கிருமித் தொற்றால் ஏற்படுகிறது. இதனால் பலருக்கு குழப்பம் உள்ளது. 80 சதவீத மக்களுக்கு இக்கிருமித் தொற்றால் மிகக் குறைவான அறிகுறிகளே ஏற்படுகிறது.பெரும்பான்மையாக பாதிப்பு அடைந்தவர்களுக்கும் எந்த ஒரு அறிகுறிகளும் தோன்றுவதே இல்லை என்பது இந்நோயின் தனித்தன்மையாக இருக்கிறது. மூக்கில் சுவாசத் தன்மை இழப்பு, நாவில் சுவை உணரும் தன்மை இழப்பு, அதிக உடல் வலி ஆகியவை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதற்கான பிரத்யேக அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது.மீதமுள்ள 20 சதவீத மக்களில் 15 சதவீதத்தினருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. மற்றொரு 5 சதவீதத்தினருக்கு மட்டுமே செயற்கை சுவாசம் போன்ற தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 10 ஆயிரம் பேருக்கு 295 பேர் வரை உயிரிழக்கின்றனர். இதைத்தான் கேஸ் பேட்டலிட்டி ரேட்' 2.95 சதவீதம் என குறிப்பிடப்படுகின்றனர்.
சாலை விபத்துக்கள்:


இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஒரு நாளில் 500 பேரும், 'டியூபர்குளோசிஸ்' எனப்படும் காசநோயால் 1,100 பேரும் உயிரிழக்கின்றனர். இவற்றுடன் ஒப்பிடும் போது ஒரு நாளில் 300 பேர் கொரோனா தொற்றால் உயிரிழக்க நேரிடுவது குறைவான எண்ணிக்கைதான். என்றாலும் அப்படி நாம் புறந்தள்ளி சென்று விட முடியாது. இருப்பினும் இந்த இறப்பு விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது. கொரோனா இறப்பிற்கு முக்கிய காரணங்களாக அதிக வயதும், தீவிர உடல் உபாதைகளான நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா, கட்டுப்பாடு இல்லாத ரத்த சர்க்கரை பாதிப்பு, பலவீனமான இருதயம், சிறுநீரக பாதிப்புக்கள் உள்ளன.
இழுக்கு இல்லை:


இதுதவிர தொற்றை தாமதமாக கண்டறிவதும் அதிக இறப்பிற்கு மிக முக்கிய காரணம். பொதுமக்கள் பலர் சளித் தொந்தரவு இருப்பினும் முன்பு போலவே வீட்டிலேயே இருந்து மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு சரிசெய்ய முற்படுகிறார்கள். காய்ச்சல் வந்தாலும் சுயமருத்துவம் செய்கின்றனர். சளிப் பரிசோதனை செய்வதால் நமக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானால் என்ன செய்வது என்ற அச்சம் ஏற்படுகிறது.கொரோனா இருப்பின் சமுதாயத்தில் இழுக்கு என்றும் குடும்பத்தாராலும், சுற்றத்தாராலும் தனிமைப்படுத்தப்படுவோம் என்றும் மனக்கவலை ஏற்படுகிறது. இது தேவையற்ற பீதி. இந்த வைரஸ் கிருமி ஏழை, பணக்காரர், ஜாதி, மதம் ஏதும் பார்க்காமல் உலகத்தில் அனைவரையும் தொற்றக்கூடியது. இதனை ஒரு இழுக்காகவும், வெறுக்கத்தக்க நோயாகவும் பார்ப்பது தவறு.
ஒத்துழைப்பு அவசியம்:


அரசு பல கோடி ரூபாய் செலவழித்து அறிகுறி இல்லாதவர்களையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவது சமுதாய ஆரோக்கியத்திற்காகவே. அது மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே. எனவே நமது ஒத்துழைப்பே முக்கியம். நோய் தொற்று அறிகுறிகள் இருப்பின், சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை கொண்டு, அல்லது பிறர் சொல்வதை கேட்டு தாமாகவே மருந்து, மாத்திரை உட்கொண்டு சிகிச்சை மேற்கொள்ள முயற்சி எடுக்கக்கூடாது.அதனால் ஏற்படும் விளைவுகள் அபாயகரமானது. நோய் நம்மை அறியாமல் தீவிரமாகி சில நாட்களுக்குள் நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. மூச்சுதிணறல் போன்றவை ஏற்பட்டால் நிலைமை எல்லை மீறிவிடும். நம்மை அறியாமலையே நம்மிடமிருந்து குடும்பத்தாருக்கும், நெருக்கமானவர்களுக்கும் கிருமி பரவி விடும். அவ்வாறு தொற்று ஏற்படுபவர்களுக்கு அதிக வயது, உடல் பலவீனம், பிற நோய்கள் இருப்பின் தீவிர நோயாக மாறி உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது.
உயிரிழப்பை தவிர்க்கலாம்:


இன்று இந்தியாவில் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் தாமதமாக மருத்துவமனை உதவியை நாடுவதும் ஆகும். தொற்றினால் அதிக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இருமலா கவோ, மூச்சு திணறலாகவோ அது ஆரம்ப காலகட்டங்களில் வெளிக்காட்டுவதில்லை. ஆனால் அச்சமயத்தில் நுரையீரல் திறனை 'பல்ஸ் ஆக்ஸி மீட்டர்' என்னும் கருவி மூலம் தொடர் பரிசோதனை செய்தால் பாதிப்பு அதிகமாவதற்கு முன் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு உயிரிழப்பைத் தவிர்க்கலாம். கொரோனா தொற்றினால் உயிரிழப்பு பெரிதாக இல்லை என்று ஆறுதல் அடைந்தாலும், இந்த நோய்க்கு தற்பாதுகாப்பு மிக அவசியமான ஒன்று.
தாமதம் வேண்டாம்:


ஆகையால் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தேவையில்லாமல் வெளியில் அலைவதை தவிருங்கள். சிரமமாக இருந்தாலும் கொஞ்ச நாள் வீட்டிலேயே பொறுத்திருங்கள். அவசியம் ஏற்பட்டு வெளியில் வந்தால் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணியுங்கள். எந்த ஒரு செயலுக்கு முன்னும், பின்னும் கைகளை சுத்தம் செய்யுங்கள். இது மட்டுமின்றி நோயின் அறிகுறிகள் இருப்பின் கொஞ்சமும் தாமதிக்காமல் உடனே கொரோனா பரிசோதனை செய்வதும், தனிமைப்படுத்திக் கொள்வதும் நாம் நம் குடும்பத்தாருக்கும், சமூகத்திற்கும் செய்யக்கூடிய மிகப்பெரிய சேவையாகும்.இன்று உலக அளவில் இந்த வைரஸ் கிருமியை தடுக்க 200க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. அவற்றில் 21 தடுப்பூசிகள் மனித சோதனை நிலையை அடைந்துள்ளது மகிழ்ச்சியான விஷயம்..-டாக்டர் சி.பி.ராஜ்குமார்


சர்க்கரை மற்றும் பொதுநல நிபுணர்


தேனி.


drcpraj@nalamhospital.in

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X