சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

அரசியலும், ஆன்மிகமும்!

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
அரசியல், ஆன்மிகம், மைத்ரேயன், புலவர்கள், அரசர்கள்

கடந்த நுாற்றாண்டில் வாழ்ந்த மகான் அரவிந்தர், தொடக்கத்தில் தீவிர அரசியலில் இருந்தாலும், அலிப்பூர் சிறையில் கிடைத்த வாசுதேவ தரிசனத்தால், 1910 முதல், ஆன்மிக யோகியாக, தம் பாதையை அமைத்து கொண்டார். ஆனாலும், இந்திய அரசியல் மாற்றங்களை கவனித்து கொண்டு தான் இருந்தார்.

அவ்வாறே, அரசியல் விடுதலைக்கு பாடுபட்ட மகாத்மா, மிகக் சிறந்த ஆன்மிகவாதியாக திகழ்ந்தார். 'சக்ரவர்த்தி திருமகன்' மற்றும் 'வியாசர் விருந்து' படைத்த ராஜாஜி, 'ஆன்மிக உணர்வால் அரசியல் விவேகம் பெற முடியும்' என்றார்.மன்னர் கால ஆன்மிக சுழலுக்குள் சென்றால், ஏழாம் நுாற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரும், அப்பர் பெருமானும், மக்கள் பிணி தீர்க்க உதவியுள்ளனர் என்பது பெரிய புராணம் தரும் செய்தியாகும்.பஞ்சம் மக்களை வாட்டிய போது, இரண்டு சமயப் பெரியவர்களும், இறைவனை பாடி, பொற்காசு பெற்று, மக்களின் பசிப்பிணியை நீக்கினர். புதுச்சேரி ஸ்ரீ அன்னையின் வரலாற்றில், அவர் ஜப்பானில் இருந்தபோது, ஒரு மர்மக் காய்ச்சல் அவரை நிலை குலைய வைத்தது. நோய் தாக்கப்பட்டோர், 24 மணி நேரத்தில் உயிர் இழந்தனர். முகத்தில் காப்புத் துணியுடனும், கண்களில் பயத்துடனும் மக்கள் பதைத்தனர் .


தமிழ்த்தாய் வாழ்த்து

நகர நிர்வாகம், செய்வது அறியாது திகைத்தது. அப்போது, ஸ்ரீ அன்னை, அந்த நோயை தனக்கு வரவைத்து, நோயுடன் போராடி, வெற்றி பெற்றார்; நகரை விட்டே அந்நோய் ஓடிப் போனது.

இது போலவே, திருஞானசம்பந்தர் வரலாற்றிலும் ஒரு செய்தி உள்ளது. அவர் கொங்கு நாட்டில் தங்கியிருந்த போது, கடும் பனி நிலவியது. பலர் குளிர் ஜுரத்தால் துன்பப்பட்டனர். இதை, ஞானசம்பந்தர் அறிந்தார்.'இது நிலத்தின் இயல்பாலும், பருவ காலத்தாலும் ஏற்படுவது. மன்னர் செய்வதற்கு ஏதுமில்லை' என்று சொல்லி, திருநீலகண்டப் பதிகம் பாடினார். 'சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்.செற்று எமைத் தீவினை தீண்டப் பெறா; திருநீல கண்டம்'என, பத்துப்பாடல்கள் பாடினார்; குளிர் சுரம் கொங்கு நாட்டை விட்டே ஓடியது.

எட்டாம் நுாற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், சொந்தத் தேவைக்காக நெல் கேட்டார். திருவாரூர் வீதிகளில் எல்லாம் நெல் மலையாகக் குவிந்தது. அவரவர் வீட்டு முன் உள்ள நெல் குவியலை அவரவர் எடுத்துக் கொள்ளச் சுந்தரர் வேண்டினார். ஏழு மழை காலம் முழுதும் மக்கள் உணவுப் பஞ்சம் இன்றி இருந்தனர்.

கடந்த, 12ம் நுாற்றாண்டில் சோழனின் அமைச்சராக இருந்த சேக்கிழார், சிற்றின்ப இலக்கியங்களில் அரசன் ஈடுபட்டதை மாற்ற, அறிவுரை வழங்கி, நாயன்மார்களின் சிவநெறிக் கதைகளைக் கூறி நல்வழிப்படுத்தினார்.

'விநாயகர் அகவல்' பாடிய அவ்வை மூதாட்டி, பாரி என்ற குறுநில மன்னருக்கு எதிராக மூவேந்தரும் படை திரட்டியபோது, இடித்துரைத்தார். அதே சமயம், சோழ நாட்டு நீர் நிலைகள் வறண்ட போது, 'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என பாடி, மழையை வரவழைத்துப் பஞ்சத்தைப் போக்கினார்.

தன் காலத்து புலவர்களையும், கவிவாணர்களையும் பொன்னும் மணியும் கொடுத்து, தன் அவையில் கூட்டி, தன்னைப் பாடுமாறு நிர்ப்பந்தித்தார் ஒரு மராட்டிய மன்னர்.'நிதி சாலசுகமா, ராம சன்னிதி கால சுகமா' என, செல்வத்தின் நிலையாமையை அரசருக்கு கூறினார் தியாகராஜ சுவாமிகள். அக்கால மன்னர்கள், தங்கள் ஆட்சியைப் புலவர்கள் பாட வேண்டும் என விரும்பினர்.

ஆனால், பூதப்பாண்டியன் என்ற அரசன், வித்தியாசமாகச் சிந்தித்தான்.'என் ஆட்சி நேர்மையற்று இருக்குமானால், மாய்குடி மருதன் போன்ற புலவர்கள் என்னைப் பாடா தொழிக' என்றான். இது, பூதப்பாண்டியன் வஞ்சினம் எனக் கூறப்படுகிறது.

முடிசூட இருந்த ராமனுக்கு நீதிகளை எடுத்துச் சொன்ன வசிஷ்டர், 'சாதுக்களாகிய அடியோர்களை பாதுகாத்து உன் கீர்த்தியை பெருக்கிக் கொள்' என்றார்.

செண்பக பாண்டியன் ஆட்சி காலத்தில், தலைமை புலவராக இருந்த நக்கீரர், கற்கிமுகி என்ற பூதத்தால் சிறை வைக்கப்பட்ட போது, ஏற்கனவே பிடிபட்டிருந்த மக்களையும், திருமுருகாற்றுப்படை பாடி காப்பற்றினார்.

பின்னால் வந்த மகாகவி பாரதியார், தேச விடுதலைக்கான பாடல்களை பாடினார். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தின் போது, 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்ற, நாமக்கல் கவிஞரின் பாடலே, வழி நடைப் பாடலாக பாடப்பட்டது.

ரவீந்திரநாத் தாகூரின் பாடல் தான், தேசிய கீதமாக போற்றப்படுகிறது. தமிழகத்தில், மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை பாடிய, 'நீராரும் கடல் உடுத்த' என்ற பாடல், தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்படுகிறது.

அரசர்கள், கவிஞர்களை போற்றும் மரபின்படியே, 'அரசவைக் கவிஞர்' என்ற சிறப்பு சில கவிஞர்களுக்கு கிடைத்தது.ஆன்மிக நெறி சார்ந்த சமய சான்றோரும், பின்னர் வந்த கவிஞர்களும், அரசாட்சிக்கு துணையாக மக்கள் பணியில் ஈடுபட்டனர். அதனால், அரசாங்கமும் அவர்களை பாராட்டியது.

நான் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வருகிறேன். அரசியலும், ஆன்மிகமும் ஒன்றையொன்று சார்ந்து விளங்குவது, நம் பாரம்பரிய பெருமைகளில் ஒன்றாகும்.ஒரு தேசத்தின் பாதுகாப்பை போலவே, உள்நாட்டு அமைதியும் முக்கியமானது. ஒரு வீட்டில் இருக்கும் நோயாளியின் வேதனையால், வீட்டில் இருக்கும் மற்றவர், மன அமைதி பாதிக்கப்படுவது போல, தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களால், ஒரு மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படும்.


அலட்சியம் காட்ட முடியாது


போராட்டங்களுக்கான களங்களை ஏற்படுத்தி விட்டு, தலைவர்கள் அமைதியாகி விடுவர்; தொண்டர்கள் அடிபடுவர். மத சம்பந்தமான கிளர்ச்சிகளை ஒரு அரசு, மிகக் கவனத்துடன் அணுக வேண்டியிருக்கும். இதில் அவசரமோ, அலட்சியமோ காட்ட முடியாது.

கருத்து கூறுவது ஜனநாயக உரிமை என்றாலும், எரியும் வீட்டின் மீது எண்ணெய் ஊற்றுவது போல, பின்விளைவுகளை ஏற்படுத்தும் கருத்துகளை கூறாமல் இருப்பது முக்கியமாகும்.

ஒரு விளையாட்டில், இரண்டு கட்சிகள் இருப்பது போலவே, எந்த ஒரு கருத்துக்கும், இரண்டு கட்சிகள் ஏற்பட்டு விடுவது இயல்பு. இதை முடித்து வைக்க வேண்டிய அரசு, ஒரு கட்சியை ஆதரித்தால் போராட்டங்களுக்கு முடிவே இல்லாமல், அமைதியற்ற சூழ்நிலையே தொடரும்.

பண்டைய காலத்தில், பறம்பு என்ற நாட்டின் அரசன் வேள்பாரிக்கும், சோழனுக்கும் பிரச்னை. பாண்டியனோ, சேரனோ சமாதானப் படுத்தி இருக்கலாம். அதை விட்டு, ஒரு சிற்றரசனுக்கு எதிராக, அவர்களும் களத்தில் குதித்தபோது, அவ்வையார் தலையிட வேண்டி வந்தது. இங்கே, ஆன்மிகத்தின் சக்தி வெளிப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஒரு சாதாரண பஞ்சாயத்து உறுப்பினர் கூட, அவரது அதிகாரத்தை காட்ட நினைத்தால், ஊரில் அமைதி கெடும். ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன், தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன், பேரரசர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்தான்.சிதம்பரத்தில் பூட்டப்பட்டிருந்த அறைக்குள் இருந்து, திருமறைச் சுவடிகளை மீட்ட பெருமை, அவனுக்கு உண்டு. பெரிய கோபுரம், பெரிய சிவலிங்கம், பெரிய நந்தி என, 'பெரிதினும் பெரிது கேள்' என வாழ்ந்த, அரசனை இன்றும் நினைத்து போற்றுகிறோம்.

அரச பிரதானிகளை தேர்ந்தெடுக்க, ஜனநாயக முறையில் குடவோலை முறையை கொண்டு வந்தது, சோழப் பேரரசு. தமிழகத்திற்கு ஒரு பெருமை என்ன என்றால், எந்த அரசு ஆட்சி செய்தாலும், ஆன்மிகச் சிந்தனைகளுக்கோ, ஆலயங்களுக்கோ எந்த ஆபத்தும் ஏற்பட்டது இல்லை.

எம்.ஜி.ஆரின் அரசு, ஆன்மிக அரசாகவே செயல்பட்டது. தமிழக அரசின் முத்திரையில், ஆலயக் கோபுரம் தொடர்ந்து இடம் பெற்றிருக்கிறது.

கருணாநிதி ஆட்சியில் தான், பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த, திருவாரூர் தேர் செப்பனிடப்பட்டு, தேரோட்டம் நிகழ்ந்தது.கருணாநிதி எழுதிய, 'ராமனுஜரின் வரலாறு' தொலைக்காட்சித் தொடர், அவரின் கை வண்ணத்தால், வெற்றி பெற்றது. இஸ்லாமியர்களின், 'இப்தார்' விருந்திலும் அவர் கலந்து கொண்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மூன்று மகாமகங்களின் போதும் பதவியில் இருந்த பெருமை பெற்றவர்.

தமிழக அரசில், மதம் சார்ந்த கருத்துகளில் அரசின் குறுக்கீடு ஒரு போதும் இருந்தது இல்லை. அது இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஒரு அரசு என்பது, எல்லா மதத்தாருக்கும் பொதுவானது. ஒரு மதக் கருத்தை அரசே திணிக்க முயல்வது, மக்களாட்சிக்கு விரோதமாகும். போராட்டங்கள் தற்காலிகமானவை. அதை அடக்கி விடலாம் என்ற கருத்தில் செயல்படாமல், தேச நலனுக்கு மத நல்லிணக்கம் அவசியம் என்று உணர்ந்து, கடமை ஆற்ற வேண்டியது அவசியமாகும்.

பொறையுடைமை என்பது, அனைவருக்கும் உரிய அறமாகும். சகிப்புத்தன்மை இல்லை என்றால், அரசினரே அமைதியின்மைக்கு வழி வகுப்பதாக பொருளாகி விடும்.


அமைதி மண்டலம்


பாண்டியன் அரசவை புலவர் புகழேந்தியார். சோழ நாட்டு புலவருக்கும், அவருக்கும் விளையாட்டாக தொடங்கிய உரையாடலில், சோழன் தேவையின்றி தலையிட்டான்.

'சோழ நாடா, பாண்டிய நாடா' என்று வாதம் சூடு பிடித்தபோது, 'திருமால் மீனாக அவதாரம் செய்தாரே அல்லாமல் புலியாக அவதாரம் செய்யவில்லை' என்றார் புகழேந்திப் புலவர்.மீன், பாண்டியர்களின் கொடியில் உள்ள அடையாளம்.புலி, சோழர்களின் அடையாளம். இதை மனதில் வைத்து, புகழேந்திப் புலவர், சோழ நாடு சென்ற போது, சோழன் அவரை சிறையில் அடைத்தான்.

அதுபோல, தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன், அமாவாசையை பவுர்ணமி என்று சொன்ன, அபிராமி பட்டரைக் கைது செய்து தண்டித்தான். ஒரு அரசன் தலையிட வேண்டிய வழக்கா இது...

நம் ஆன்மிகவாதிகளும், ஆன்மிக அரசின் பிரதிநிதிகளும், பகுத்தறிவுவாதிகளின் தலைவர்களை, இழிவு செய்வது தவறானதாகும். பகுத்தறிவுவாதிகள் இறைவனை நம்புவதில்லை. அது, அவர்கள் சுதந்திரம். ஆனால், அவர்களும், இறை அடையாளங்களையும், இறை இலக்கியங்களையும் கொச்சைப் படுத்துவது தவறு.இது போன்ற பிரச்னைகளில் அரசு, பின் விளைவுகளைச் சிந்தித்து, மாநில அமைதியை காக்க வேண்டியது அவசியமாகும்.

'விடைஏறு கபாலீசன் வீடு தந்தான்' என்று பெரியாழ்வார் பாடுகிறார். 'எந்தை வருக, இரகு நாயக வருக' என்று அருணகிரியார் பாடுகிறார். இந்தச் சமயப் பொறை, நம்மிடம் நீடிக்குமானால், தமிழகம் தொடர்ந்து அமைதி மண்டலமாகவே விளங்கும் என்பதில் ஐயமில்லை!

டாக்டர் வா.மைத்ரேயன்
அ.தி.மு.க.,
முன்னாள், எம்.பி.,
இ - மெயில்:maitreyan1955@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vinodha -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூலை-202008:19:49 IST Report Abuse
vinodha தெளிவான அருமையான தகவல்கள்
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
25-ஜூலை-202014:38:11 IST Report Abuse
A.Gomathinayagam தற்பொழுது ஆன்மிக அரசியல்தான் நடக்கிறது. ஆனால் இந்தியா முழுவதும் தினசரி ஏதாவது கோரிக்கையை வைத்து சாமானிய மக்கள் போராடுவது ஏன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X