பல ஆண்டுகளுக்கு பின் ஆடியில் பெய்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல ஆண்டுகளுக்கு பின் ஆடியில் பெய்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜூலை 25, 2020
Share

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம் பகுதிகளில் பல ஆண்டுகளுக்குப்பின் ஆடிப்பெருக்குக்கு முன்பே மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் சில நாட்களாக பெய்த பலத்த மழையால் சிறு சிறு குளங்கள் நிரம்பி உள்ளன. கொத்தையம் நல்லதங்காள் அணைக்கட்டுக்கு முதல் முறையாக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. காவேரியம்மாபட்டியில் சின்ன குளம், பெருமாள்கோயில்வலசு வேப்பமரத்து ஓடை குளம், பொருளூர் குளம், சின்னையக்கவுண்டன்வலசு ரோடு பகுதி குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து சரிவர மழை பெய்யாமல் இருந்தது. இந்தாண்டு உரிய நேரத்தில் மழை பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, வேளாண் பணிகள் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

* நல்ல மழை பெய்தது-விவசாயி கந்தசாமி, அப்பியம்பட்டி:மழையால் இப்பகுதி போர்வெல்களில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கேற்ப பல ஆண்டுகள் கழித்து ஆடியில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் மானாவாரி நிலங்களில் வேளாண்மை சிறப்பாக நடைபெறும். பெருமாள்கோயில் வலசு வேப்பமரத்து ஓடையில் பெய்த கனமழையால் இங்குள்ள குளம் நிரம்பி உள்ளது.

* மேய்ச்சலுக்கு புற்கள்-கிருஷ்ணசாமி, தங்கச்சியம்மாபட்டி:எனக்கு விபரம் தெரிந்து ஆடியில் மழை பெய்து 30 ஆண்டுகள் ஆகிறது. தற்போது பெய்துள்ள மழையால் தென்னைகளுக்கு ஒரு மாதம் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற தேவையில்லை. கால்நடைகள் மேய்ச்சலுக்கு புற்கள் கிடைக்கும். தொடர்ந்து பெய்தால் விவசாய பணிகளுக்கு ஏதுவாக இருக்க வேண்டும். காற்றடிக்கும் காலத்தில் மழை பெய்கிறது. போர்வெல்லில் தண்ணீர் வர இன்னும் மழை பெய்ய வேண்டும்.

விவசாயத்துக்கு ஏற்றது எம்.சுப்ரமணியம், பழநி: இந்த ஆண்டு ஆடி முதல் நாள் மழை பெய்தது. 2 வாரமும் ஆடி வெள்ளிக்கு முதல்நாள் மழை பெய்தது. பல ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு பெய்தது. இம்மழை மானாவாரி பயிரான கம்பு, சோளம், மக்காசோளம், போன்றவற்றுக்கு தக்க சமயத்தில் தேவையான அளவு பெய்து உள்ளது. இதை விட அதிகமாக பெய்திருந்தால் பயிர்கள் வீணாகி இருக்கும். தற்போதுள்ள சூழல் விவசாயத்துக்கு ஏற்றதாக உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X