இந்தியா

புதுச்சேரி அரசியல் வரலாற்றில் புதுமை மரத்தடியில் நடந்த சட்டசபை கூட்டம்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020
Share
Advertisement
 புதுச்சேரி அரசியல் வரலாற்றில் புதுமை மரத்தடியில் நடந்த சட்டசபை கூட்டம்

புதுச்சேரி; புதுச்சேரி எம்.எல்.ஏ., கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், சட்டசபையின் மைய மண்டபம் மூடப்பட்டது.

இதனால், புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாக மரத்தடியில் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது.புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த 20ம் தேதியன்று துவங்கியது. அன்றைய தினம், நடப்பு 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். தொடர்ந்து, சட்டசபையில் கவர்னர் கிரண்பேடி நேற்று முன்தினம் உரையாற்றினார்.இந்நிலையில், சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற, பிரதான எதிர்கட்சியான என்.ஆர். காங்., கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., ஜெயபால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு மருத்துவ பரிசோதனையில் உறுதியானது. அவர் உடனடியாக மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சட்டசபையில் பட்ஜெட் தொடர்பான பொது விவாதம் நடத்துவதற்கு நேற்று திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் எதிர்கட்சி எம்.எல்.ஏ., கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தகவலால் சட்டசபை வளாகத்தில் நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சட்டசபையின் மைய மண்டபத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன், மைய மண்டபம் முழுவதுமாக மூடப்பட்டது. மேலும், சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து துாய்மைப்படுத்தப்பட்டது.கடந்த மார்ச் மாதம் சட்டசபை கூடியபோது, 3 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இடைக்கால பட்ஜெட் அவகாசம், கடந்த மாதம் 31ம் தேதியுடன் முடிந்து விட்டது.

இதனால், கடந்த 1ம் தேதியில் இருந்து அரசு துறைகளில் செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.துறைவாரியான மான்யக் கோரிக்கைகளை தாமதம் இல்லாமல் நிறைவேற்றினால் மட்டுமே இந்த மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும்; அரசு துறைகளில் செலவு செய்ய முடியும். இதுபோன்ற நெருக்கடி நிலையில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர்.சட்டசபை வளாகத்தின் முகப்பில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் சட்டசபையை நடத்துவது என்றும், ஏற்கனவே அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்தபடி, பட்ஜெட் மீது பொது விவாதம் நடத்தி, துறைவாரியாக நிதி ஒதுக்கீடு செய்து, சபையின் ஒப்புதலை பெறுவது என்றும் செய்யப்பட்டது.தொடர்ந்து, சட்டசபை வளாகத்தின் முகப்பில் வேப்ப மரத்தடியில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு, பந்தலின் நடுவில் சபாநாயகருக்கு இருக்கை போடப்பட்டது. அவருக்கு இரண்டு பக்கத்திலும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு சமூக இடைவெளியுடன் நாற்காலிகள் போடப்பட்டன.\
மதியம் 1:30 மணிக்கு, திருக்குறள் வாசித்து சபை அலுவல்களை துவக்கிய சபாநாயகர் சிவக்கொழுந்து, 'கடந்த காலங்களில் நமது தலைவர்கள் மரத்தடியில் நின்று உரை நிகழ்த்தி உள்ளனர். அதுபோல, இங்கே மாற்றப்பட்டுள்ள சபையில் உறுப்பினர்கள் பேசலாம்' என அழைப்பு விடுத்தார்.முதல்வர் நாராயணசாமி பேசும்போது, 'நமது எம்.எல்.ஏ., ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மைய மண்டபத்தில் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மாத கடைசிக்குள் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டி உள்ளது. அரசின் அன்றாட செலவுகளுக்கு நிதி தேவையாக உள்ளது. மக்களுக்கான நலத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டி உள்ளது. எனவே, துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை சபையில் நிறைவேற்றி தர வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.தொடர்ந்து, அரசின் ஒவ்வொரு துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த விபரங்களை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முன்மொழிந்தனர். இதன் மீது எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெட்டு தீர்மானம் அளித்தனர். இருந்தபோதும், நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு விவாதம் எதுவும் இல்லாமல் வெட்டு தீர்மானத்தை திரும்ப பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, துறைவாரியான நிதி ஒதுக்கீட்டுக்கு சபையின் ஒப்புதல் பெறப்பட்டதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.திறந்தவெளியில் மதியம் 1:30 மணிக்கு துவங்கிய சட்டசபையின் அலுவல்கள், மாலை 3:45 மணிக்கு நிறைவடைந்தது. சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாக மரத்தடியில் சட்டசபை கூட்டம் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X