சென்னை : தமிழகத்தில், முதல் முறையாக, ஆபரண தங்கம் சவரன் விலை, அதிரடியாக, 39 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.
சர்வதேச நிலவரங்களால், உள்நாட்டில், தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், இம்மாதம், 22ம் தேதி, வரலாற்றில் முதல் முறையாக, 22 காரட் ஆபரண தங்கம், சவரன், 38 ஆயிரம் ரூபாயை தாண்டியது.நேற்று முன்தினம், கிராம் தங்கம், 4,847 ரூபாய்க்கும்; சவரன், 38 ஆயிரத்து, 776 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 67.40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று தங்கம் கிராமுக்கு, 38 ரூபாய் அதிகரித்து, 4,885 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 304 ரூபாய் உயர்ந்து, 39 ஆயிரத்து, 80 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, முதல் முறையாக, தங்கம் சவரன் விலை, 39 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. வெள்ளி கிராமுக்கு, 70 காசுகள் குறைந்து, 66.70 ரூபாயாக இருந்தது. இந்த வார திங்களன்று, கிராம் தங்கம், 4,702 ரூபாய்க்கும்; சவரன், 37 ஆயிரத்து, 616 ரூபாய்க்கும் விற்பனையாகின. ஐந்து நாட்களில், தங்கம் கிராமுக்கு, 183 ரூபாய்; சவரனுக்கு, 1,464 ரூபாயும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:தங்கத்தின் மீதான முதலீடுகள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வளர்ந்த நாடுகளிலும், தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.
பல நாடுகள், தங்களின் பாதுகாப்பிற்காகவே தங்கத்தை வாங்கி வருகின்றன. முதலீட்டாளர் களிடமும், தங்கம் வாங்குவதில் போட்டி நிலவுகிறது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே, பதற்றமான சூழல் நிலவுகிறது. அமெரிக்கா மீண்டும், சீனாவின் மீது பொருளாதார தடையை கொண்டு வரலாம் என்ற, எதிர்பார்ப்பும் உள்ளது. இது போன்ற காரணங்களால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE