பீஜிங் : அமெரிக்காவில், சீன துாதரகம் மூடப்பட்டதற்கு பதிலடியாக, சீனாவின் செங்டு நகரில் செயல்படும் அமெரிக்க துாதரகத்தை மூட, சீனா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பிரச்னையில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் எழுந்தது. 'கொரோனா பரவுவது குறித்த அபாயத்தை, சீனா, முன்கூட்டியே தெரிவிக்கவில்லை' என, அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதற்கு சீனா மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா, அந்த அமைப்புக்கு அளித்து வந்த நிதி உதவியையும் ரத்து செய்தது.
இந்த மோதலின் உச்சக் கட்டமாக, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செயல்பட்டு வந்த, சீன துாதரக அலுவலகத்தை மூடும்படி, சமீபத்தில் அமெரிக்கா உத்தரவு பிறப்பித்தது; அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, சர்வதேச நாடுகளிடையே அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது.'அமெரிக்க மக்களின் அறிவுசார் சொத்துரிமை, தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கத்துடன், சீன துாதரக அலுவலகங்களும், அதில் உள்ளவர்களும் செயல்படுகின்றனர். ஹூஸ்டனை தொடர்ந்து, மேலும் பல சீன துாதரகங்கள் மூடப்படும்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடியாக, சீன வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுஉள்ளதாவது:சீனாவின் செங்டு நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்க துாதரகத்தின் கிளை அலுவலகத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதி, திரும்ப பெறப்படுகிறது. உடனடியாக அந்த அலுவலகத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல், அமெரிக்க துாதரக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.சீன - அமெரிக்க உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், ஹூஸ்டனில் செயல்பட்டு வந்த, சீன துாதரக அலுவலகம் மூடப்பட்டுள்ளது;
இது, சர்வதேச துாதரக விதிமுறைகளை மீறிய செயல். அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கைக்கு, பதில் அளிக்க வேண்டிய கடமை, எங்களுக்கு உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைவதற்கு, அமெரிக்காவே முழுமையான காரணம்.அமெரிக்கா, உடனடியாக தன் தவறுகளை திருத்தி, இரு தரப்பு உறவு மேம்படுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 'விசா' மோசடிசீன ராணுவத்துடன், தங்களுக்கு உள்ள தொடர்பை மறைத்து, மோசடியாக, 'விசா' பெற்றதாக, சீனாவை சேர்ந்த நான்கு பேர் மீது, அமெரிக்க போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள சீன துாதரகத்தை பயன்படுத்தி, ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த சீன விஞ்ஞானி ஒருவர், தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடி வருவதாகவும், அமெரிக்க போலீசார் தெரிவித்து உள்ளனர். சீனாவின் அத்துமீறலும், அடாவடியும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த நாட்டுடன் உறவு பாராட்டுவதற்கு, இதற்கு மேல் எதுவும் இல்லை. சீனாவின் அத்துமீறலை அடக்குவதற்கு அல்லது எதிர்கொள்வதற்கு, ஜனநாயக நாடுகள் அனைத்தும், ஒரே அணியில் இணைய வேண்டும். மைக் போம்பியோ வெளியுறவு அமைச்சர், அமெரிக்கா
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE