கொரோனா நிறுவனம் தடுப்பு பணியில் ஏன் அரசியல் தலையீடு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா நிறுவனம் தடுப்பு பணியில் ஏன் அரசியல் தலையீடு

Added : ஜூலை 24, 2020
Share

கோவை:கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிறு, குறு நகைப்பட்டறைகளை மூட உத்தரவிட்டுள்ள அதிகாரிகள், பெரிய நகை தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது.கோவை மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பூஜ்ஜியம் என்றிருந்த எண்ணிக்கை, கடந்த ஒரு வார காலமாக மூன்று இலக்கங்களுக்கு எகிறியுள்ளது.இதன் காரணமாக, மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊராட்சி, காவல்துறை என அனைத்து துறை ஊழியர்களும் ஒருங்கிணைந்து, தடுப்பு பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில், அரசியல் தலையீடு காரணமாக அதிகாரிகள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. இதற்கு துடியலுார் பகுதியில் அமைந்துள்ள, நகை தயாரிப்பு நிறுவனத்தை, உதாரணமாக சுட்டிக்காட்டுகின்றனர்.இந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள், நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த, 13ம் தேதி இந்நிறுவனத்துக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.பாதிக்கப்பட்டவர்களுடன் விடுதி மற்றும் பணிபுரியும் இடத்தில் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பரிசோதனையில், கடந்த 19ம் தேதி 11 பேருக்கும், 20ம் தேதி நான்கு பேருக்கும், தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.நிறுவனம் மீண்டும் திறப்புஇந்நிலையில், தொற்று உறுதிசெய்யப்பட்ட அன்றே, (20ம் தேதி) அந்நிறுவனம் மீண்டும் வழக்கம் போல் செயல்படத் துவங்கியது. இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை எவ்வாறு அனுமதி வழங்கியது என, களத்தில் உயிரை பணயம் வைத்து சிரமப்படும் ஊழியர்கள், கேள்வி எழுப்புகின்றனர்.சுமார், 2000க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இந்நிறுவனத்தில், 186 பேருக்கு மட்டுமே இதுவரை பரிசோதனை செய்யப்பட்டு, 26 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இந்நிறுவனம், தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் அளிக்கும் புள்ளிவிபரங்களிலும், மாறுபாடுகள் உள்ளன.இது குறித்து, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:தொற்று உறுதி செய்யப்பட்டதும் நிறுவனம் மூடப்பட்டு, ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டது. விடுதியில் இருப்பவர்கள், 10 நாட்கள் தனிமையில் இருந்தனர். அவர்களை மீண்டும் பரிசோதனை செய்ததில், சிலருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு, நான்கு யூனிட்டுகள் உள்ளன. இதில், பாதிக்கப்பட்ட யூனிட்டில் பணிபுரிந்தவர்களில், 186 பேருக்கு பரிசோதனை செய்ததில், 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.தனிமைப்படுத்தப்பட்டவர்களை தவிர்த்து, பிறரை வைத்து ஒரு வாரத்துக்கு பின், நிறுவனம் திறக்கப்பட்டது; தற்போது, கலெக்டர் உத்தரவின்படி அனைத்து யூனிட்டுகளும், நேற்று (நேற்று முன்தினம்) மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.முதலில் திறக்கப்பட்ட நிறுவனம், கலெக்டர் உத்தரவுக்குப் பின், மீண்டும் மூடப்பட்டதில் இருந்தே, விஷயத்தின் விபரீதமும், தவறு நடந்திருப்பதும் தெரிகிறது. கொரோனாவை ஒழித்துக்கட்ட, அனைவரும் பாடுபடும் நிலையில், வைரசால் பாதிக்கப்பட்ட பலர் உள்ள ஒரு நிறுவனத்தை, உடனடியாக திறக்க வேண்டியதன் அவசியம் என்ன?இதன் பின்னணியில், அரசியல் நிர்ப்பந்தம் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான விசாரணை நடத்த வேண்டும்.ஏன் இந்த பாரபட்சம்?சிறு, குறு நகைப்பட்டறை தொழிலாளர்கள் கடந்த, 17 நாட்களாக பட்டறையை திறக்க அனுமதி கோரியபோது மறுத்த மாவட்ட நிர்வாகம், இத்தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியது, ஏன் என ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார், கோவை பொற்கொல்லர் கூட்டமைப்பு நிர்வாகி ஜெயேந்திரன்.அவர் கூறுகையில், ''கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட சிறு, குறு நகைப்பட்டறை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை, திறப்பதற்காக கடந்த, 17 நாட்கள் போராடி வருகிறோம். ஆனால், பெரிய தொழிற்சாலைகளில் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டும், நிறுவனங்களை இயக்க அனுமதிக்கின்றனர். கொரோனா தடுப்பு பணியில், ஏனிந்த பாரபட்சம் காண்பிக்கப்படுகிறது என்பது புரியவில்லை. இந்நிறுவனத்தில் பலருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது,'' என்றார். கோட்டாட்சியர் ஆய்வுகோவை வடக்கு கோட்டாட்சியர் சுரேஷிடம் கேட்டபோது, ''நிறுவனம் திறக்கப்பட்டதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், நேரடியாக ஆய்வு நடத்தி, மூட உத்தரவிடப்பட்டது. முழுமையாக அனைவருக்கும் பரிசோதனை எடுத்து, 'நெகடிவ்' என்பது உறுதி செய்யப்பட்ட பின்பே அனுமதிக்கப்படும்,'' என்றார்.நிறுவனத்தின் மேலாளரிடம் கேட்டதற்கு, 'நிறுவனம் மூடப்பட்டுள்ளது; நான் வீட்டில் இருக்கிறேன்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X