சென்னை : தமிழகத்தில், 5,137 கோடி ரூபாய் முதலீட்டில், தொழில்கள் துவங்க உள்ள, 16 தொழில் நிறுவனங்களுடன், நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், 6,555 பேருக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மே, 27ல், பல்வேறு நாடுகளை சேர்ந்த, 17 நிறுவனங்களுடன், 15 ஆயிரத்து, 128 கோடி ரூபாய் முதலீட்டிற்கு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இத்திட்டங்களினால், 47 ஆயிரத்து, 150 பேருக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இம்மாதம், 20ம் தேதி, 10 ஆயிரத்து, 399 கோடி ரூபாய் முதலீட்டில், தொழில்கள் துவங்க உள்ள, எட்டு நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், 13 ஆயிரத்து, 507 பேருக்கு, வேலைவாய்ப்பு உருவாகும்.
இந்நிலையில், சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று முதல்வர் இ.பி.எஸ்., முன்னிலையில், 16 புதிய தொழில் திட்டங்களை, 5,137 கோடி ரூபாய் முதலீட்டில் துவக்க, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றால், 6,555 பேருக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கும்.
திட்டங்கள் விபரம்:
* செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில், 2,300 கோடி ரூபாய் முதலீட்டில், 'அதானி என்டர்பிரைசஸ்' நிறுவனம் சார்பில், தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது. இதில், 1,000 பேர், வேலைவாய்ப்பு பெறுவர்
* காஞ்சிபுரம் மாவட்டம், 'சிப்காட்' வல்லம் வடகால் தொழில் பூங்காவில், 'சூப்பர் ஆட்டோ போர்ஜ்' நிறுவனம் சார்பில், 500 கோடி ரூபாய் முதலீட்டில், ஸ்டீல் மற்றும் அலுமினியம் உதிரிபாகங்கள், தயாரிக்கப்பட உள்ளன. இதில், 800 பேர் வேலை பெறுவர்
* காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் வல்லம் -வடகால் தொழிற்பூங்காவில், 'ஏர்பிளோ எக்யூப்மென்ட்ஸ்' நிறுவனம் சார்பில், 320 கோடி ரூபாய் முதலீட்டில், போக்குவரத்து உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதில், 500 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்
* திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், 'ஏ.டி.டி., டயர்ஸ்' நிறுவனம், தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்தை துவக்க உள்ளது. இதில், 400 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்
* செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில், அமெரிக்காவை சேர்ந்த, 'விஸ்டியான்' நிறுவனம், 100 கோடி ரூபாயில், மோட்டார் வாகன மின் உதிரிபாகங்கள் உற்பத்தியை துவக்க உள்ளது
* திண்டுக்கல் மாவட்டத்தில், 'டாப் அனில் மார்க்கெட்டிங்' நிறுவனம், 100 கோடி ரூபாய் முதலீட்டில், சேமியா உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது. இதில், 1,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.
* செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில், 750 கோடி ரூபாய் முதலீட்டில், சிங்கப்பூரின், 'பிரன்ஸ்டன்' நிறுவனம், தகவல் மையம் அமைக்க உள்ளது. இதில், 100 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்
* 'பி.பி.எல்.எப்.டி.ஏ. எனர்ஜிஸ்' நிறுவனம், 500 கோடி ரூபாய் முதலீட்டில், மின்னணு வாகனத்திற்கான, 'லித்தியம் அயன் பேட்டரி' உற்பத்தி செய்ய உள்ளது. காஞ்சிபுரம் அல்லது செய்யார் பகுதியில், ஆலை அமைக்க உள்ளது. இதில், 300 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்
* 'ஸ்ரீவாரு மோட்டார்ஸ்' நிறுவனம், மின்சார பைக் உற்பத்தி திட்டத்தை, 150 கோடி ரூபாய் முதலீட்டில் துவக்க உள்ளது. இதில், 2,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.
இணையதளம் துவக்கம்!
தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்தின், www.investingintamilnadu.com என்ற புதிய இணையதளத்தை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார். முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை, முற்றிலும் பூர்த்தி செய்திடும் வகையில், துறைசார் கவனம், மண்டல தொலைத்தொடர் திட்டம், ஏற்றுமதி மேம்பாடு போன்ற சிறப்பம்சங்களை உள்ளடக்கி, இப்புதிய இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்கள்!
முதல்வர் வெளிநாடு சென்றபோது, வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக, 'யாதும் ஊரே' திட்டத்தை, அமெரிக்காவில் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் உள்ள, அமெரிக்க தொழில் முனைவோர் சங்கம் சார்பில், ஏழு தொழில்நுட்ப திட்டங்களுக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றின் விபரம்:
* அமெரிக்காவை சேர்ந்த, 'கிளவுட் எனேப்லெர்ஸ்' நிறுவனம், 35 கோடி ரூபாய் முதலீட்டில், சென்னையில் துவங்க உள்ள திட்டத்தில், 150 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்
* 'டயர் 1 நெட்வொர்க் சொல்யூசன்ஸ்' நிறுவனம், 25 கோடி ரூபாய் முதலீட்டில், சென்னையில் உணவு, வேளாண் வினியோகம் சங்கிலி திட்டத்தை துவக்க உள்ளது. இதில், 20 பேர் வேலை பெறுவர்
* 'ஸ்வைர்பே' நிறுவனம், 23 கோடி ரூபாய் முதலீட்டில், 'டிஜிட்டல் பேமென்ட்' திட்டத்தை துவக்க உள்ளது. இதில், 30 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்
* 'ப்ளிதி' நிறுவனம், 22 கோடி ரூபாய் முதலீட்டில், 'டிஜிட்டல் ஹெல்த்' திட்டத்தை, சென்னையில் துவக்க உள்ளது. இதில், 20 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்
* 'பிட்வைஸ் அகாடமி' நிறுவனம், 21 கோடி ரூபாய் முதலீட்டில், 'இ -- கல்வி' திட்டத்தை, கோவையில் நிறுவ உள்ளது. இதில், 100 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்
* 'ரேடியஸ் டிஜிட்டல்' நிறுவனம், 21 கோடி ரூபாய் முதலீட்டில், 'பிட்னஸ் அப்ளிகேஷன்ஸ்' திட்டத்தை துவக்க உள்ளது. இதில், 100 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்
* 'கன்டினியுப்' நிறுவனம், 'சாஸ் பேஸ்டு என்டர்பிரைசஸ் ரிஸ்க் ஆட்டோமேஷன்' திட்டத்தை, சென்னையில், 20 கோடி ரூபாயில் துவக்க உள்ளது. இதில், 35 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலர் சண்முகம், தொழில் துறை செயலர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE