
குருவிக்கூட்டை கலைக்கக்கூடாது என்பதற்காக அது கூடுகட்டிய ஸ்விட்ச் பாக்ஸ் பக்கமே போகாமல் கடந்த நாற்பது நாட்களாக இருளில் ஒரு கிராமத்தினர் வசிக்கின்றனர்
சிவகெங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியத்தில் உள்ளது பொத்தக்குடி கிராமம்.இந்த கிராமத்தில் அறுபதிற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன, முப்பத்தைந்து தெரு விளக்குகள் எரிகின்றன.இந்த முப்பத்தைந்து விளக்குகளையும் இரவானதும் எரிய விடுவதற்காக ஒரு பொதுவான ஸ்விட்ச் பாக்ஸ் உள்ளது.
கடந்த 40 நாட்களுக்கு முன் தெரு விளக்கை எரியவிடுவதற்காக இந்த சுவிட்ச்பாக்ஸ் பக்கம் பொறுப்பாளர் கருப்புராஜா போயிருக்கிறார் அப்போது அந்த பெட்டியினுள் கரிச்சான் குருவி கூடு கட்டி அதில் மூன்று முட்டைகளையும் போட்டு இருப்பதை பார்த்து இருக்கிறார்.
கூட்டைக் கலைத்து முட்டைகளை அப்புறப்படுத்தினால்தான் சுவிட்சை போடமுடியும் இந்த இரண்டையுமே செய்ய விரும்பாத கருப்புராஜா கிராமத்தினரிடம் விஷயத்தை சொன்னார்,
பறவை குஞ்சு பொரித்து கிளம்பும் வரை யாரும் சுவிட்ச் பாக்ஸ் பக்கம் போகவேண்டாம் தெரு விளக்கு எரியாமல் நாம் இருளில் இருந்தாலும் பராவாயில்லை பறவையை தொந்திரவு செய்யவேண்டாம் என்று ஒருமித்த குரலில் முடிவு செய்தனர்.

நாற்பது நாட்களாகிவிட்டது கிராமத்தில் இரவானதும் சிலர் அவரவர் வீட்டு முன்வாசல் விளக்கை போடுவதுடன் சரி மற்றபடி தெருவிளக்கு இல்லாமல் இருளில்தான் இருக்கின்றனர் ஆனால் இவர்கள் பாய்ச்சிய கருணை என்ற ஒளியால் பறவை மூன்று குஞ்சுகளை பொரித்துவிட்டது.
தாய்க்குருவி உணவை கொண்டு வந்து ஊட்டுவதையும் குஞ்சுகள் தாயுடன் சத்தமிட்டு விளையாடுவதையும் துாரத்தில் இருந்து பார்த்து மகிழும் கிராமத்தினர் குஞ்சுகள் இறக்கை முளைத்து பறக்கும் வரை இருளே இருக்கட்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

பொத்தக்குடி கிராமத்தினரின் இந்த பறவை நேயத்தை எப்படி பாராட்டினாலும் தகும்.
தகவல்:வெங்கடேசன்
படங்கள்:மாதவன்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE