சென்னை, : புதுச்சேரி கவர்னராக, தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகி நியமிக்கப்படலாம் என்ற தகவல், அரசியல் வட்டாரத்தில் வலம் வரத் துவங்கி உள்ளது.
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும், ஏழாம் பொருத்தமாக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, பட்ஜெட் தாக்கல் என, அனைத்து விஷயங்களிலும், இருவருக்கும் இடையே, மோதல் அதிகரித்தபடி உள்ளது. கவர்னரை மாற்றும்படி, முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன் காரணமாக, கவர்னர் மாற்றப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், மத்திய பிரதேச மாநில கவர்னர், லால்ஜி டாண்டன் மறைவு காரணமாக, அங்கும் கவர்னர் பதவி, காலியாக உள்ளது.இரு மாநில கவர்னர் பதவிகளில், ஏதேனும் ஒன்றை பெற, தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகள் சிலர், முயற்சித்து வருகின்றனர். நேற்று, புதுச்சேரி கவர்னராக, பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. பின், அது வதந்தி என, தெரிய வந்தது.
இது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தமிழிசைக்கு, தெலுங்கானா மாநில கவர்னர் பதவி தரப்பட்டதில் இருந்து, தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகள் சிலர், கவர்னர் பதவிக்கு, முயற்சித்து வருகின்றனர். எனினும், கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை.புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை மாற்றும் பட்சத்தில், தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு, அப்பதவி தரப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE