கொரோனாவை கொன்றொழிக்குமா தடுப்பு மருந்து; நம்பிக்கையூட்டும் ஆக்ஸ்போர்டு ஆய்வு| Dinamalar

கொரோனாவை கொன்றொழிக்குமா தடுப்பு மருந்து; நம்பிக்கையூட்டும் ஆக்ஸ்போர்டு ஆய்வு

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | |
கண்ணுக்குப் புலப்படாத கொரோனா என்னும் கொடிய நுண் கிருமி பூமிப்பந்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. மனிதகுலத்தின் இயல்பு வாழ்க்கை மாதக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது. இதுவரை 1.52 கோடி பேரை தாக்கி, 6.23 லட்சம் பேரை கொன்றிருக்கிறது இவ்வைரஸ். இன்னும் இதன் தாக்கம் ஓய்ந்தபாடில்லை. ஒழித்துக்கட்டலாம் என்றால் இதுவரை தடுப்பு மருந்துகள் இல்லை. இதை தயாரிக்கும் பணி உலகளவில் நடக்கிறது.
 கொரோனாவை கொன்றொழிக்குமா தடுப்பு மருந்து; நம்பிக்கையூட்டும் ஆக்ஸ்போர்டு ஆய்வு

கண்ணுக்குப் புலப்படாத கொரோனா என்னும் கொடிய நுண் கிருமி பூமிப்பந்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. மனிதகுலத்தின் இயல்பு வாழ்க்கை மாதக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது. இதுவரை 1.52 கோடி பேரை தாக்கி, 6.23 லட்சம் பேரை கொன்றிருக்கிறது இவ்வைரஸ். இன்னும் இதன் தாக்கம் ஓய்ந்தபாடில்லை.

ஒழித்துக்கட்டலாம் என்றால் இதுவரை தடுப்பு மருந்துகள் இல்லை. இதை தயாரிக்கும் பணி உலகளவில் நடக்கிறது. சில தயாரிப்புகள் மனிதர்களின் உடலில் செலுத்தி சோதிக்கும் அளவிற்கு வெற்றி பெற்றுள்ளன. இப்போதைக்கு இவை தான் மனித குலத்திற்கு நம்பிக்கையூட்டுகின்றன.

இவற்றில் உலகளவில் முன்னிலையில் வகிப்பது ஆக்ஸ்போர்டு பல்கலையின் ஜென்னர் நிறுவனம் மற்றும் தடுப்பு மருந்துக் குழு ஆராய்ச்சியாளர்கள் தயாரிக்கும் தடுப்பு மருந்தாகும். இருகட்ட சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன. நம்பத் தகுந்த முடிவுகள் கிடைத்திருப்பதால், உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தாக இது வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
மரபணு வரிசை


முதலில் பாதிப்பிற்குள்ளான சீனா, இவ்வைரஸின் மரபணு வரிசையை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தது. அதன் பின்னர் தான் உலக அளவில் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி அனல் பறக்க துவங்கியது. மரபணு வரிசை தெரிந்ததும், ஆக்ஸ்போர்டு பல்கலையும் மின்னல் வேகத்தில் செயல்பட்டது. தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல்வேறு முறைகள் உள்ளன. ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் கையில் எடுத்த முறை வித்தியாசமானது.சிம்பன்சி குரங்கிற்கு சாதாரண சளி, இருமலை உண்டு பண்ணும் 'அடினோ' வைரஸை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி கொரோனாவிற்கு கல்லறை கட்ட திட்டமிட்டனர்.இம்முறையில் தடுப்பு மருந்து தயாரிப்பதில் இவர்கள் ஏற்கனவே நிபுணத்துவம் பெற்றவர்கள். அதாவது, புளூ, ஜிக்கா, மெர்ஸ் (இதுவும் கொரோனா குடும்பத்தை சேர்ந்தது தான்) வைரஸ்களை ஒழித்துக்கட்ட இதே தொழில்நுட்பத்தை கையாண்டுள்ளனர்.
தடுப்பூசி உருவான விதம்


இம்முறைப்படி, ஒரு புறத்தில் சிம்பன்சி குரங்கை தாக்கும் அடினோ வைரஸை எடுத்துக்கொள்கின்றனர். அக்குரங்கிற்கு சாதாரண சளி, இருமலை உண்டு பண்ணும் இவ்வைரஸ், மனித உடலில் பாதிப்பை உண்டு பண்ணாதவாறு அதன் வீரியத்தை அறிவியல் முறைப்படி குறைக்கின்றனர். இப்படி கிடைக்கும் வீரியமற்ற அடினோ வைரஸை தான் தடுப்பூசிக்கு முக்கிய சாதனமாக பயன்படுத்துகின்றனர். இதற்கு 'சாடாக்ஸ்1' (ChAdOx1) என பெயர் சூட்டியுள்ளனர். சிம்பன்சி அடினோ வைரஸ் வேக்ஸின் வெட்டார் என்றும் அழைக்கின்றனர்.இது தயாரானதும், இன்னொரு புறம் நம்மை மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸை (சார்ஸ் கோவ் 2) எடுக்கின்றனர். இவ்வைரஸை சுற்றிலும் கிரீடம் போன்ற அமைப்பு உள்ளது. இதில் இவ்வமைப்பிற்கான புரதத்தை (ஸ்பைக் புரோட்டின்) உண்டு பண்ணும் மரபணுக்கள் உள்ளன. இப்பாகத்தை மட்டும் அப்படியே துண்டாக வெட்டி எடுக்கின்றனர். பின்னர் இது ஸ்பைக் புரோட்டினை உண்டு பண்ணும் மரபணு வரிசை தானா என்பதை கணினி கணக்கீடு மூலம் உறுதி செய்கின்றனர்.பின்னர் ஏற்கனவே தயாராக உள்ள சிம்பன்சி அடினோ வைரஸ் வேக்ஸின் வெட்டாரையும், உறுதிப்படுத்தப்பட்ட மரபணுக்கள் வரிசையடங்கிய ஸ்பைக் புரோட்டினையும் ஒன்று சேர்த்து கொரோனாவை கொல்லும் தடுப்பு மருந்தை தயாரிக்கின்றனர். இத்தடுப்பு மருந்திற்கு 'சாடாக்ஸ் என்கோவ்-19' (ChAdOx1 nCoV-19) என பெயரிட்டுள்ளனர்.இதை மனிதனின் உடலில் செலுத்திய சில நாட்களில் கொரோனாவை எதிர்த்துப் போரிடும் ஆன்டிபாடிகள் உற்பத்தியாக வேண்டும். கொரேனாா வைரஸ் தொற்றினால், இவை உடனே செயல்படத் துவங்கி வைரஸின் தாக்குதலை முறியடிக்க வேண்டும். இதை ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து கனக்கச்சிதமாக செய்யும் என்பது இருகட்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.மூன்றாம் கட்ட சோதனை நடக்கிறது. இதிலும் நிச்சயம் வெற்றி கிட்டும் என நம்பும் ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள், உலகிற்கும் ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை காட்டியுள்ளனர். சில மாதங்களில் இத்தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. இது கொரோனாவின் கொட்டத்தை அடக்குமா... காத்திருப்போம்.-த.தினேஷ்
தடுப்பு மருந்து எப்படி செயல்படும்


மனிதனை தாக்க முடியாத அடினோ வைரசுடன் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதம் இணைக்கப்பட்டு தடுப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது. இதை உடலில் செலுத்தியதும், அடினோ வைரசுடன் இணைக்கப்பட்ட கொரோனாவின் மரபணு வரிசை ஸ்பைக் புரதத்தை உற்பத்தி செய்யும். அடினோ வைரஸ் உடலில் இருப்பதால், மனிதனுக்கு தீங்கு விளைவிக்க முடியாது.கொரோனாவின் ஸ்பைக் புரதம் உற்பத்தியானதும், கொரோனா வைரஸ் தான் நுழைந்து விட்டதாக உடல் கருதும். உடனடியாக அதை தாக்கி முறியடிக்க, அதற்கான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும். இவை குறிப்பிட்ட நாட்களுக்கு நமது உடலில் இருக்கும். இக்காலக்கட்டத்தில் உண்மையிலேயே கொரோனா வைரஸ் உடலுக்குள் நுழைந்தால், ஏற்கனவே உற்பத்தியான ஆன்டிபாடிகள் தாக்குதலை தொடுத்து வைரஸை தோற்கடிக்கும் என ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.எலி, முயலுக்கு ஓகேபொதுவாக ஒரு வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதில்லை. பல்வேறு கட்ட சோதனைக்கு பிறகு தான் மக்கள் உபயோகிக்க முடியும். முதலில் எலி, முயல், குரங்கு போன்ற விலங்குகளிடத்தில் இம்மருந்து எப்படி செயல்படுகிறது என பார்க்க வேண்டும். இதில் முன்னேற்றம் தென்பட்டால், மனிதர்களிடத்தில் செலுத்தி சோதிக்க வேண்டும்.இதில் முதல் இருகட்டங்களை கடந்து 3வது கட்டத்திற்கு ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து வந்துவிட்டது.ஏப்-மே யில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. இதில் 1077 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. அடுத்த 7 நாட்கள் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுகிறதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் உண்ணிப்பாக கவனித்து பதிவு செய்தனர். இந்த ஆராய்ச்சி முடிவில் கொரோனா வைரஸை எதிர்த்து போரிடும் ஆன்டிபாடிகள் நன்றாக உற்பத்தியாவது தெரிந்தது.தற்போது தொற்றுக்கு ஆளானா வைரஸை தாக்கி அழிக்கும் 'டி செல்' உற்பத்தியும் போதியளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தடுப்பு மருந்து கிட்டத்தட்ட முழு வெற்றியை பெற்றுவிட்டதாகவே ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மூன்றாம் கட்ட ஆராய்ச்சி அமெரிக்கா, தென்ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலும் நடக்கிறது.
ரூ.797.39 கோடியை ஒதுக்கிய பிரிட்டன்


ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிரிட்டன் அரசு 84 மில்லியன் பவுண்டை (இந்திய மதிப்பில் ரூ.797.39 கோடி) ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் முதற்கட்டமாக உலகிற்கு தேவையான தடுப்பு மருந்துகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், பிரிட்டனின் ஆஸ்டிரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து மருந்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஒரே கல்லில் இரு மாங்காய்


ஆக்ஸ்போர்டு பல்கலை தயாரிக்கும் தடுப்பு மருந்து ஒரே கல்லில் இரு மாங்காய்களை அடிக்கும் வகையில் உள்ளது. இத்தடுப்பு மருந்தை ஏற்றியதும் மனித உடலில் பி, டி செல்கள் உற்பத்தியாவது தெரிந்துள்ளது. கொரோனா வைரஸை துவம்சம் செய்ய இவை இரண்டும் போதும்.* 'பி செல்' என்பது உடலின் எலும்பு மஞ்சையில் இருந்து உருவாகும். இது பிளாஸ்மாவை உற்பத்தி செய்து, அதில் கொரோனாவை எதிர்த்துப் போரிடும் ஆன்டிபாடிகளை பிரசவிக்கும். ஒரு வேளை நமது உடலில் கொரோனா வைரஸ் நுழைந்தால், உடனடியாக ஆன்டிபாடிகள் செயல்படத் துவங்கி தொற்றின் தாக்குதலை தடுக்கும்.ஒரு கட்டத்தில் தாக்குதல் தொடுக்க முடியாமல் வைரஸ் தோல்வியை தழுவும். எனவே வைரஸ் உடலில் நுழைந்தாலும் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. இந்த ஆன்டிபாடிகள் குறிப்பிட்டக் காலம் வரை உடலில் இருக்கும்.* இதே போல் 'டி செல்' தொண்டைக்கு அருகே அமைந்துள்ள தைமஸ் என்னும் உறுப்பில் உற்பத்தியாகிறது. நம் உடலில் நுழையும் கொரோனா வைரஸ், பெருக்கம் அடைய ஏதாவது ஒரு செல்லில் அடைக்கலம் புகும். இப்படி ஏதாவது ஒரு செல் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டால் உடனடியாக டி செல்கள் தங்கள் பணியை துவங்கி விடும். இவை கொரோனாவுடன் மல்லுக்கட்டுவதில்லை.மாறாக, நேரடியாக கொரோனா அடைக்கலம் புகுந்த செல்களையே நேரடியாக தாக்கி அழித்துவிடுகின்றன. அதாவது கொரோனா வைரஸை அடியோடு ஒழித்துக்கட்டி விடுகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலை இதுவரை நிகழ்த்திய ஆராய்ச்சி முடிவுகளில் இவ்விரு செல்களும் உற்பத்தியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மனித குலத்திற்கு ஒரு நற்செய்தி.- ஜெ.தெல்மா,


உதவி பேராசிரியை,


பயோடெக்னாலஜி துறை,


லேடி டோக் கல்லுாரி, மதுரை

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X