ஜில்லென்ற காற்றை விரும்பாதவர்கள் உண்டோ? ஆனால் சுத்தமான காற்றை சுவாசிக்கின்றோமா என்றால் இல்லை! 1980 களில் குடி தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்படலாம் என்று கூறும்போது மக்கள் நம்பவில்லை, மாறாக நகைத்தார்கள். ஆனால் இன்று தண்ணீரை விலைக்கு வாங்கி கொண்டிருக்கிறோம்.
2000 ங்களில் காற்றை விலை கொடுத்து வாங்கப்போகிறோம் என்ற பொழுது நம்மால் அதை ஒதுக்கவும் முடியவில்லை, நகைக்கவும் முடியவில்லை. மாறாக மனதில் பயமும், இளைய சந்ததியினர் எதிர்காலமும் கண்முன்னே நிற்கின்றன.
மாறிய இயற்கை
நம் கலாச்சாரமும், பண்பாடும், உணவுப் பழக்கங்களும், தொழில் முறைகளும் மாறியதால் இயற்கையின் இயல்பு நிகழ்வுகளும் மாறி சுனாமி, சூறாவளி, பூகம்பம், வெள்ளம், வறட்சி என பூமித்தாய் புரட்சி செய்து கொண்டிருக்கிறது. உலகளவில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், காசநோய்களில் நாம் தான் முதலிடத்தில் இருக்கிறோம். அப்போதும் நாம் மாறவில்லை. உலகில் பாவங்களும், தீமைகளும், இயற்கைக்கு விரோதமான நிகழ்ச்சிகளும் நடக்கும் போதெல்லாம் பிரளயங்கள் உண்டாவது வழக்கம். ஆதலால் உலகத்தையே மாற்றினால் தான் நாமெல்லாம் மாறுவோம் என்று இயற்கை நினைத்ததால் தான் கண்ணுக்குத் தெரியாத கிருமி மூலம் பாடம் புகட்டிக் கொண்டிருக்கிறது.
பஞ்சபூதம்
உலகம் பஞ்சபூதத் தத்துவங்களால் உள்ளடங்கியிருக்கிறது என்று அக்குபஞ்சர் தத்துவம் கூறுகிறது. நிலம் -- பூமித்தாயின் வயிறாகவும், நீர் சிறுநீரகமாகவும், காற்று நுரையீரலாகவும், நெருப்பு இதயமாகவும், ஆகாயம் கல்லீரலாகவும் இருப்பதால் பூமிக்கும் உயிர்த் துடிப்பு உண்டு. இதில் இப்போது நாம் பார்க்கப் போவது காற்று எனும் நுரையீரலின் இயக்கம் பற்றி. " காற்றுக்கென்ன வேலி ? " என்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு அர்த்தம், யாராலும் காற்றுக்கு தடை போடமுடியாது என்பதே. ஆனால் நாம் காற்றுக்கே தடை போட்டு விட்டோம். எப்படி? நாம் சுவாசிக்க சுத்தமான பிராணவாயு தேவை. வெளிவிடும் மூச்சுக் காற்றோ கரியமில வாயு. இது வளிமண்டலங்களில் மாசாக கார்பன் துகள்களாக காற்றில் கலந்து உலாவரும். மரங்கள் கரியமில வாயுவை உறிஞ்சி , பிராணவாயுவை (ஆக்சிஜன்) வெளியிட்டு காற்றைத் துாய்மைப்படுத்தி சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.
தெய்வீக மரங்கள்
மரங்களில் பூ, காய், கனிகளை உணவுக்காகவும், நிழலுக்காகவும், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பதற்கும் உபயோகித்து வருகிறோம். ஆனால் முன்னோர்கள் மரங்களின் முக்கியத்துவம் அறிந்து மரங்களைத் தெய்வமாக வழிபட்டு கொண்டாடினர். சிவனுக்கு - வில்வமும், பெருமாளுக்கு - துளசியும், அம்மனுக்கு - வேம்பும், விநாயகருக்கு - அருகம்புல்லும், பிரம்மனுக்கு - அத்தி இலையும் வைத்து வழிபட்டு பிரசாதமாக உண்டனர். வில்வம் உணவை ஜீரணமாக்கி விஷத்தன்மையை முறிக்கும் ஆற்றல் உள்ளது. வேப்பிலை பூச்சிகளையும், நோய்க்கிருமிகளையும் அழித்து, உடலின் வெப்பத்தை சீராக்கும் தன்மையுடையது. துளசி உடலின் எலும்பு, தசைகளை வலுவடையச்செய்கிறது, நுரையீரலின் கழிவுகளை வெளியேற்றி நாக்கின் அடியில் உள்ள சுரப்பிகளை வலுப்படுத்துகிறது. அருகம்புல் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்தப்படுத்தி, கழிவுகளை வெளியேற்றும். ஆதலால் முன்னோர்கள் மரங்களையும், காடுகளையும் பாதுகாத்தனர்.
மரங்களின் மரணம்
மரங்களை அழித்தோம். அதன் விளைவு சுற்றுச்சூழல் சீர்கேடு, வறட்சி, நோயின் தாக்கம். நான் சொல்வது இப்போது நுரையீரலைத் தாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா நோய் பற்றித்தான். மரத்தை அழித்ததற்கும் கொரோனாவிற்கும் என்ன தொடர்பு? உயிர் வாழத் தேவையான ஆக்சிஜன் 21% ஐ காற்றின் மூலம் கிரகித்து மூச்சுக்காற்றை உள்ளிழுக்கிறோம். உடல் இயக்கத்துக்குத் தேவையான பிராணவாயுவை நுரையீரலில் உள்ள காற்றுப் பைகள் சேகரித்து வைத்துக்கொண்டு ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று உடல் சீராக இயங்க உதவுகிறது. குறைந்த அளவில் உள்ளிழுத்து வெளியே விட்டால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூளை செயலிழப்பு, பக்கவாதம், மூச்சடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சுவாசிக்கும் காற்று மாசுபட்டு இருந்தால் அவை நுரையீரலில் கழிவுகளாக தங்குகின்றன. அப்போது நமக்கு மூச்சுத்திணறல், தலைவலி, சைனஸ், ஆஸ்துமா ஏற்படுகின்றன.
அமேசான் காட்டுத்தீ
பூமித்தாயின் நுரையீரலே மரங்கள் தான். புகைப்பிடிப்பதால் வெளியிடும் புகை, தொழிற்சாலை, வாகனங்களின் புகைகள், காடுகள், வனங்கள் அழிப்பதால் ஏற்படும் புகைகள் இவற்றால் கரியமில வாயுவாக மாறுகிறது. இந்த கரியமில வாயு எரியும் தன்மையும், நீரில் கரையும் தன்மையும் உடையது, ஆதலால் ஏரி, கடல் நீரில் கலந்து அமிலமாக மாறி நீர் மாசுபடுகிறது. கார்பன்டை ஆக்சைடை வடிகட்டி உறிஞ்சும் மரங்கள் மரணமடைவதால் காற்று மாசுபட்டு எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன. தற்போது அமெரிக்க கண்டமே கொரோனா பிடியில் தவிக்கிறது. இதற்கு ஒரு காரணம் அமேசான் காட்டுத் தீயே! அமேசான் காடுகள் உலகின் முதல் பெரிய மழைக்காடு, பல்லுயிர்கள் வாழும் புகலிடம், உலகின் முதல் பெரிய அமேசான்நதி, உலகத்திற்கு தேவையான 20% ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. உலகின் 5% கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சிக் கொள்கிறது. 8 நாடுகளை உள்ளடக்கிய அமேசான் காட்டில் 60% பிரேசிலில் உள்ளது.இங்கு காட்டை அழிப்பது வாடிக்கை. இதனால் ஏற்படும் தீயின் புகை மீத்தேன் வாயுவாக மாறி இருந்ததாலும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் போராடினர். அதன் நச்சுத் துகள்கள் காற்றில் பரவிக்கிடப்பதால் அமெரிக்கா, பிரேசில், கொலம்பியா போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கமும் பாதிப்பும் அதிகம். ஏனெனில் காற்றில் கலந்த காட்டுத் தீயின் நச்சு வாயுக்கள் மூச்சுக் காற்றில் கலந்து அது நுரையீரலை ஏற்கனவே பாதித்திருக்கும். இதனால் ஆஸ்துமா,COPDஎன்ற நுரையீரல் பாதிப்புகள் அங்கு அதிகம். இத்தகைய நுரையீரல் தான் கொரோனா வைரஸின் சொர்க்க பூமி.
24 மணி நேரமும் ஆக்சிஜன்
மரங்கள் சூரிய ஒளி வந்தபிறகே ஆக்சிஜனை வெளிவிடும். இரவு நேரங்களில் கார்பன்டை ஆக்சைடையே வெளியிடும். இதில் ஒரு சில மரங்களும், செடிகளும் 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. அவை புங்கமரம், அரசமரம், வேப்பமரம், மூங்கில் மரம், செடிகளில் சோற்றுக்கற்றாழை, பாம்புச்செடி, டெய்சி, மணி பிளாண்ட், ஆடாதோடை, துளசி, ஸ்பைடர் செடி போன்றவையாகும். இரவில் புளிய மரத்தடியில் துாங்காதே; பேய்கள் குடியிருக்கும் என்று முன்னோர் சொல்வர். இதற்கு அறிவியல் பூர்வமான உண்மை, புளிய மரம் இரவு நேரங்களில் கார்பன் மோனாக்சைடு என்ற அதிக நச்சுத்தன்மை கொண்ட வாயுவை வெளியிடுகிறது என்பதே. பெண்கள் அடுப்பங்கரை புகையிலே இருப்பதால் கரியமில வாயுவை சுவாசித்து ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்; சுத்தமான அரசமர காற்றை சுவாசிக்கும் போது உடலில் மாற்றங்கள் ஏற்படும் என்பதால் குழந்தையில்லா தம்பதிகளை அரசமரத்தை சுற்றி வரச்சொல்கின்றனர்.
புவி வெப்பமாகும்
பூமியின் நுரையீரலான மரங்களை நாம் அழிப்பதால் புவி வெப்பமயமாகிறது, வளிமண்டலத்தில் ஓசோனில் ஓட்டை, பனிமலைகள் உருகுகின்றன. காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படுகிறது. இதனால் புதிய நோய்கள் உண்டாகின்றன. உணவின்றி பல நாட்கள் இருக்கலாம், நீரின்றி சில நாட்கள் இருக்கலாம், ஆனால் மூச்சுவிடாமல் சில நிமிடங்கள் கூட இருக்கமுடியாது. ஆகவே மரம் வளர்ப்போம்; நம் நுரையீரலையும், பூமித்தாயின் நுரையீரலையும் காப்பாற்றுவோம். மரமில்லையேல் மனிதன் இல்லை.
-டாக்டர்.சௌ.ராஜரீகா
அக்குபஞ்சர் & வர்ம சிறப்பு மருத்துவர்,
மதுரை
94875 82830