இந்தியா

புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு நிமிடங்கள்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி; என்.ஆர். காங்., எம்.எல்.ஏ., ஜெயபாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலால் சட்டசபை வளாகத்தில் நேற்று காலை பரபரப்பு தொற்றிக் கொண்டது. சட்டசபை வளாகத்திற்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்தனர். சட்டசபையை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளே செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசரால் கைகளை சுத்தம் செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மைய மண்டபம், முதல்வர், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்களிலும், சட்டசபை வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கிருமிநாசினி தெளிக்கப்பட்டதை தொடர்ந்து சட்டசபை மைய மண்டபத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு பூட்டு போடப்பட்டது. முதல்வர் நாராயணசாமியும், சபாநாயகர் சிவக்கொழுந்துவும் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். சட்டசபை வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்தின் நான்காவது மாடியில் சபையை நடத்த முடிவு செய்யப்பட்டது. நான்காவது மாடியில் உள்ள கருத்தரங்க அறையில் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் துவக்கினர். கருத்தரங்க அறையில் 30 எம்.எல்.ஏ.,க்கள் அமர இட வசதி இல்லாததால் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு கருத்தரங்க அறையில் சபையை நடத்தும் முடிவு கைவிடப்பட்டது. சட்டசபை வளாகத்துக்குள் வாகனங்களை நிறுத்துமிடத்தில் திறந்தவெளியில் சட்டசபையை நடத்த முதல்வரும், சபாநாயகரும் முடிவு செய்தனர். தொடர்ந்து, முதல்வர், சபாநாயகர், அமைச்சர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் வாகனம் நிறுத்தும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். 'வேப்பமரம் மருத்துவ குணங்கள் கொண்டது; இயற்கை சூழலில் வேப்ப மரத்தடியில் சபையை நடத்துவது நல்லது' என, சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்தார். திறந்தவெளியில் வேப்ப மரத்தடியில் சட்டசபையை நடத்த முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகளை அதிகாரிகள் முடுக்கி விட்டனர். தற்காலிகமாக ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டு, மேஜை, நாற்காலிகள் போடப்பட்டு, மைக் வசதி தற்காலிகமாக செய்யப்பட்டது. முதல்வரின் உதவி தனிச் செயலர் ஜெகஜோதி, சபாநாயகரின் செயலர் சந்திரக்குமார் ஆகியோரின் மேற்பார்வையில் ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடந்தது. மதியம் 1:30 மணிக்கு மரத்தடியில் சபையின் அலுவல்கள் துவங்கியது. நடப்பு 2020 -- 21ம் ஆண்டுக்கான பட்ஜெட், துறைவாரியான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றிற்கு சபையின் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டது. வழக்கமாக, சட்டசபை கூட்டம் நடக்கும்போது முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்களில்ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அமர்ந்து சபையில் நடப்பதை கேட்பது வழக்கம். நேற்று, கமிட்டி அறையின் எதிரில் அமர்ந்து, சபை நிகழ்ச்சிகளை நேரடியாக பார்த்தனர். முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பேசுவதையும் அதிகாரிகள் கூர்ந்து கவனித்தனர். மாலை 3:45 மணிக்கு சபையின் அலுவல்கள் முடிவுக்கு வந்தன. தொடர்ந்து, சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X