பொது செய்தி

தமிழ்நாடு

என்ன நடக்குது! கிராமங்களில் குடிநீர் வினியோகம் முடக்கம் :மறுசீரமைப்பு திட்டம் இழுபறியால் சிக்கல்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 என்ன நடக்குது! கிராமங்களில் குடிநீர் வினியோகம் முடக்கம் :மறுசீரமைப்பு திட்டம் இழுபறியால் சிக்கல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், 212 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணி தாமதமாகவும், திட்டமிடல் இன்றியும் மேற்கொள்ளப்படுவதால், பல்வேறு கிராமங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் தள்ளாடுகின்றன. பல பகுதிகளில் ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை.பொள்ளாச்சியில், ஆழியாறு ஆற்றை மையமாக கொண்டு, பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, 212 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம்.இத்திட்டம், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஒன்றிய கிராமங்களுக்கு, குடிநீர் ஆதாரமாக உள்ளது. நீருந்து நிலையத்தில் இருந்து, ரோட்டோரங்களில் கான்கிரீட் குழாய்கள் பதித்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.குழாய்கள் பழமையானதால், பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் விரயம், வினியோகத்தில் சிக்கல் என பல்வேறு பிரச்னைகள் நிலவியது.இதற்கு தீர்வாக, பழைய கான்கிரீட் குழாய்களை அகற்றி, 'டக்டைல் ஐயர்ன் பைப்' எனப்படும் துருப்பிடிக்காத உருக்கிரும்பு குழாய்களை பதிக்கும் மறு சீரமைப்பு திட்டம் நான்கு மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது.இதில், 300 கி.மீ., தொலைவுக்கு குழாய்கள் மாற்றப்படுகின்றன. இத்திட்டத்தின் மதிப்பு, 72.75 கோடி ரூபாயாகும். திட்டம் துவங்கப்பட்டு, பிரதான வினியோக வழித்தடங்களிலும், கிராமங்களுக்கான வழித்தடங்களிலும் பழைய குழாய்களை தோண்டி எடுத்து, புதிய குழாய்களை பதிக்கும் பணி ஜரூராக துவங்கியது.கொரோனா பிரச்னை தீவிரமடைந்து, பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன் பின், பணிகள் துவங்கினாலும், வேகம் குறைந்து ஆமை வேகத்தில் நடக்கின்றன.இதனால், பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் வாரக்கணக்கில் தடைபட்டுள்ளது. வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிபாளையம், ராசிசெட்டிபாளையம், நல்லுாத்துக்குளி, முத்துார், நல்லிக்கவுண்டன்பாளையம், காளிபாளையம், தேவம்பாடி வலசு உள்ளிட்ட கிராமங்களுக்கு, ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.இதனால், மக்கள் பல கி.மீ., வாகனங்களில் சென்று, குடிநீர் கொண்டு வருகின்றனர்.மேலும், சில கிராமங்களில் உள்ளூர் நீராதராங்கள் சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதால், அன்றாட பயன்பாட்டுக்கே தண்ணீர் இல்லாமல், மக்கள் கடும் திண்டாட்டத்தில் உள்ளனர்.இதற்கு தீர்வு காண, மறுசீரமைப்பு பணியை விரைந்து முடித்து, குடிநீர் வினியோகத்தை துவக்க வேண்டும். ஒன்றிய நிர்வாகங்கள், ஊராட்சி நிர்வாகங்கள் கிராமங்களின் உள்ளூர் நீராதாரங்களை பராமரித்து, மக்களின் அன்றாட தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.மேலும், இப்பணிகள் முடியும் வரை, எந்தெந்த கிராமங்களுக்கு எத்தனை நாட்களுக்கு குடிநீர் வினியோகம் தடைபடும் என்ற தகவலை, முன்கூட்டியே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அறிவிக்க வேண்டும். அப்போது தான், பல நாட்களாக குடிநீர் தட்டுப்பாடால் அவதிப்படும் மக்கள் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள முடியும். ஊராட்சி நிர்வாகங்களும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.இன்னும் 4 மாதங்களாகும்!குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பிரதான குழாய்கள் மாற்றும் பணி, 75 சதவீதம் முடிந்துள்ளது. மற்ற பகுதிகளில், 50 சதவீத பணி முடிந்துள்ளது. பணிகள் முழுமையாக நிறைவடைய, மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும். அது வரை, அவ்வப்போது கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து, பணியை தொடர மாற்று ஏற்பாடு செய்யப்படும். குடிநீர் வினியோகம் தடை பட நேரிட்டால், முன்னறிவிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என உறுதியளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X