ஓசூர்: ஓசூர் அருகே, அம்மன் கழுத்தில் இருந்து, தங்க தாலியை திருடி சென்ற இருவரை பிடித்து, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.
ஓசூர் அடுத்த, எடப்பள்ளி கிராமத்தில் எல்லம்மா தேவி என்ற அம்மன் கோவில் உள்ளது. கடந்த பிப்ரவரியில், அம்மன் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்க தாலி, உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்நிலையில், நேற்று காலை கோவிலுக்குள் புகுந்த இரு வாலிபர்கள், அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்க தாலியை திருடினர். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அவர்களை பிடிக்க முயன்ற போது, பைக்கில் தப்பினர். பைக்கின் பதிவு எண்ணை பார்த்த பொதுமக்கள், அருகில் உள்ள கிராம மக்களுக்கு போன் செய்து, பைக்கில் வரும் வாலிபர்களை பிடிக்குமாறு கூறினர். ஆனால், பைக்கில் வந்தவர்கள் வேகமாக சென்றதால், அவர்களது வாகனத்தின் டயருக்குள் கட்டையை விட்டு மக்கள் பைக்கை நிறுத்தினர். பைக்கில் இருந்து, கீழே விழுந்த இருவருக்கும் மக்கள் தர்ம அடி கொடுத்து, மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர். அவர்களுக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தேன்கனிக்கோட்டை அடுத்த தடிக்கல்லை சேர்ந்த மகேஷ், 32, தேன்கனிக்கோட்டையை சேர்ந்த செல்வா, 27, என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.