கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் விசாரணைக்கு ஆஜராக சினிமா தயாரிப்பாளருக்கு உத்தரவு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

சென்னை : போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி, பிரபல சினிமா தயாரிப்பாளருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சினிமா தயாரிப்பாளர், ஞானவேல் ராஜா தாக்கல் செய்த மனு: இதுவரை, 20 படங்கள் தயாரித்துள்ளேன். மகாமுனி என்ற படத்தை தயாரித்து, 2019 செப்டம்பரில் வெளியிட்டேன். அதற்கான தியேட்டர் உரிமையை, நீதிமணி என்பவருக்கு, 6.25 கோடி ரூபாய்க்கு வழங்கினேன். அவர், 2.30 கோடி ரூபாய் தான் அளித்தார். மீதிப் பணம் தரவில்லை. இந்நிலையில், ராமநாதபுரம் டி.எஸ்.பி.,யிடம் இருந்து, எனக்கு நோட்டீஸ் வந்துள்ளது. விசாரணைக்காக ஆஜராகும்படி, அதில் கூறப்பட்டுள்ளது.

துளசி மணிகண்டன் என்பவர் அளித்த புகாரில், நீதிமணி உள்ளிட்டோருக்கு எதிராக, ராமநாதபுரம் போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யும்படி கேட்டதால், 3 கோடி ரூபாயை துளசி மணிகண்டன் அளித்ததாகவும், பின் அந்தப் பணத்தை தராமல் நீதிமணி, மேனகா, ஆனந்த் ஆகியோர் மோசடி செய்து விட்டதாகவும், புகாரில் கூறப்பட்டுள்ளது.இந்த புகார் பற்றி, எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனந்த், மேனகாவை நான் பார்த்தது இல்லை. போலீஸ் தரப்பில் வந்த நோட்டீசுக்கு, நான் மதிப்பளிக்கிறேன். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், ஊரடங்கு காரணமாக, எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. எனக்கும் உடல் நலம் சரியில்லை.

எனவே, விசாரணையை காணொலி காட்சி வழியாக நடத்தும்படி கேட்டேன். இல்லையென்றால், வைரஸ் அச்சுறுத்தல் முடியும் வரை, விசாரணையை தள்ளி வைக்கும்படி கோரினேன். மனுவை பரிசீலிக்கும்படி, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதி இளந்திரையன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, ''இந்த மோசடியில், தயாரிப்பாளருக்கு தொடர்பில்லை; முதல் தகவல் அறிக்கையில், அவரது பெயரும் இல்லை,'' என்றார்.போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி, ''மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தான், தயாரிப்பாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

''அவரிடம் விசாரித்தால் மட்டுமே, இவ்வழக்கில் முன்னேற்றம் ஏற்படும்,'' என்றார். இதையடுத்து, ஆக., 7ல், ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில், ஞானவேல்ராஜா ஆஜராகும்படி, நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X