சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

செய்வீர்களா ஸ்டாலின்?

Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

எம்.ஜி.ஆரின் கனவு நிறைவேறுமா?

ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய,'இ- மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர்,எம்.ஜி.ஆரின் மனதில் உதித்த திட்டங்களில், தமிழகத்தின் தலைநகராக திருச்சியை மாற்றுவதும் ஒன்று.சென்னையின் அசுர வளர்ச்சியைக் கண்டு, தொலைநோக்கு சிந்தனையுடன், 'தலைநகர் திருச்சி' திட்டத்தை செயல்படுத்த, அவர் முயற்சித்தார்.மேலும், சென்னையிலும் நிலவும் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றும், தமிழகத்தின் மையத்தில் தலைநகர் இருந்தால், அனைத்து பகுதி மக்களும் வந்து செல்வது எளிது என்றும், அவர் உணர்ந்தார்.கடந்த, 1983ல், திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை, எம்.ஜி.ஆர்., அறிவித்தார். தி.மு.க., முன்னாள் தலைவர், கருணாநிதி உட்பட எதிர்க்கட்சியினர், எவ்வித காரணமும் இன்றி, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி, திருச்சியை தலைநகராக்குவதில், எம்.ஜி.ஆர்., உறுதியாக நின்றார்.அண்ணாநகர் நவல்பட்டில், தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதி அமைக்க, தீவிர முயற்சி எடுத்தார். திடீரென எம்.ஜி.ஆருக்கு, உடல்நிலை சரியில்லாமல் போனது. மேலும், அப்போதைய அரசியல் சூழ்நிலை, முன்னாள் பிரதமர், இந்திரா மரணம், தேர்தல் போன்ற காரணங்களால், திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனது.அத்திட்டம் நிறைவேறி இருந்தால், சென்னையில், இவ்வளவு மக்கள் நெரிசல் இல்லாமல் இருந்திருக்கும். போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டிருக்காது; கூவம், சாக்கடையாகி இருக்காது; தண்ணீர் பிரச்னை எழாது; சுற்றுச்சூழல் மாசு அதிகரித்திருக்காது.வாழ்வாதாரம் தேடி, பிற மாவட்டங்களில் இருந்து, ஏராளமானோர் குவிந்ததால், சென்னையில் மக்கள்தொகை அதிகரித்து விட்டது. இதனால் அங்கு, சாதாரண திட்டங்கள் முதல், பேரிடர் நேரங்கள் வரை, அரசு இயந்திரங்கள் விரைவாக செயல்பட முடியவில்லை.இப்போதைய, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதற்கும், சென்னையில் நிலவும் மக்கள் நெருக்கடி தான், முக்கிய காரணம். சமூக இடைவெளியை, மக்கள் கடைப்பிடிப்பதற்கு வாய்ப்பு மிக குறைவு.இதைவிட, இன்னொரு கடும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. காலநிலை மாறுபாடு குறித்து ஆய்வு செய்யும், ஐ.நா.,வின், ஐ.பி.சி.சி., என்ற அமைப்பு, ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில், இந்த நுாற்றாண்டின் இறுதியில், இமயமலை வேகமாக உருகி, கடல் நீர்மட்டம் வெகுவாக அதிகரிக்கும். இதனால் கோல்கட்டா, மும்பை, சூரத், சென்னை ஆகிய, நான்கு நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.ஐ.பி.சி.சி.,யின் ஆய்வறிக்கை, சென்னைக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. இதை, அரசு உணர வேண்டும்.நம் சந்ததியை காப்பாற்ற, தொலைநோக்கு சிந்தனையுடன், மாநில அரசு செயல்பட வேண்டும். எம்.ஜி.ஆரின் கனவான, 'தலைநகர் திருச்சி' திட்டத்தை நிறைவேற்ற, அ.தி.மு.க., தலைமையிலான மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.l

சத்துமாவை நீங்களே தயாரியுங்கள்!

நளினி ராமச்சந்திரன்,கோவையிலிருந்து அனுப்பிய,'இ- யில்' கடிதம்:கோவையில், 7 வயது சிறுவனின் தாய், கடையில், 'முழு சத்து பானம்' பாக்கெட் வாங்கியுள்ளார். அதை பயன்படுத்தி, பானம் தயார் செய்து, மகனுக்கு கொடுத்துள்ளார். தற்செயலாக, அந்த பாக்கெட்டை பார்த்த போது, உள்ளே, பல்லி ஒன்று இறந்து கிடந்தது, தெரிய வந்தது.அதிர்ச்சியடைந்த தாய், சத்து பானத்தை குடித்த, தன் மகனை, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இது தொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதெல்லாம், வேறு விஷயம். நம் குழந்தைகளின் நலனில், நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.இயன்ற அளவு, நம் குழந்தைகளுக்கான சத்துணவை, நாமே தயாரித்து கொடுப்பது மிகவும் நல்லது. சூழ்நிலை காரணமாக, பாக்கெட் பொருட்களை வாங்கினால், காலாவதி தேதி உள்ளிட்டவற்றை நன்கு கவனித்து வாங்க வேண்டும்.இன்றைய, கொரோனா காலத்தில், குழந்தை, முதியோர் உள்ளிட்டோருக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளை கொடுக்க வேண்டும். சத்துமாவு பாக்கெட் வாங்கினால், அதை அப்படியே உபயோகிக்காமல், நன்றாக சலித்து உபயோகியுங்கள். குழந்தைகளின் உயிருடன் விளையாடாதீர்

ஆட்டம் போட்ட காலமல்ல!

வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: கொரோனா நோய் தொற்று பரவலால், மக்கள் பாடு திண்டாட்டமாகி உள்ளது. அந்நோயிடம் இருந்து தப்பிக்க, பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். அந்நோயை வெல்ல, மருத்துவ உலகமே போராடி வருகிறது.இந்நேரத்தில், ஹிந்து கடவுள்களை அவமானப்படுத்தி, பிரச்னையை உருவாக்குவது ஏன், இதன் பின்னணியில் யார் யார் இருக்கின்றனர் என்பதை, அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும்.'கருப்பர் கூட்டம்' என்ற பெயரிலான கும்பல், வேண்டுமென்றே, மதக் கலவரத்தைத் துாண்டும் விதத்தில், 'யு டியூப்' சேனலில், கந்த சஷ்டி கவசத்தையும், முருகக் கடவுளையும் அநாகரிகமாக விமர்சித்துள்ளது. அந்த கும்பலைச் சேர்ந்தோர் கைது செய்யப்பட்டனர் என்றாலும், 'ஏன், யார் சொல்லி அதை செய்தனர்' என்பதை, ஆழமாக விசாரிக்க வேண்டும்.ஹிந்து மத விரோதிகளுக்கு, ஒன்று தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம்... இது ஒன்றும், 1973ம் ஆண்டுக்கு முன்பான, ஈ.வெ.ரா.,வும், தி.க.,வும் ஆட்டம் போட்ட காலமல்ல... ஹிந்துக்கள், தங்கள் மனதிற்குள் மட்டும் கோபப்பட்டனர்; வெளியில், பொறுமையாக இருந்தனர்.அக்காலமும், சூழ்நிலையும் வேறு. மத்தியில், யார் ஆட்சி அமைக்க வேண்டும் என, நாங்கள் தீர்மானித்ததையும்; அதை செயல்படுத்தி காட்டியதையும் மறந்து விடாதீர்!ஹிந்து மதத்தின் தர்மமே, பொறுமை தான்; ஆனால், அதற்கும் ஒரு எல்லையுண்டு என்பதை உணருங்கள்!

செய்வீர்களா ஸ்டாலின்?

இல.ஆதிபகவன்,கோவையிலிருந்து எழுதுகிறார்: 'கருப்பர் கூட்டத்தின் பின்னணியில், தி.மு.க.,வும் இருக்கிறது' என, சிலர் சொல்கின்றனர்; சிலர், 'இல்லை' என்கின்றனர்.தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதியோ, 'நாங்கள் ஹிந்து விரோதி இல்லை; தி.மு.க.,வில் ஹிந்துக்கள் ஒரு கோடி பேர் இருக்கின்றனர்' என, தன் பங்கிற்கு ஒன்றைச் சொல்கிறார்.கருப்பர் கூட்டம் குறித்து, ஸ்டாலின் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை; அவரது மகன் உதயநிதியும் சொல்லவில்லை; கனிமொழியும் பேசவில்லை.இதெல்லாம் விடுங்கள்... இதோ, விநாயகர் சதுர்த்தி வரப்போகிறது! ஒரே ஒரு அறிக்கை வெளியிடுங்களேன்... 'விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோருக்கு வாழ்த்துகள். தி.மு.க.,வினர் அனைவரும் அவரவர் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவர்' என, அறிக்கை வெளியிடுங்களேன், பார்ப்போம்!அதோடு, தி.மு.க.,வினர் தங்கள் வீடுகளில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய படங்களை, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடுங்களேன்... நாங்களும் பார்க்கிறோம்! அதன்பின், நீங்கள் ஹிந்து விரோதியா, ஹிந்து ஆதரவாளர்களா என, நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம்; ஆர்.எஸ்.பாரதி சொன்னதையும் நம்புகிறோம்!செய்வீர்களா ஸ்டாலின்?

அரசு செய்யும் காரியமா இது?

வே.பழனி, திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' ஊரடங்கால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணம் கணக்கீட்டில் தவறான முறையை பின்பற்றி, அதிக பணம் வசூலிப்பது, ஏற்கத்தக்கதல்ல.கொரோனா நோய் தொற்று பரவலை காரணம் காட்டி, மார்ச் முதல், ஜூன் வரையுள்ள காலத்திற்கு, தற்போது தான் மின் கணக்கீடு செய்யப்படுகிறது. அதனால், நான்கு மாதத்திற்கு முன் எடுக்கப்பட்ட, 'ரீடிங்'குடன், ஜூலையில் எடுக்கப்பட்ட ரீடிங்கை கழித்து, அதில், 100 யூனிட் இலவச மின்சார யூனிட் கழித்து, கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.இதனால், வழக்கத்தை விட, மிக அதிக கட்டணம், நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. கொரோனா பரவினாலும் பரவாயில்லை; மின் வாரிய ஊழியர்கள், வழக்கம்போல, இரு மாதங்களுக்கு ஒரு முறை, 'ரீடிங்' எடுத்திருக்கலாம்.வேறென்ன சொல்ல முடியும்?ஊரடங்கால், வருவாய் பாதிக்கப்பட்ட நிலையில், மின் கட்டண அதிகரிப்பு, மக்களுக்கு எவ்வளவு துயரத்தை தரும் என்பதை, அரசு ஏன் உணர மறுக்கிறது?மக்களில், 97 சதவீதம் பேர், மின் கட்டணம் செலுத்தி விட்டனர் என்பதாலே, அரசின் நடவடிக்கையை, அனைவரும் ஏற்றுக் கொண்டனர் என, நினைத்துவிடக் கூடாது.அத்தியாவசிய தேவையாகிவிட்ட மின்சாரத்தை, வேண்டாம் என, ஒதுக்க முடியாது; மேலும், ஒரு நாள் தாமதமாக பணத்தை கட்டினாலும், அபராதம் வேறு தண்டமாக அழ வேண்டும் என்ற காரணங்களால் தான், மக்கள், மின் கட்டணத்தைச் செலுத்தி உள்ளனர்.மற்ற மாநிலங்களை போல, தமிழகத்திலும், மாதம்தோறும் மின் கணக்கீடு எடுக்க வேண்டும் என, நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மாநில அரசு, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கீடு செய்து, மக்களுக்கு சுமையை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா காலத்தில், மக்களுக்கு, 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கிய அரசு, மின் கட்டணம் என்ற பெயரில், அவர்களிடமிருந்து, 5,000 ரூபாயை வசூலித்துள்ளது.மின் கட்டண கணக்கீடு மற்றும் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பை பார்க்கும் போது, மக்களுக்கு எந்த நிவாரணமும், அரசு கொடுக்க வேண்டியதில்லை. மாறாக, விலைவாசியை கட்டுப்படுத்தி, நேர்மையான வரி வசூலை மேற்கொண்டாலே போதும்.அதைவிடுத்து, மின் கட்டணம் என்ற பெயரில், மறைமுகமாக வரி வசூலிப்பது, மக்களின் மேல் அக்கறையுள்ள அரசு செய்யும் காரியம் அல்ல. வருவாய் ஏதுமின்றி, இலவசங்களை அள்ளி வீசியதால், கஜானா மிக மோசமான நிலையில் உள்ளது என்பதை ஒப்புக் கொண்டு, ஆக வேண்டிய காரியத்தில் அரசு ஈடுபட வேண்டும்.தேவையில்லாத சலுகைகளை அறிவித்து, பின் மறைமுகமாக, மக்களிடம் பணம் வசூலிக்கும், 'தகிடு தத்த' வேலையில், அரசு ஈடுபடுவது, அநாகரிகமாக உள்ளது.lஇந்த வழியை பின்பற்றுங்கள்!

எஸ்.பாலசுப்ரமணியன், காஞ்சிபுரத்திலிருந்து அனுப் பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 30க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் உள்ளன. அனைத்து துறைகளிலும், பொதுமக்கள் தரும் கோரிக்கை விண்ணப்பங்கள், உடனே தீர்க்கப்படுவதில்லை.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுத்தால், அந்த மனு மீதான நடவடிக்கை உடனே மேற்கொள்ளப்படும்; இல்லையெனில், நீதிமன்றத்தை நாடி, சில ஆண்டுகள் போராடி, அந்த மனு மீதான நடவடிக்கை எடுக்க, அரசு ஊழியர்களை வலியுறுத்த வேண்டும்.ஆனால், லஞ்சம் கொடுக்காமலும், நீதிமன்றங்களை நாடாமலும், நம் பிரச்னையை தீர்க்கலாம். ஆம்... தகவல் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தி, தங்கள் பிரச்னைக்கு தீர்வு காணலாம்.தகவல் உரிமை சட்டத்தில், பொதுமக்கள் விண்ணப்பித்த, 30 நாட்களுக்குள், மனு மீதான நடவடிக்கை குறித்து, சம்பந்தப்பட்ட துறை பதில் தர வேண்டும். அப்படியும், சரியான பதில் கிடைக்கவில்லை எனில், மாநில தகவல் ஆணையர் நேரடியாக விசாரித்து, நடவடிக்கை எடுப்பார்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், ஒரு முதியவரின் சொத்துக்களை, வாரிசு அடிப்படையில் பிரிக்க, ஆண்டுக்கணக்கில், நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த பிரச்னை, தகவல் உரிமை சட்டத்தின் கீழ், வெறும், 40 நாட்களில் முடித்து வைக்கப்பட்டது.தகவல் உரிமை சட்டத்தின் அடிப்படையை புரிந்து கொண்டால் போதும், நம் பிரச்னைக்கு, எந்த அதிகாரிக்கும் லஞ்சம் கொடுக்கவோ, அரசியல்வாதிகளின் சிபாரிசுக்கோ செல்ல வேண்டியதில்லை. மேலும் நாம், குறுக்கு வழியை நாடாமல், நேர்மையாக நடந்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
26-ஜூலை-202015:11:13 IST Report Abuse
Anantharaman Srinivasan தி.மு.க.,வினர் அனைவரும் அவரவர் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து, விநாயகர் சதுர்த்தியை கொண்டடா விட்டாலும் கொழுக்கட்டை மட்டும் பண்ணி சாப்பிடுவார்கள். பேசுவதற்கும் சுவைப்பதற்கும் நாக்கு இருக்கிறதே..
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
26-ஜூலை-202009:05:20 IST Report Abuse
veeramani நண்பர் மனோகரன் கூறிய கருது.. தென் மாவட்ட மக்கள் அனைவரின் கூக்குரலாகும். கடந்த இருபது ஆண்டுகளாக தென் மாவட்ட மக்கள் அரசின் முன் மண்டியிடுகின்றோம். தென் மாவட்டங்களில் பெரிய அரசு தொழிற்ச்சாலைகள் இல்லவேயில்லை எங்களின் வாழ்வாதாரம் ஒன்றும் இல்லை. மழை பெய்தால் நாங்கள் உணவு சாப்பிடுகிறோம் மழை பொய்த்தால் நாங்கள் உணவு சாப்பிடுவது குறைத்துக் கொள்கிறோம்- எங்களின் குழந்தைகளுக்காக. என்பது சதவீத கிராமங்களில் நாற்பது வயதிற்கு கீழ உள்ள மனிதர்கள் இல்லை, சென்னை சென்றுவிட்டனர். தற்போதய வைரஸின் தாக்கம், தென் தமிழ்நாட்டில் தற்போது அதிகரிப்பதில் இருந்து அறியலாம். எங்களின் வேண்டுகோள்.. அம்மாவின் அரசு வரும் காலங்களில் திருச்சி/ மதுரை க்கு முக்கியத்துவம் கொடுத்து எங்களின் வேண்டுகோளை பரிசீலிக்கவேண்டும்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
26-ஜூலை-202006:39:19 IST Report Abuse
Darmavan பாலசுப்ரமணியம் காஞ்சிபுரம்,தகவல் உரிமை சட்டத்தின் மூலம் எப்படி நடந்தது என்று விலகியிருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X