பொது செய்தி

தமிழ்நாடு

சட்டத்திற்கு புறம்பாக தத்தெடுத்தால் கடத்தல் வழக்கு

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement


* குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணிகள் என்ன?



மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கலெக்டர் தலைமையில் செயல்படுகிறது. குழந்தைகள் தொடர்பான பணியில் ஈடுபடும் பள்ளிக்கல்வித்துறை, குழந்தை தொழிலாளர் தடுப்பு துறை, பொது சுகாதாரத்துறை, போலீஸ், நீதித்துறை, சமூகநலத்துறை, அங்கன்வாடி பணிகள் உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறோம்.


* இளைஞர் நீதி சட்டம் என்றால் என்ன?

இச்சட்டத்தின் கீழ் குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள், சட்டத்திற்கு முரண்பட்டதாக கருதப்படும் குழந்தைகள் என 2 வகைகளாக பிரிக்கப் படுகின்றனர். சட்டத்திற்கு முரண்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்காக இளைஞர் நீதிக்குழுமம் மாஜிஸ்திரேட் தலைமையில் 2 சமூக பணியாளர்களை கொண்டு செயல்படுகிறது. பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக 5 பேர் கொண்ட குழந்தைகள் நல குழு செயல்படுகிறது.


* மாவட்ட ஆய்வுக்குழுவின் பணி?



கலெக்டர் தலைமையில் செயல்படுகிறது. இக்குழு ஒவ்வொரு குழந்தைகள் இல்லங்களை ஆய்வு செய்து தேவையான வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்கிறது.


* தத்தெடுத்தல் பற்றிய விழிப்புணர்வு?

தத்தெடுத்தலால் குழந்தைகள் இல்லாமல் தவிப்போர், கைவிடப்பட்ட குழந்தைகள் என இருதரப்பினர் வாழ்வு பெறுகின்றனர். முன்பு விதிமீறிய தத்தெடுப்புகள் அடிக்கடி நடந்து வந்தன. தற்போது பெரிய அளவில் குறைந்து விட்டது.


* தத்தெடுப்பில் செயல்படும் அமைப்புகள்?



காரா(மத்திய தத்தெடுப்பு வள ஆணையம்) சாரா (மாநில தத்தெடுப்பு வள முகமை) என இரு அமைப்புகள் உள்ளன. மாவட்ட அளவில் ஷா(Special Adoption Agency) சிறப்பு தத்து வழங்கல் மையம் செயல்படுகிறது.


* குழந்தைகள் தத்தெடுத் தலுக்கான நடைமுறைகள் என்ன?



தத்தெடுக்க விரும்புவோர் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட கூடாது. மீறினால் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பாயும். மக்கள் இடைதரகர்கள், குழந்தைகள் விற்பவர்களிடம் குழந்தைகளை வாங்க கூடாது. www.adoptionindia.com இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். மூத்த உரிமை அடிப்படையில் விசாரணை செய்து தத்தெடுத்தல் செய்யப்படும்.

இதை காரா, சாரா, ஷா உள்ளிட்ட அமைப்புகள் காண்காணிக்கும். 2019லிருந்து இம்மாதம் வரை மாவட்டத்தில் 28 குழந்தைகள் சிறப்பு தத்து வழங்கல் மையங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.


* முறைகேடான தத்தெடுப்பை தடுக்க நடவடிக்கைகள்?



முறைகேடான தத்தெடுப்புகளை முறைப்படுத்துவதற்காக மருத்துவ, சுகாதாரத்துறை யினருக்கு மாவட்ட நிர்வாகம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் தற்போதைய சூழலில் முறைகேடான கருவுறுதல் மூலம் குழந்தை பிறப்பது எங்கு நடந்தாலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் தகவல்கள் வந்து விடுகிறது.

இவர்கள் தவிர தனியார் மருத்துவமனை நிர்வாகங்களும் தகவல் தருகின்றனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு எங்களுடைய சமூக பணியாளர்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் குழந்தைகள் கைவிடப்படுவது பெரிய அளவில் குறைந்துள்ளது.


* குழந்தைகள் இல்லங்களின் செயல்பாடுகள்?

தற்போது 23 குழந்தைகள் இல்லங்கள் உள்ளது. இங்கு 550க்கு மேற்பட்ட குழந்தைகள் பாரமரிக்கப்பட்டு வருகின்றனர்.


* ஊரடங்கில் இவர்களுக்கு செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள்?

கொரோனா நோய் தொற்று தவிர்ப்பதற்காக வீட்டிற்கு அனுப்ப அரசால் அறிவுறுத்தப்பட்டது. இதில் 500க்கு மேற்பட்ட குழந்தைகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 50 குழந்தைகள் மட்டும் ஆதரவில்லாததால் இல்லங்களிலே இருக்கின்றன. வறுமையில் வாடும் 200 குழந்தைகளின் குடும்பங்களுக்கு சைல்டு லைன், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், நிதி ஆதரவு கொடுத்துள்ளோம்.


* குழந்தைகளுக்கான வேறு சிறப்பு திட்டங்கள்?



மாவட்டத்தில் 43 குழந்தைகளை தேர்வு செய்து நிதி ஆதரவு திட்டம் மூலம் சமூக மக்களுடன் பழகி படிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் தன்னம்பிக்கையும், துணிவும் அதிகரிக்கிறது. முறையாக படிக்கின்றனரா எனவும் அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகிறது, என்றார்.
பா.கணேசன்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர், விருதுநகர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X