எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவி துண்டு: வில்லியனூரில் பரபரப்பு | Dinamalar

இந்தியா

எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவி துண்டு: வில்லியனூரில் பரபரப்பு

Added : ஜூலை 24, 2020
Share

வில்லியனுார்; வில்லியனுாரில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவி துண்டு போர்த்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.புதுச்சேரி அடுத்த வில்லியனுார், மூலக்கடை, பைபாஸ் நான்குமுனை சந்திப்பில் எம்.ஜி.ஆர்., சிலை உள்ளது. இந்த சிலை மீது, நேற்று, காவி துண்டு போர்த்தப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவர்கள், எம்.ஜி.ஆரை அவமதித்து விட்டதாக, மாநில அ.தி.மு.க., அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தொடர்ந்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவித்தவர்களை உடனே கைது செய்யக் கோரி, சிலை எதிரே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேற்கு எஸ்.பி., ரங்கநாதன், சப் இன்ஸ்பெக்டர் குமார் பேச்சுவார்த்தை நடத்தி, சிலைக்கு காவி துண்டு அணிவித்தவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதை ஏற்று, போராட்டத்தை கைவிட்ட எம்.எல்.ஏ.க்கள், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, சென்றனர்.மூலக்கடை பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சிலை அருகே உறங்கிய, மனநலம் பாதிக்கப்பட்ட பெண், காவி துண்டை எம்.ஜி.ஆர்., சிலைக்கு அணிவித்தது தெரிந்தது.விசாரணையில் அவர், முத்துப்பிள்ளைபாளையத்தை சேர்ந்த ராமன் மகள் சுசீலா, 40, என்பதும், இறந்துவிட்ட அவரது கணவர், தீவிர எம்.ஜி.ஆர். விசுவாசி என்பதும், சபரிமலைக்கு சென்று வந்த கணவர் வைத்திருந்த காவி துண்டை, அவரது நினைவாக சிலைக்கு அணிவித்ததும் தெரிய வந்தது.மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதால், வழக்கு பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X