பொன்னையாற்றில் தடுப்பணை ; துரைமுருகன் கடிதம் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொன்னையாற்றில் தடுப்பணை ; துரைமுருகன் கடிதம்

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share

சென்னை : 'பொன்னையாற்றில் தடுப்பணை கட்டுவது உட்பட, மூன்று கோரிக்கைகளை, நிறைவேற்றி தர வேண்டும்' என, முதல்வருக்கு, எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:காட்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, கடலுார்- - சித்துார் இணைப்பு சாலையில், 5 கி.மீ., தொலைவிற்கு, மைய தடுப்பு சுவர் அமைக்கும் பணி, நெடுஞ்சாலை துறை வழியே நடந்து வருகிறது. கல்புதுார் முதல், தமிழக மற்றும் ஆந்திர எல்லைப்பகுதி வரை, இப்பணி நடந்து வருகிறது. தமிழக எல்லைப் பகுதியில், வாகன சோதனைச் சாவடி, வனத்துறை பாதுகாப்பு சோதனை சாவடி, வணிகவரித் துறை சோதனை சாவடி, வெடிமருந்து தொழிற்சாலை நிறுவனம் ஆகியவை இயங்கி வருகின்றன.

தென் தமிழகம் முதல், வட தமிழகம் வரை உள்ள மக்கள், திருப்பதி செல்ல, இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்கின்றனர். சென்னை தொழிற்பேட்டையில் இருந்து, ஆந்திரா செல்லக் கூடிய கனரக வாகனங்கள் மற்றும் சொகுசு பஸ்கள், இந்த சாலை வழியே சென்று வருகின்றன.தமிழக எல்லையில், இந்த சாலையை அகலப்படுத்தி, சாலையின் மையப் பகுதியில், உயர் மின் விளக்குகள், சோதனைச் சாவடிகள் அமைந்துள்ள இடங்களில், உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்துத் தர வேண்டும். இருபுறங்களிலும், பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு, நிதி ஒதுக்க வேண்டும். ஏற்கனவே, காங்கேயநல்லுார் முதல் வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை, பாலாற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்.

பொன்னையாற்றில் குகையநல்லுார் அருகே, ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என, கடிதம் வாயிலாக, கோரிக்கை விடுத்திருந்தேன்.சட்டசபையில், இரு கோரிக்கைகளையும் கேட்டதற்கு, நீங்களும் ஒப்புதல் வழங்கி உள்ளீர்கள். எனவே, என் மூன்று கோரிக்கைகளையும், மக்கள் பயன்பெறும் வகையில் செய்து தரவும்.இவ்வாறு, துரைமுருகன் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X