பொது செய்தி

இந்தியா

புத்தக அறிமுகம்: தென் இந்திய வரலாறு

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புத்தக அறிமுகம்,தென் இந்திய வரலாறு

சென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். வாசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம். ஒவ்வொரு ஞாயிறும் தினமலர் இணையதளத்தில் இந்தப் பகுதி வெளிவரும்.


01. தென் இந்திய வரலாறுஆசிரியர்: கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
வெளியீடு: ஜீவா பதிப்பகம்
12/28 சவுந்தரராஜன் தெரு, சென்னை - 17.
அலைபேசி: 99520 79787
பக்கம்: 544 விலை: ரூ.500

கல்வெட்டு, செப்பேடு, நாணயங்கள், இலக்கியம், செவிவழிச் செய்திகளை ஆய்ந்து வரலாறு எழுதப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், கேரளா பற்றிய தென் இந்திய வரலாறு சரியாக பதிவு செய்யப்படவில்லை என்ற குறை இருந்தது. அதை போக்கும் வகையில், இலங்கை நாட்டையும் இணைத்து, விரிவாக எழுதப்பட்ட வரலாற்று நுால்.
கி.மு., 300 முதல், கி.பி., 1600 விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி வரை எழுதியுள்ளார். மன்னர்களின் வீரம், கொடை, காதல், மக்களின் பொருளாதார நிலை, பண்பாட்டு வளம், இலக்கிய வளம் பற்றி விரிவாக எழுதப்பட்டு உள்ளது. விஜயநகர அரசர்கள் வெளியிட்ட பகோடா நாணயங்களில், கன்னடமும், நாகரி மொழியும் இருந்தன. பாமினி சுல்தான்கள் ஆட்சியில், மதுரையில் செப்பு, வெள்ளி, பவுன் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
தென்னிந்தியா பற்றி மெகத்தனீசு எழுதிய குறிப்புகள், சீனருடன், காஞ்சி பல்லவர்கள் கொண்ட தொடர்பு போன்றவையும் பேசப்பட்டுள்ளது. பெல்லாரி, மைசூர், ஐதராபாத் ஆகிய இடங்களின் அகழ்வு ஆய்வுகளில் கிடைத்த கற்கோடரிகள், கற்கத்திகள், கல்வாச்சிகள், தமிழகத்தில் ஆதிச்சநல்லுார் அகழ்வாய்வில் கிடைத்தவற்றுடன் ஒப்பு நோக்கத்தக்கன.
ஆதிகாலம் தொட்டு, முருகனை தமிழர்கள் வழிபட்டு வந்தமைக்கு இரும்பு வேல், பித்தளை வேல் கண்டெடுக்கப்பட்டுள்ளதை, ஆதிச்சநல்லுார் அகழ்வு ஆராய்ச்சியை முன்வைத்து கூறுகிறது. பாண்டிய நாட்டின் பட்டு, முத்து பற்றி கவுடில்யர் சிறப்பாக எழுதியுள்ளார். சங்க காலத்திலும், பின்னரும் மூவேந்தர் ஆட்சி இருந்தது. கி.பி., 75 வரை ரோம நாட்டுக்கும், தமிழகத்துக்கும் வர்த்தகம் நடந்த விபரங்களை சான்றுகளுடன் விளக்கி உள்ளார்.
விஜய நகரப் பேரரசின் எழுச்சியும், வீழ்ச்சியும், முகமதியர், போர்ச்சுக்கீசியர் தாக்குதலும் படிப்பினைகள் தருகின்றன. இலக்கிய, கலை வளர்ச்சி பற்றியும் தொடர்பு படுத்தும் வரலாற்று நுால்.
- முனைவர் மா.கி.ரமணன்


02. பன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலிபதிப்பாசிரியர்: தங்க.ஜெய்சக்திவேல்
வெளியீடு: டெஸ்லா பதிப்பகம்
43, கேசவ பெருமாள் கோவில் கிழக்கு வீதி,
மயிலாப்பூர், சென்னை - 4.
அலைபேசி: 98413 66086
பக்கம்: 316 விலை: ரூ.300


latest tamil news
ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், மணிலா நகரிலிருந்து வேரித்தாஸ் வானொலியில், 1976 முதல், தமிழ்க் குரல் ஒலிக்கத் துவங்கியது. சுமையான பெரிய வால்வு ரேடியோ குறைந்து, டிரான்சிஸ்டர் வரத் துவங்கிய காலம் அது. நீண்டநேரம் காத்திருந்து, இந்த வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டவர்கள் பலர்.
அழகிய தமிழில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன. இன்றைய வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்போருக்கு பெரும் பாடம். இன்றைய தொகுப்பாளர்கள், அந்த குரலை கேட்டு படிக்க வேண்டும்.
அப்போது தான், எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்ற உண்மை தெரிய வரும். நேயர்கள், ஆய்வு மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என்ற முப்பரிமாணப் பார்வையில், வேரித்தாஸ் வானொலி பற்றி, 40 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து தமிழ் வானொலி கேட்டவர்களின் அனுபவம் கட்டுரைகளாகியுள்ளன. வேரித்தாஸ் வானொலி பற்றிய நினைவில் அசைபோட விரும்பும் அனைவரையும் கவரும்.
- முகிலை ராசபாண்டியன்


03. வைசூரி நோய் மருத்துவம்ஆசிரியர்: மருத்துவர் சிதம்பரதாணுப்பிள்ளை
வெளியீடு: சித்தா மெடிக்கல் லிட்ரேச்சர் ரிசர்ச் சென்டர், சென்னை - 102.
தொலைபேசி: 044 - 26192906
பக்கம்: 158 விலை: ரூ.350


latest tamil news


Advertisementமனித இனத்தையும், பருவ காலங்களையும் இயற்கையிலிருந்து பிரிக்க முடியாது. பருவ கால மாற்றங்கள், மனித நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இயற்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியற்ற மக்களைப் பலவகையிலும் வாட்டி வதைப்பது வைசூரி நோய்.
அது முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என, விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. 64 வகை வைசூரி நோய்கள் விளக்கப்பட்டுள்ளன. வைசூரிக்கான காரணம் துவங்கி, நோயின் தன்மை, அறிகுறி, வீரிய விளைவு, பின் விளைவு, மருத்துவ சிகிச்சை, மருந்து வகைகள், எச்சரிக்கை என அனைத்தும் உள்ளடக்கிய நுால். மாற்று மருத்துவ ஆர்வலர்களுக்கு பயன் தரும்.
- மெய்ஞானி பிரபாகரபாபு


04. தேனீர் குவளையில் சூறாவளிஆசிரியர்: ஜோஸ்னா ஜோன்ஸ்
வெளியீடு: கைத்தடி பதிப்பகம், 1/168, கிழக்கு கடற்கரை சாலை,
பாலவாக்கம், சென்னை - 41.
அலைபேசி: 95662 74503
பக்கம்: 134 விலை: ரூ.225


latest tamil news
ஆப்ரிக்க நாடான சூடானில் வசிக்கும் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் பெயர்த்துள்ளார் பிலிப் சுதாகர். வள வள தாளில், பொருத்தமான ஓவியங்களுடன் இணைத்து, புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. 'வலிகளற்ற மகிழ்ச்சிக்கு மதிப்பு ஏதும் இல்லை...' என, முதல் கவிதை சொட்டுகிறது. வாழ்வின் தகிப்பை கேள்விகளாக்கி, சொல்லில் சிற்பம் செதுக்கும் முயற்சியாக, மன உணர்வின் வெளிப்பாடாக உள்ளது.
ஒரு பலவீனமான கவசம் அணிந்தவரின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் சொற்கள் கோர்க்கப்பட்டுள்ளன. வாசிப்பு, காட்சி, அனுபவம் என்பவனவற்றின் ஊடாக பயணப்படுகிறது. சூழலின் சுமையை உள்வாங்கிய சொற்சித்திரம். இயற்கையை வினோதமாக ரசிப்பது தான் கவித்துவம். அந்த பண்பு பல கவிதைகளில் வெளிப்பட்டு உள்ளது. சிந்தனை என்ற தலைப்பில், 'நிலவு நொறுங்கி இரவானது...' என்கிறார். உணர்வை நிரப்பும் புதிய வரவு.
- அமுதன்


05. தமிழகக் கலைகள்ஆசிரியர்: மா.இராசமாணிக்கனார்
வெளியீடு: அழகு பதிப்பகம், வில்லிவாக்கம், சென்னை - 49.
தொலைபேசி-: 044 - 2650 2086
பக்கம்: 120 விலை: ரூ.100


latest tamil news
ஆயகலைகள், 64 என்பர். 11 வகையான தமிழக கலைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நுால். கலை படைப்புகளாக விளங்குபவற்றை விவரிக்கிறார். முதலாவது எழுதியுள்ளது கட்டடக்கலை. இதன் அழகையும், நுட்பத்தையும் விளக்கியுள்ளார். தொடர்ந்து ஓவியம், சிற்பம், வார்ப்பு, இசை, நடனம், நாடகம், மருத்துவம், சமயம், தத்துவம், இலக்கியம் என, தனித்தனியே கலைகளை விவரிக்கிறார்.
நுட்பமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை அழகுற வெளிப்படுத்துகிறது இந்நுால். படிப்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, வாழ்க்கையை வளப்படுத்த உதவுகிறது. பல செய்திகளை மனம் கவரும் வகையில் கூறுகிறது. கலைகளில் ஈடுபாடு கொள்ளச் செய்வதாக அமைகிறது. கலைகளை தாங்கியுள்ள இந்த நுாலை தமிழன்னை மகிழ்வுடன் ஏற்பாள்.
- முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்


06. சைவ சமயம்ஆசிரியர்: மா.இராசமாணிக்கனார்
வெளியீடு: அழகு பதிப்பகம், சென்னை - 49.
அலைபேசி: 94441 91256
பக்கம்: 108 விலை: ரூ.100


latest tamil news
சைவ சமயம் பற்றி அறிமுகம் செய்யும் நுால். சமயம் என்பது சமைத்தல் எனும் வேர்ச்சொல்லில் பிறந்தது என்கிறார். வாழ்வை பக்குவமடையச் செய்தல் என்ற பொருளில் கூறுகிறார். சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவன் பற்றிய விபரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
வரலாற்று ரீதியாக, சைவ சமயத்தை அணுகி, தகவல்களை பதிவு செய்துள்ளார். சங்க காலத்துக் கோவில்கள் பற்றியும் ஆய்வு செய்துள்ளார். கால எல்லையை கடந்து பார்க்கும் நுால்.
- த.பாலாஜி


07. அண்ணல் காந்தியடிகள் வாழ்க்கை வரலாறுதொகுப்பாசிரியர்: கிஷோர் பிரசாத்
வெளியீடு: பாரதி புக் ஹவுஸ், வேலுார்.
அலைபேசி: 99424 41751
பக்கம்: 108 விலை: ரூ.60

மகாத்மாவின், 150ம் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள நுால். காந்தியின் அரிய புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன; விளக்கங்களுடன் அவை அமைந்துள்ளன.
அவரது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை நினைவூட்டி, மனதில் எழுச்சி ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. மகாத்மா என்பது மாபெரும் கடல்; நீந்தி களிக்க நிறைய உண்டு. அந்த கடல் பற்றி எளிய அறிமுகமாக உள்ளது இந்த நுால்.


08. கல்யாணிஆசிரியர்: வல்லிக்கண்ணன்
வெளியீடு: காவ்யா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை - 24.
தொலைபேசி: 044 - 2372 6882
பக்கம்: 587 விலை: ரூ.580


latest tamil news
படிப்பதையும், எழுதுவதையுமே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்தவர், பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன். அவரது புனைவுகள் அற்புதமானவை; நுட்பமானவை. அந்த கால சமூகத்தை படம் பிடிப்பவை. அவை, சிறுகதைகளாகவும் மலர்ந்துள்ளன. அவற்றில் ஒரு பகுதியை தொகுத்துள்ள நுால்.
கடந்த, 1955 முதல், 1991 வரை எழுதியவை தொகுக்கப்பட்டுள்ளன. நெஞ்சுக்கு நீதியாக விளங்குகிறது. தமிழ் இலக்கியத்தில் பொக்கிஷமாக போற்ற வேண்டியது!
- எஸ்.குரு

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
26-ஜூலை-202017:59:16 IST Report Abuse
sankaseshan KA.நீலகண்ட சாஸ்திரிகள் சிறந்த ஆராய்ச்சி யாளர் நம்ப தக்கவர் எழுத்தாளர்கள் இவர் புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டலாம் .
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
26-ஜூலை-202017:31:00 IST Report Abuse
Bhaskaran தமிழக சரித்திர நாவலாசிரியர்கள் அனைவரும் ஒரு நூல் ஆதாரமாக இல்லாமல் தங்கள் கதை எழுத முடியாது .அது பன்மொழிப்புலவர் அப்பாதுரையார் எழுதிய தென்னாட்டு போர்க்களங்கள் .
Rate this:
Cancel
vijayakumar ganesan - doha,கத்தார்
26-ஜூலை-202016:37:37 IST Report Abuse
vijayakumar ganesan மிக நல்ல முயற்சி, நல்ல நூல்களை பற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X