சென்னை: 'இ--பாஸ்' பெறும் வழிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினிக்கு மட்டும் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் விடுதிக்கு சென்று வர 'மருத்துவ அவசரம்' என்ற காரணத்தில் பாஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்ல 'இ--பாஸ்' பெறுவது கட்டாயம். இறப்பு மிகவும் முக்கியமான மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்கு மட்டுமே இ--பாஸ் தரப்படுகிறது. சில தினங்களுக்கு முன் காரில் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் சென்ற ரஜினி இ--பாஸ் பெற்றாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

தற்போது சென்னை போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கேளம்பாக்கம் விடுதிக்கு ரஜினி காரில் சென்று வர இ--பாஸ் பெற்றுள்ளார். 'மருத்துவ அவசரம்' என காரணம் கூறி இ--பாஸ் பெறப்பட்டுள்ளது. காரை தானே ஓட்டிச் செல்லும் நிலையில் உள்ள ரஜினிக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படாத நிலையில் பொய்யான காரணத்திற்காக இ--பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு மட்டும் சலுகை தரப்பட்டுள்ளது என்பது இதன் வாயிலாக தெரிய வந்துள்ளது.