வாஷிங்டன் : ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்து மற்றும் சீக்கியர்களுக்கு, அடைக்கலம் தர முன்வந்துள்ள இந்தியாவை பாராட்டியுள்ள அமெரிக்க எம்.பி., ஜிம் கோஸ்டா, அதை தங்கள் நாட்டிலும் பின்பற்ற வேண்டும் என, டிரம்ப் நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ளும், ஹிந்து மற்றும் சீக்கியர்களுக்கு, இந்தியாவில் அடைக்கலம் தர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா நேற்று முன்தினம் கூறியதாவது:ஆப்கானிஸ்தானில், சிறுபான்மையின மக்களான ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இவர்களில் பலர், இந்தியாவிற்கு வர அனுமதி கோரியுள்ளனர்; இங்கு வர விரும்புவோருக்கு, 'விசா'க்கள் வழங்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
இந்தியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்க எம்.பி., பாராட்டியுள்ளார். இதுகுறித்து, ஜனநாயகக் கட்சி எம்.பி., ஜிம் கோஸ்டா, 'டுவிட்டரில்' கூறியுள்ளதாவது:ஆப்கானில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு, அகதி அந்தஸ்து கொடுக்க, இந்தியா முடிவு செய்துள்ளதை வரவேற்கிறேன். இது முக்கிய நடவடிக்கையாகும். இதன்மூலம், பயங்கரவாதிகளிடம் இருந்து, ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் பாதுகாக்கப்படுவர். இது குறித்து, கடந்த ஏப்ரல் மாதம், வெளியுறவு துறை அமைச்சர் மைக் போம்பியோவிற்கு, ஒரு கடிதம் அனுப்பி இருந்தேன்.
அதில், ஆப்கன் ஹிந்து மற்றும் சீக்கிய குடும்பங்களுக்கு அமெரிக்காவில் அகதி அந்தஸ்து தருமாறு வலியுறுத்தி இருந்தேன். இனியும் தாமதிக்காமல், இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை போல், அமெரிக்காவிலும் எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE