ராஜஸ்தான் காங்., ஆட்சி கவிழ்ப்பு இழுபறி நீடிப்பு!

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
sachin pilot, ashok gehlot, Rajasthan Political Crisis, Rajasthan, Supreme Court

புதுடில்லி : 'ராஜஸ்தானில், சச்சின் பைலட் உள்ளிட்ட, 19 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்ய வேண்டும்' என்ற, சபாநாயகரின் கோரிக்கையை ஏற்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 'இந்த விவகாரத்தில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம்; எனினும், அந்த தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது' என, நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ராஜஸ்தானில், முதல்வர், அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர், கெலாட்டுக்கு எதிராக, சச்சின் பைலட் போர்க்கொடி துாக்கினார். இதையடுத்து, அவரது துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு:

இதையடுத்து, 'சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, காங்கிரஸ் கொறடா அளித்த புகாரின்பேரில், 19 பேருக்கும் விளக்கம் கேட்டு சபாநாயகர், சி.பி.ஜோஷி, 'நோட்டீஸ்' அனுப்பினார். இதை எதிர்த்து, 19 பேரும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.மனுவில்,'ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக, தாங்கள் எந்த செயலையும் செய்யவில்லை. அதனால், சபாநாயகர் அனுப்பியுள்ள நோட்டீசை, ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின், இரண்டு நீதிபதிகள் அமர்வு, தீர்ப்பை, 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், 24ம் தேதி வரை, 19 பேர் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்க, சபாநாயகருக்கு தடை விதித்தது.


மேல்முறையீடு:

ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து, சபாநாயகர், சி.பி.ஜோஷி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவில், 'சபாநாயகர்அதிகாரத்தில், யாரும் தலையிட முடியாது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, சட்ட விரோதமானது. அதனால், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், எந்த உத்தரவையும் பிறப்பிக்க, உயர் நீதிமன்றத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில், சச்சின் பைலட் தாக்கல் செய்த, 'கேவியட்' மனுவில், 'சபாநாயகர், சி.பி.ஜோஷி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக, எங்கள் தரப்பு கருத்தை கேட்காமல், தீர்ப்பு அளிக்கக் கூடாது; வழக்கில் என்னையும், ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்' என, கூறியிருந்தார்.


யாரும் தலையிட முடியாது:

இந்நிலையில், சபாநாயகர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள், அருண் மிஸ்ரா, கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று நடந்தது. சபாநாயர், ஜோஷி சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியதாவது:

எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம், சபாநாயகருக்கு மட்டுமே உள்ளது. இதில் யாரும் தலையிட முடியாது. இது நீதித்துறையின் வரம்பில் வராது. தகுதி நீக்கம் குறித்து எந்த முடிவும் எடுக்காத நிலையில், நீதிமன்றம் தலையிடவும் கூடாது. இவ்வாறு, கபில் சிபல் கூறினார். அப்போது, நீதிபதிகள், 'எந்த காரணத்திற்காக, 19 எம்.எல்.ஏ.,க்கள் மீது, தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என கேள்வி எழுப்பினர்.

அதற்கு கபில் சிபல் கூறியதாவது:கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல், 19 எம்.எல்.ஏ.,க்களும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டனர். தங்கள் கட்சியின் அரசை கவிழக்க முயற்சிக்கின்றனர். அவர்கள், ஹரியானாவில் ஓட்டலில் தங்கியுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, 'டுவிட்டரில்' தொடர்ந்து பதிவு செய்கின்றனர்.

'டிவி' சேனல்களுக்கு பேட்டி தருகின்றனர். இத்தருணத்தில், தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து, நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. சபாநாயகர் முடிவெடுக்கும் வரை, எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இவ்வாறு, கபில் சிபல் கூறினார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:இந்த விவகாரம் சாதாரணமானதல்ல. எம்.எல்.ஏ.,க்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதால், எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா; கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது, கட்சி விரோத நடவடிக்கையாக கருத முடியுமா... ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து, முக்கிய கேள்வி எழுந்துள்ளது.


தகுதி நீக்க நோட்டீஸ்:

சபாநாயகர் மூலம் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி, எதிர்ப்பு குரல்களை அடக்குவது சரியா... சபாநாயகர் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியுமா என்பதை தான், நாங்கள் விசாரிப்போம்; சபாநாயகர் நல்லெண்ணத்துடன், செயல்பட்டாரா, தீய எண்ணத்துடன் செயல்பட்டாரா என, விசாரிக்க போவதில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம். எனினும், அந்த தீர்ப்பு, இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் கூறினார்.

வழக்கு விசாரணை, 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சச்சின் பைலட் உட்பட, 19 எம்.எல்.ஏ.,ககள், தகுதி நீக்க நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்துள்ள வழக்கில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், இன்று காலை, 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.


ஊழல் புகார்: ஷெகாவத்திடம் விசாரிக்க உத்தரவு

ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூரில் சஞ்சீவானி கடன் கூட்டுறவு சொசைட்டி உள்ளது. இதில், 900 கோடி ரூபாயக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக, கடந்த ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது. இந்த முறைகேடு பற்றி, சிறப்பு போலீசார் விசாரணைக்கு, மாநில அரசு உத்தரவிட்டது. போலீசார், கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 23ல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஊழல் வழக்கில், மத்திய அமைச்சர், பா.ஜ.,வை சேர்ந்த கஜேந்திர சிங் ஷெகாவத், அவரது மனைவி உட்பட, பலரின் பெயர்களை போலீசார் சேர்ந்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஷெகாவத்தின் பெயரை போலீசார் சேர்த்திருந்தனர்.

இதற்கிடையில், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், குலாம் சிங், லாபூ சிங் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், 'சஞ்சீவானி கடன் கூட்டுறவு சொசைட்டியில் நடந்த முறைகேடுகளுக்கு காரணமான நிறுவனங்களுக்கும், ஷெகாவத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால், இந்த முறைகேடு பற்றி, ஷெகாவத்திடம் விசாரிக்க வேண்டும்' என, கூறியிருந்தனர். இந்த மனுவை, மாஜிஸ்திரேட் நிராகரித்தார்.

இதை எதிர்த்து, இருவரும், மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த, மாவட்ட கூடுதல் நீதிபதி, பவன் குமார், ஷெகாவத்தை விசாரிக்க கோரி, இருவரும் தாக்கல் செய்த மனுவை, ஊழல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு போலீசாருக்கு அனுப்ப, மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டார். ஷெகாவத்திடம் விசாரிக்க, சிறப்பு போலீசாருக்கும், நீதிபதி உத்தரவிட்டார்.


மத்திய அரசையும் சேர்க்க கோரிக்கை:

'தகுதி நீக்க நோட்டீசை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், மத்திய அரசையும் சேர்க்க வேண்டும்' என, கோரி, சச்சின் பைலட் உட்பட, 19 எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், 'தகுதி நீக்க நோட்டீஸ் விவகாரத்தல், அரசியல் சட்டத்தின், 10வது 'ஷெட்யூல்' பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்கில் மத்திய அரசையும் சேர்த்து, அதன் கருத்தையும் கேட்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இதே போன்ற ஒரு மனுவை, உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
25-ஜூலை-202013:38:18 IST Report Abuse
தல புராணம் அவர்களை பாஜக விலைக்கு வாங்கலாம். அது மட்டும் தான் சரி..
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202010:39:11 IST Report Abuse
SAPERE AUDE கட்சி தாவலை நிறுத்த அவசர அவசரமாக கொண்டுவந்த சட்டமே நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள மக்கள் சுதந்திர சிந்தனைக்கு எதிராது என்று பல சட்டவல்லுனர்களின் கருத்து. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சபாநாயகர் ஏதோ ஒருகாரணத்தைக்கூறி சட்டசபையிலிருந்து வெளியேற்றுவது மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை மறுப்பதாக உள்ளது.இந்த சந்தேகத்தை நீதிபதிகள்தான் விளக்கவேண்டும்.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
24-ஜூலை-202010:30:53 IST Report Abuse
Sridhar கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்றால், கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்யலாமே? ஏன் சபாநாயகரிடம் செல்லவேண்டும்? சட்டப்பேரவை நடவடிக்கைகள் மட்டுமே சபாநாயகர் உரிமைக்குள் வரும். சட்டசபை கூட்டப்படாத நிலையில் வெறும் கட்சி கூட்டத்திற்கு செல்லவில்லை என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை நீக்குவது கேலிக்குரியது. காங்கிகளின் வெறித்தனத்துக்கு நீதிமன்றம் நன்றாகவே அணைபோடுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X