இந்தியா, ஐ.நா., செல்வதை தடுக்கவே அவசர சட்டம்: பாக்., விளக்கம்| Dinamalar

இந்தியா, ஐ.நா., செல்வதை தடுக்கவே அவசர சட்டம்: பாக்., விளக்கம்

Added : ஜூலை 26, 2020
Share
 இந்தியா, ஐ.நா., செல்வதை தடுக்கவே அவசர சட்டம்: பாக்., விளக்கம்

இஸ்லாமாபாத்:குல்பூஷண் யாதவ் வழக்கு தொடர்பாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா முறையிடக் கூடாது என்பதற்காகவே, அவருடைய சீராய்வு மனுதாக்கலை அனுமதிக்கும் அவசர சட்டம் பிறப்பித்ததாக, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படையின் முன்னாள் வீரர், குல்பூஷண் யாதவ், பாக்.,கில் உளவு பார்த்ததாக கூறி, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம், மரண தண்டனை விதித்தது.இதை எதிர்த்து, இந்தியா, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.அதில், 'குல்பூஷண் யாதவ் வழக்கை நியாயமான முறையில் சீராய்ந்து, மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, பாக்.,கிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன், குல்பூஷணை சந்திக்க, இந்திய துாதரகத்திற்கு அனுமதி வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், பாக்., கடந்த, மே, 20ல், குல்பூஷண் யாதவ், சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு வசதியாக, அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாக்., பார்லிமென்டில், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். குல்பூஷண் யாதவை காப்பாற்றவே, அவசர சட்டம் தாக்கல் செய்யப்பட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதை மறுத்து, பாக்., சட்ட அமைச்சர், நசீம், பார்லி.,யில் பேசியதாவது:சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றித் தான், குல்பூஷண் யாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, சீராய்வு மனுதாக்கல் செய்வதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.இந்த சட்டம், யாதவை மன்னித்து விடுவிக்க கொண்டு வரப்படவில்லை. இந்தியா ஏற்கனவே, தீர்ப்பை அமல்படுத்துவதில் தாமதம் செய்வதாக கூறி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் முறையிடுவதற்கான ஏற்பாடுகளை துவக்கி விட்டது.

இதன் மூலம், பாக்., சட்டத்தை மதிக்காத முரட்டு நாடு என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அனைத்து வித தடைகளையும் விதிக்க, இந்தியா திட்டமிட்டிருந்தது. இதை தடுக்கவே, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.இல்லையெனில், இந்தியா, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், பாக்., குறித்து புகார் செய்திருக்கும். இந்த சட்டம், இனி இதுபோன்ற விவகாரங்களில், சர்வதேச நீதிமன்றத்தை யாரும் அணுகாமல், பாக்., நீதிமன்றத்தை அணுகவும் வகை செய்கிறது என்பதை, எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

இதையடுத்து, குல்பூஷண் யாதவ் தண்டனை தொடர்பாக, இந்தியா விரைவில் சீராய்வு மனுதாக்கல் செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X