சென்னை : தனியார் ரயில் இயக்க, அகில இந்திய ரயில்வே தொழில்நுட்ப கண்காணிப்பாளர்கள் சங்கம், எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் சண்முகம், ரயில்வேக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதம்:ரயில்களை இயக்க, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், தனியார் நிறுவனங்களே கட்டணத்தை நிர்ணயிக்கும்; ரயில் பெட்டி களையும் தனியார் நிறுவனம், தனியாக வாங்கி கொள்ளலாம். எனவே, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், பெட்டிகள் வாங்குவது கேள்விக் குறிதான். தனியார் நிறுவனங்கள், 'ஏசி' பெட்டிகள் இணைக்கப் பட்ட ரயில்களை மட்டுமே இயக்கி, வருவாய் ஈட்ட முயற்சிக்கும்.வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் டிக்கெட் கட்டணத்தை இஷ்டத்திற்கு உயர்ந்துவர். சாமானிய மக்களுக்கு, ரயில் சேவை எட்டாக்கனியாகி விடும்.
பயணியருக்கு ரயில்வே வழங்கும் எந்த சலுகையும்,தனியார் ரயிலில் கிடைக்காது. ரயில்கள் பராமரிப்பு பணியும், தனியார் ஒப்பந்த ஊழியர்களால் செய்யப்படும்.தனியார் ரயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்; புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள், வேறு ரயில்களை இயக்க முடியாது.ரயில் பயணியர், தொழிலாளர்கள் மற்றும் ரயில்வேயின் நலன் முக்கியம். தனியார் ரயில் இயக்க அனுமதிக்கும் முடிவை, மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.