சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

அரசியலும், ஆன்மிகமும்!

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
அரசியலும், ஆன்மிகமும்!

உலக நாடுகளுக்கு, ஞான மார்க்கத்தில், இந்தியா வழிகாட்டியாக இருக்கிறது என்பதை, மன அமைதி தேடி, இந்தியாவுக்கு வந்த மேலை நாட்டு எழுத்தாளர் பலர், அனுபவ பூர்வமாகப் பதிவு செய்துள்ளனர். 'நான் என்பது, உடல் அல்ல; அது தான் ஆன்மா என்பதை, ஞானத் தேடலில் உணர்ந்தேன்' என, இத்தாலி தேசத்துக் கல்வியாளர், நோல்ஸ் பதிவு செய்துள்ளார்.

ஆன்மா அழிவில்லாதது. தற்காலிகமாக உடலில் புகுந்து, உடலுக்குரிய மனிதனை இறைவனைத் தேடச் செய்கிறது. ஆன்ம பலம் மிக்கவர்கள், இடையூறுகளைக் கடந்து, தங்களை நல்வழிப் படுத்திக் கொள்கின்றனர். 'ஆன்ம முன்னேற்றமே ஆன்மிகம்' என்கிறார் சுவாமி சிவானந்தர். இறைவனை வாயால் பாடி, மனதால் சிந்தித்து, செயல் அளவில் பிறர்க்கு நன்மை செய்வது ஆன்மிகம். இந்தியா ஆன்மிக தேசம் என்பதை, அவ்வப்போது தோன்றும் சான்றோர் பெருமக்கள், நமக்கு நினைவுபடுத்தி வந்துள்ளனர்.

இந்தியாவின் நற்பேறு, அரசர் காலம் தொடங்கி, இன்றைய அரசியலார் வரை, மக்களின் ஆன்ம நேயத்திற்கோ, அதன் வழி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கோ, தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதை மறுப்பதற்கில்லை. ஒரு விதத்தில் அரசியலார் ஆன்மிகத்திற்கும், ஆன்மிகச் சிந்தனையாளர் மக்கள் பணியின் மூலம் அரசியலார்க்கும், ஒத்துழைப்பு அளித்து வந்துள்ளதை நாம் அறிய முடிகிறது. ஏதோ ஒரு புள்ளியில், இரண்டும் இணைவதை காண்கிறோம்.

வழி வழியாக வந்த மன்னர்கள், ஆலயங்களை எழுப்பியதும், ஆலயப் பணிக்காக மானியங்களை வழங்கியதும், நம் சரித்திரங்கள் குறித்து வைத்து உள்ளன. ஆலயங்களிலும், பிற இடங்களி லும் உள்ள கல்வெட்டுகள் இதற்கான ஆதாரங்களைச் சுமந்து நிற்கின்றன.இங்கே ஒரு முக்கியமான வினாவை, நாம் ஆராய வேண்டியுள்ளது. நம் தேச அரசர்கள் தொன்று தொட்டு, ஆன்மிகப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் காரணம் என்ன?

திருக்குறளிலும், புறநானுாற்றிலும், பிரபந்தத்திலும், சிலப்பதிகாரத்திலும் ஒரு சிறிய தேடல் மூலம் விடையைக் காணலாம். வேறு பல இலக்கியங்களிலும் விடை இருக்கக் கூடும். விரிவு அஞ்சி, இந்த நான்கு இலக்கியங்களை மட்டும் பார்க்கலாம்.நம் கிராம வழக்கில், 'மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றாமலா போவான்...' என்பதும் ஒன்று. அதாவது, படைத்தவனே பாதுகாக்கவும் செய்வான் என்பது பொருள். இறைவனது கடமை பாதுகாப்பதும் ஆகும். திருக்குறளும், திவ்யப் பிரபந்தமும், அரசனை இறைவனுக்குச் சமமாகப் போற்றுகின்றன.

இத்தகைய சிறப்புப் பெற்ற அரசர்கள், பயபக்தியுடன் ஆட்சி செய்வதைக் கடமையாகக் கொண்டனர். சிலப்பதிகாரத்தில், சேரன் செங்குட்டுவன், மன்னருக்கான பொறுப்பு பற்றி சொல்லும் போது, 'மழை பெய்யவில்லை என்றால் அரசன் மேல் பழி வரும். தகாத முறையில் எந்தக் குடிமகனாவது இறந்தால், அந்தப் பழி அரசனுக்கே வரும். எனவே, அரசாட்சி செய்வது துன்பம் அற்றது அல்ல' என்கிறான்.

புறநானுாற்றுப் பாடலிலும், 'மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்காவலர்ப் பழிக்கும் இக்கண்ணகல் ஞாலம்' என, குறிப்பிடப்படுகிறது.எனவே, தெய்வக் குற்றம் வராமல், தங்கள் ஆட்சியைக் காத்துக் கொள்ள, மக்களின் ஆன்மிகப் பற்றை வளர்த்து, தெய்வ பக்தியும், வழிபாடும் பெருக, அரசர்கள் உதவினர். சேரன் செங்குட்டுவனும், கண்ணகியைத் தெய்வமாகவே கருதி, கோட்டம் அமைத்தான் என்பது இலக்கியப் பதிவு. அவ்வப்போது தோன்றிய சமயங்களுக்கு ஏற்ப, அரசர்கள் சமயப் பணி புரிந்துள்ளனர்.

ஒரு ஆலயத்தில் யானை நுழைந்து, கருவறை வரை சென்று விட்டதால், கோச் செங்கட் சோழன், யானைகள் உள்ளே நுழைய முடியாதவாறு ஆலயங்களை அமைத்தான் என்பதும் ஒரு செய்தி.திருவிளையாடற் புராணம்நெற்றியில் திருநீறு அணிந்திருப்பவன், பகைவனே ஆனாலும் அவனை, வெற்றி கொள்ளத் துணியாத அரசனை, பெரிய புராணம் விளக்குகிறது. உடல் எல்லாம் உவர் மண்ணோடு, எதிரே வந்த ஒரு சலவையாளனைச் சிவபக்தன் என நினைத்து, யானையில் இருந்து இறங்கி, ஒரு அரசன் வணங்கினான் எனத் திருவிளையாடற் புராணமும் எடுத்துக் காட்டுகின்றது.

பக்தி இலக்கியங்களைப் பாடியவர்களை அரசர்கள் போற்றி உள்ளனர். பெரிய புராண ஓலைச் சுவடிகளை யானை மேல் ஏற்றி, சோழன் போற்றினான் என்பது வரலாறு. தேவாரத் திருமுறைகளை, ராஜராஜ சோழன் மீட்டு உலகத்திற்கு அளித்ததும் நாம் அறிவோம்.ஆன்மிக நெறி பரவினால் தேசத்தில் குற்றங்கள் குறையும். மனசாட்சிக்கும், தெய்வ தண்டனைக்கும் மக்கள் அஞ்சுவர். ஆலயத் திருப்பணிகளால் கட்டுமானத் தொழிலாளர்களும், சிற்பிகளும், இசைக் கலைஞர்களும், திருமுறை வாணர்களும் பயன் பெறுவர். பாஸ்கர ராயர் என்ற விற்பன்னருக்கு ஒரு ஊரே தானமாக அளிக்கப்பட்டது

.'தமிழ்த் தாத்தா' உ.வே.சா., தோன்றிய உத்தமதானபுரம் என்பது, வேத நெறியாளர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊராகும். அரசர்களின் சமயத் தொண்டு, பெரிதும் போற்றுதற்கு உரியதாகும். அரசர்கள் ஆலயங்களை எழுப்பி, மானியங்கள் வழங்கியது மட்டுமன்றி, ஆன்மிக உணர்வு தழைப்பதற்குரிய பக்தி இலக்கியங்களை வளர்க்கப் பெருமளவுக்கு உதவினர். சில மன்னர்கள், கவிஞர்களாகவே மாறி, அருள் செயல்கள் தோன்றக் காரணமாய் விளங்கினர். திருமங்கை மன்னன், திருமாலிடமே நாராயண மந்திரம் பெற்று, ஆழ்வாராகி அற்புதப் பாசுரங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே, ராமபக்தியில் திளைத்திருந்த மன்னன் குலசேகரன், குலசேகராழ்வார் ஆகி, உயரிய பாசுரங்களை அருளியதும் வரலாறு.அரிமர்த்தனப் பாண்டியனிடம், அமைச்சராக இருந்த வாதவூரர், மாணிக்க வாசகராகி அற்புதத் திருவாசகத்தைத் தமிழுலகிற்கு வழங்கினார். அண்மை நுாற்றாண்டுகளில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் சரபோஜி, புலவர்களை ஆதரித்த பெருமையுடையவன்.

புலவர் சிவக்கொழுந்து தேசிகர், பூபாலக் குறவஞ்சி எழுதிப் புகழ் பெற்றார்.இரண்டாம் குலோத்துங்கனின் முதல் அமைச்சராக இருந்த சேக்கிழார், தமிழகம் பெருமை கொள்ளத் தக்க பெரிய புராணத்தை வழங்கினார்.தமிழையும், தமிழகச் சமயத்தையும் வளர்த்த காரணத்தால், அதியமான் நெடுமான் அஞ்சியை, சிவனுக்குச் சமானமாகப் பாடி, அவ்வையார் பெருமை சேர்த்தார்.

சிற்றரசருக்கு நிகரான செல்வமுடைய சடையப்ப வள்ளல், கம்பரை ஆதரித்த காரணத்தால், கம்பராமாயணம் என்ற ஆன்மிகக் காவியம் நமக்கு கிடைத்தது.நவரத்தினக் கற்கள் ஆந்திராவில், கிருஷ்ண தேவராயரின் பக்தி மிகுந்த பேரரசில், எட்டு புலவர்கள் இருந்தனர் என்பதும், 'அஷ்டதிக் கஜங்கள்' என அழைக்கப்பட்டதும், பெருமைக்குரிய செய்திகள் ஆகும்.

மராட்டியத்தில் கோலோச்சிய, சத்ரபதி சிவாஜி, சென்னை தம்புச் செட்டித் தெரு, காளிகாம்பாளை தரிசித்து சென்றதாக, ஆலயக் குறிப்பு கூறுகிறது.மகாபாரதத்தில் வனவாசம் முடித்த பாண்டவர்கள், துர்கையை வழிபட்ட பிறகே குருஷேத்திரப் போருக்குப் புறப் பட்டனர் என்பதை, வில்லி பாரதம் கூறுகிறது. துர்கை ஆலயத்தைச் சேர்ந்த வன்னிமரப் பொந்துகளில், ஆயுதங்களை வைத்து வழிபட்டனர்.

அதுவே பின், ஆயுத பூஜை, விஜயதசமி என வழக்கில் வந்தது என்பதும் நினைவு கூரத்தக்கது. ராமாயணத்தில், அகத்தியர் உபதேசித்த, ஆதித்ய ஹிருதயம் என்ற சூரிய வழிபாடு, ராமனுக்கு வெற்றி தேடித் தந்தது என்பதும் உண்மை.நம் தேசத்தில் ஆட்சியில் இருந்த முகலாயர்களும், பக்தியுடையவர்களாக இருந்துள்ளனர். திப்பு சுல்தான், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு யானை அளித்ததும், அக்பர், தம் ஆட்சியில், ஹிந்துக்கள் மீது விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்து, மத நல்லிணக்கத்திற்கு உதவியதும், அரசியலார் ஆன்மிகத்திற்குச் செய்த நன்மைகளாகும்.

குறுநில மன்னரை போல வாழ்ந்த, சீதக்காதி, திருச்செந்துார் ஆலயத் திருப்பணிக்காக, நவரத்தினக் கற்களை அனுப்பி வைத்தார் என்பதும் பெருமைக்குரியது.ஆங்கிலேயர்களும், ஹிந்து மத ஆலயங்களுக்கு உதவி புரிந்துள்ளனர். அவர்களுடைய அடிப்படைக் கோட்பாடுகள் இறையுணர்வு, கல்வி, மருத்துவ உதவி என்பனவாகும். இதைத் திட்டமிட்டுச் செயலாற்றியதால், வணிகத்திற்காக வந்தவர்கள் தேச முழுதையும் ஆட்சி செய்தனர்.

சர் தாமஸ் மன்றோ என்ற ஆங்கிலேய கவர்னர் பற்றி, ஒரு சுவையான செய்தி உண்டு. மகான் ராகவேந்திரரின் அடியார்களுக்கு சொந்தமான மாஞ்சோலி நிலத்தை, ஆங்கில அரசு கையகப்படுத்தத் திட்டமிட்டது.கவர்னர் பதவிக்கு கீழ்நிலையில் இருந்த மன்றோ, நிலத்தை பார்வையிடச் சென்றபோது, ராகவேந்திரர் காட்சி அளித்து மறைந்ததாகவும், வியப்படைந்த மன்றோ, 'கையகப் படுத்த அவசியமில்லை' என்று குறிப்பெழுதி விட்டு கோடை விடுமுறைக்குத் தாயகம் சென்றார் எனவும் சொல்லப்படுகிறது.

கோடை விடுமுறைக்குப் பின், அவர் கவர்னராக பதவி உயர்வு பெற்று, தம் ஆசனத்தில் அமர்ந்தார். அங்கே இருந்த முதல் கோப்பு, கீழ்நிலை அதிகாரியாக, மன்றோ குறிப்பு செய்த, மாஞ்சோலி கையகப்படுத்தல் பற்றிய கோப்பாகும். மிக்க மகிழ்ச்சியுடன், தம் குறிப்பைத் தாமே அங்கீகரித்தார்.


சிறப்பான உதவி


ஆங்கிலேயர் ஆட்சி அகன்ற பிறகு, பல சிலைகள் அகற்றப் பட்டாலும், மன்றோ சிலை இன்றும் கம்பீரமாக, குதிரை மேல் இருப்பதை காணலாம்.அதுபோல, மதுராந்தகம் ஏரி பெருக்கெடுத்து, ஊர் முழுதும் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. அப்போது ஆங்கிலேய ஆட்சியராக இருந்தவர் கர்னல் பிளேஸ் துரை, நிலைமையை ஆய்வு செய்ய, ஏரி பகுதிக்குச் சென்றபோது, கையில் வில்லுடன், இரு தெய்வ வடிவினர் காவல் காத்து நின்றதைக் கண்டார்.

காலையில் வெள்ளம் கட்டுக்கடங்கி, ஆபத்து ஏதும் நேரவில்லை. இதுபற்றி அரசிதழிலும் குறிப்பு உள்ளது. மதுராந்தகம் ஆலயத் தாயார் சந்ததியை அவர் புதுப்பித்து உதவினார். இதுபற்றிய கல்வெட்டும் அங்கே உள்ளது.சரித்திரங்களைக் கடந்து, சம காலத்திற்கு வரும் போது, ஜெயலலிதா ஆட்சியில், அப்போதைய அறநிலையத் துறை, ஏராளமான ஆலயக் குட முழுக்குகளை நடத்தியது. சிறிய கோவில்களுக்கு நித்திய ஆராதனைக்கான திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது.

கோவில்களில் அன்னதானத் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. தற்போதைய ஆட்சியாளர்களும், அத்தி வரதர் ஆலய தரிசன பாதுகாப்பிலும், தஞ்சை பெருவுடையார் ஆலயக் குடமுழுக்கிலும் சிறப்பான உதவிகளை புரிந்துள்ளனர். நம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், ஆன்மிகப் பணிகளுக்குத் தடை ஏதும் ஏற்படாமல், அரசியலார் பாதுகாத்து வருகின்றனர். இது சிறப்பாகத் தொடரும் என்பதில் ஐயமில்லை.

- இன்னும் வரும்

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkateswaran Murugandi - Chennai,இந்தியா
24-ஜூலை-202018:23:35 IST Report Abuse
Venkateswaran Murugandi பாரதத்தின் ஆன்மீகமும் - வாழ்வியல் நெறிகளும் பண்பாடுகளும் கேள்வியும் தேடலும் :- பல வருடங்களுக்கு முன்னர் என் மனதில் மனித உடற்கூறு பற்றிய தோன்றிய சிந்தனையைப் பற்றி புத்தியானது சிறிய ஆராய்ச்சியில் ஈடுபட்டது. உதாரணமாக , நமது இதயத்தின் செயல்பாட்டையும் பார்க்கும்பொழுது ஒரு Compressor மோட்டார் உடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது. அதன் முக்கியத்துவத்தைப் பார்க்கும்பொழுது திகைப்பாக (பிரமிப்பாக) இருந்தது. நுரையீரல் , செரிமான அமைப்பு (Digestive tem) , மூட்டுகளின் வடிவமைப்பும் இயக்கமும் சுரக்கும் மசகு நீர், கண்களும் , காதுகளும், தசைகளும், எலும்புகளும் மற்றும் மூளையும் இவைகளின் இருப்பின் தேவையையும் செயல்பாட்டையும் பார்க்கும்பொழுது நமக்கு திகைப்பாகவே இருக்கின்றது. அச்சோவே ஆனால், "நான்" என்கின்ற எனக்கு இந்த உள்ளுறுப்புகளின் இயக்கம் அதன் உருவாக்கம் பற்றிய விஞ்ஞான அறிவு இல்லை. ஆனால், என் உடம்பில் இவையெல்லாம் உருவாகி அமைந்து இயங்குகிறதே . இப்போ நமக்கு ஒரு முக்கியமான கேள்வி எழுகின்றது. நானும் என் உடம்பும் வெவ்வேறா? அல்லது ஒன்றா? இஃது எங்கனம் அமையப் பெற்றது ? "நான்" தான் இந்த "உடம்பு" என்றால் , இந்த "உடம்பு" இந்த உடம்பின் உறுப்புகள், அங்கங்கள் மற்றும் ஒவ்வோர் செல்லின் (Cell) உருவாக்குதலும் இயக்கமும் பற்றிய விஞ்ஞான அறிவு கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், உண்மையில் அறிந்திருக்கின்றதா இந்த "உடம்பு"?. ஆம் என்றால், "நான்" ஐ விட "உடம்பு" மிகவும் அறிவுடையதாகின்றது. ஏனென்றால் அதற்கு (உடம்புக்கு ) அதன் உறுப்புகளையும் அங்கங்களையும் உருவாக்காத தெரிந்திருக்கின்றது. இது உண்மையா? இல்லையென்றால், "நான்" னும் இந்த "உடம்பும்" வெவ்வேறா?.அப்படியென்றால், இந்த "நான்" னும் "உடம்பும்" எங்கனம் இணைந்தது? ஏன் இணைந்தது? இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பன போன்ற கிளை மற்றும் துணைக் கேள்விகளும் எழுகின்றன . எப்படிப் பார்த்தாலும் இந்த "நான்" என்பது யார்? என்ற கேள்வி எழுகின்றது. நவீன விஞ்ஞானம் இந்த கேள்விகளுக்கு விடை இன்று வரை அளிக்கமுடியவில்லை. பிரபஞ்சவியல் என்பது சூப்பர் செட் (Super set) . இயற்பியல் வேதியியல், உயிரியியல் etc., என்பன சப் செட் (Sub set) . Sub-set always represent a study of a particular subject. இப்படிப்பட்ட சப் செட் களை கொண்டு அதனுடைய சூப்பர் செட் ஐ மாசில்லாமல் விளக்க முடியுமா? (Express)? ஆனால், நமது "ஆதி விஞ்ஞானம் " (Hindu Ancient Science) விடையளிக்கின்றது. அதுதான் "யோகம் " என்னும் விஞ்ஞான போதம்.
Rate this:
Cancel
srinivasan - chaennal,இந்தியா
24-ஜூலை-202007:37:40 IST Report Abuse
srinivasan Even though they are English men they had faith in Ram ,Raghavra whereas people here don't have that faith ,but criticizing the others faith. They will never see God in their entire 7 births
Rate this:
Cancel
24-ஜூலை-202006:01:58 IST Report Abuse
ஆப்பு இங்கே ஆன்மீகமாய் பக்தர்கள் காத்திருக்க, ராம லஷ்மணர்கள், மற்றும் ராகவேந்திரர் ஆங்கில துரைமார்களுக்கு மட்டும் காட்சி தந்தது தான் என்னே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X