பொது செய்தி

தமிழ்நாடு

மது மீது மோகம்... மனைவி மீது சந்தேகம்!

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

இது, குடிகாரர்களுக்கு ஏற்படும் 'ஒத்தேலோ சிண்ட்ரோம்'

''கோவிலாக இருந்த என் குடும்பம், இப்படி ஆகும்னு கனவுல கூட நினைக்கல டாக்டர்... வாரம் ஒரு தடவை பார்க், சினிமான்னு, என்னையும் குழந்தைகளையும் கூட்டிட்டு போவார். ஆனால், சமீப காலமா எல்லாமே தலைகீழா மாறிப்போச்சு. தினம் குடிச்சுட்டு வந்து, வீட்ல ஒரே ரகளை. என்னை சந்தேகப்பட்டு உதைக்கறாரு... குழந்தைகளையும் விட்டு வைக்கறதில்லை...,''- கண்ணீருடன் புலம்பினார் கவுசல்யா.அவருக்கு ஆறுதல் சொன்ன, பீளமேடு புதுார் ஹரி கிளினிக் மனநல மருத்துவர் டாக்டர் சுகன்யா பிரியதர்சினி, கவுசல்யாவின் கணவர் ராதாகிருஷ்ணனை கிளினிக்குக்கு அழைத்து வரச்செய்து, அவருக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகளை வழங்கினார்.''சுமார், மூன்று மாத சிகிச்சைக்குப் பின், தற்போது ராதாகிருஷ்ணன் பழைய நிலைமைக்கு திரும்பி, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்,'' என்றார் டாக்டர் சுகன்யா பிரியதர்சினி.இது குறித்து, அவர் கூறியதாவது:குடிப்பழக்கம் சந்தோஷத்தை கொடுக்கும் என, பலர் நினைக்கின்றனர். அது தவறு. தினந்தோறும் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் மனநிலையில், எதிர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும்.இதனால், அவர்கள் மட்டுமல்லாமல், அவர்களை சார்ந்தவர்களும், பாதிக்கும் சூழ்நிலை உருவாகும். முதலில், மனைவி மற்றும் பிறரை சந்தேகிக்கும் மனநிலை உருவாகும். சிலருக்கு நீண்ட நாள் இருந்த குடிப்பழக்கத்தை, திடீரென நிறுத்திய பிறகும், இத்தகைய சந்தேக நோய் வரலாம்.பொதுவாக மது பழக்கத்துக்கு அடிமையானவர்களில், 25 சதவீதம் முதல், 35 சதவீதம் பேர் வரை, இத்தகைய சந்தேக நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், நீண்ட நாள் குடிப்பழக்கம் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும், ரசாயன மாற்றமே.தாம்பத்திய உறவு பாதிப்பு! குடிப்பழக்கத்தால் ஆண்களுக்கு தாம்பத்திய உறவில், ஈடுபாடு இல்லாமல் போகிறது. இதனால், தன் மனைவி பிறருடன் பழகி வருகிறார் என்ற சந்தேகம், மனதில் வேரூன்றி குடும்பத்தின் நிம்மதியை குலைக்கிறது. இவர்களுக்கு, உரிய ஆலோசனைகளை வழங்குவது அவசியம்.குடிநோயாளிகளுக்கு வரும் இப்பிரச்னையின் பெயர், 'ஒத்தேலோ சிண்ட்ரோம்'. ேஷக்ஸ்பியர் நாடகத்தில் ஒத்தேலோ என்ற பாத்திரம், தனது மனைவி, தனக்கு விசுவாசமானவராக இல்லை என்று நினைத்து, அவரை கொலை செய்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.அந்த கதாபாத்திரத்தின் பெயரை மையமாக கொண்டு, மனைவியை சந்தேகப்படும் நபர்கள், 'ஒத்தேலோ சிண்ட்ரோம்' உள்ளவர் என அழைக்கப்படுகின்றனர்.காதுக்குள் குரல் கேட்கும்!இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு காதுக்குள் யாரோ, 'கர கர' குரலில் பேசுவது போல, கேட்டுக் கொண்டே இருக்கும். இன்னும் சிலர் டெல்யூசன் என, இல்லாத ஒன்றை இருப்பது போல, கற்பனை செய்து கொள்வர்.அதாவது, மனைவியே தன்னை விஷம் வைத்து கொல்ல முயற்சிக்கிறார் என கற்பனை செய்து கொள்வர். இந்நோய் மரபணு மற்றும் மூளையில் ரசாயன மாற்றத்தினால் ஏற்படுகிறது. இதை ஒரு மனநோய் என கண்டறிந்து, தகுந்த சிகிச்சை அளிப்பதுதான் ஒரே வழி.இவ்வாறு, டாக்டர் சுகன்யா பிரியதர்சினி கூறினார்.இதுதான் அறிகுறிகள்! மனைவியின் மொபைல் போன் அழைப்புகளை கண்காணிப்பது, பிறரிடம் பேச தடை விதிப்பது, வேலைக்கு செல்ல விடாமல், வீட்டில் அடைத்து வைப்பது, துாக்கம் வராமல் தவிப்பது ஆகியவை முக்கிய அறிகுறிகள். ஆழ்மனதில் உள்ள வெறுப்பு, கோபமாக மாறி, நெருங்கிய உறவுகளிடம் காட்டுவர். குளிப்பது, துாய்மையாக உடை உடுத்துவது போன்ற அன்றாட செயல்பாடுகளில், மாற்றம் இருக்காது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X