தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய பைசல் பரீதுக்கு கைது, 'வாரன்ட்'

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

திருவனந்தபுரம் : கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய, பைசல் பரீத் வீட்டு சுவற்றில், கைது, 'வாரன்ட்' உத்தரவை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று ஒட்டி சென்றனர்.

மேலும், தற்கொலைக்கு முயன்ற போலீஸ் வீட்டில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயருக்கு, துபாயில் இருந்து வந்த பார்சலில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது. இதில் தொடர்புடைய, முன்னாள் துாதரக ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார் மற்றும் சந்தீப் நாயர் ஆகியேரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், கைது செய்தனர்.

துபாயில் வசித்து வரும், மற்றொரு குற்றவாளியான, கேரளாவை சேர்ந்த பைசல் பரீத் என்பவரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை, விரைவில் கேரளா கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், திருச்சூர் மாவட்டம், காய்ப்பமங்கலம் என்ற இடத்தில், பைசல் பரீத்துக்கு சொந்தமான வீடு உள்ளது. இதில், பைசலின் பெற்றோர் வசித்து வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், மகனுடன் வசிப்பதற்காக துபாய் சென்றனர். அது முதல், வீடு பூட்டிய நிலையில் உள்ளது.பைசலின் தந்தையான பரீத், 'கொரோனா' தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம், துபாயில் காலமானார்.

இந்நிலையில், பைல் பரீதின் வீட்டு சுவற்றில், என்.ஐ.ஏ., அதிகாரிகள், பைசல் பரீதுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள கைது வாரன்ட்டை ஒட்டினர்.அந்த வீட்டில், சுங்கத்துறை அதிகாரிகள், சமீபத்தில் சோதனை நடத்தினர். அங்கிருந்து, ஒரு கணினி மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். இதற்கிடையே, சமீபத்தில் தற்கொலைக்கு முயன்ற, துாதரக பாதுகாப்பு போலீஸ் ஜெய கோஷ் வீட்டில், சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.ஜெய கோஷ் மற்றும் அவரது உறவினர்களின் வங்கி கணக்கு மற்றும் சொத்துக்களின் விபரங்களையும், அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். தற்கொலைக்கு முயன்ற போலீஸ் ஜெய கோஷிடம் நடத்திய விசாரணையில், ஸ்வப்னா சுரேஷின் உத்தரவின் பேரில், துாதரக பெயருக்கு வந்த பார்சல்களை, விமான நிலையத்தில் இருந்து, பலமுறை பெற்று வந்து கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, அவர் பணியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.சட்டசபை கூட்டம் ரத்துநிதி மசோதாவை தாக்கல் செய்வதற்காக, கேரள சட்டசபை, வரும், 27ல் கூடுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, தங்க கடத்தல் விவகாரத்தை எழுப்பவும், அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும், காங்., தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணி முடிவு செய்தது. இந்நிலையில், கேரள அமைச்சரவை கூட்டம், நேற்று நடந்தது. அதில், மாநிலம் முழுவதும், 'கொரோனா' தொற்று எண்ணிக்கை அதிகரிக்க துவங்கி உள்ளதை அடுத்து, சட்டசபை கூட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது

நம்பிக்கை இல்லா தீர்மானத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையிலான அரசுக்கு, கூட்டணி கட்சிகளின் ஆதரவு கிடைக்காது என்ற பயத்தில், சட்டசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக, காங்., குற்றம்சாட்டியுள்ளது.

சிவசங்கரனிடம் விசாரணை : தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ஸ்வப்னா, சரித் மற்றும் சந்தீப் ஆகியோருடன், கேரள முதல்வரின் முதன்மை செயலரும், தகவல் தொழில்நுட்ப துறை செயலருமான சிவசங்கரனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கடந்த வாரம், சுங்கத்துறை அதிகாரிகள், இவரிடம், ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், திருவனந்தபுரம், பேரூர்கடா என்ற இடத்தில் உள்ள, போலீஸ், 'கிளப்'பில், சிவசங்கரன் நேற்று ஆஜரானார். அவரிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X