பணி முடிக்க ஆளுங்கட்சிக்கு மணி: மணி மூலமா வசூலிச்ச அதிகாரிகளுக்கு சனி| Dinamalar

பணி முடிக்க ஆளுங்கட்சிக்கு 'மணி': மணி மூலமா வசூலிச்ச அதிகாரிகளுக்கு 'சனி'

Added : ஜூலை 26, 2020
Share
அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அதிகாரியை சந்தித்து விட்டு, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் அவிநாசி ரோட்டில் திரும்பி வந்தனர். சிக்னலில் இடது புறம் திரும்பி, இதய தெய்வம் மாளிகைக்கு அருகில் உள்ள டீக்கடை முன், வண்டியை நிறுத்தி, இரண்டு டீ ஆர்டர் கொடுத்தனர்.''அக்கா, டிராவல்ஸ்காரர் ஆபீஸ் இந்த பக்கம்தான் இருக்குதாம்,''''யாரு, கார்ப்பரேஷன் ஆபீசருக்கு
பணி முடிக்க ஆளுங்கட்சிக்கு 'மணி': மணி மூலமா வசூலிச்ச அதிகாரிகளுக்கு 'சனி'

அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அதிகாரியை சந்தித்து விட்டு, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் அவிநாசி ரோட்டில் திரும்பி வந்தனர். சிக்னலில் இடது புறம் திரும்பி, இதய தெய்வம் மாளிகைக்கு அருகில் உள்ள டீக்கடை முன், வண்டியை நிறுத்தி, இரண்டு டீ ஆர்டர் கொடுத்தனர்.

''அக்கா, டிராவல்ஸ்காரர் ஆபீஸ் இந்த பக்கம்தான் இருக்குதாம்,''

''யாரு, கார்ப்பரேஷன் ஆபீசருக்கு நெருக்கமான நண்பருன்னு சொன்னாங்களே, அவரது ஆபீசா? எந்த வேலையா பெரிய ஆபீசரை, யார் சந்திக்க போனாலும்... முதல்ல நீங்க போயி, 'மணி'ய பார்த்துட்டு வாங்கன்னு...' சொல்வாங்களே?' என, சித்ரா, திருப்பிக் கேட்க, ''ஆமாக்கா, 'பார்ட்டி பண்ட்'ங்கிற பெயருல லட்சக்கணக்குல பிசினஸ்மேன்களிடம், அந்த டிராவல்ஸ்காரர் மூலமா, ஆபீசர்ஸ் சுரண்டுற விஷயம், ஆளுங்கட்சி வி.ஐ.பி., காதுக்கு போயிருக்கு. உடனே, நாலு அதிகாரிகளை வரச்சொல்லியிருக்காரு.

''வீட்டில் பூட்டிய அறைக்குள், முதலில், இரண்டு பேரிடம் விசாரணை நடத்தியிருக்காரு. அப்புறம், மற்ற இரு அதிகாரிகளை வரவழைச்சு பேசியிருக்காரு. கட்சி நடத்துறது யாரு; கட்சி பெயரைச் சொல்லி, நிதி வசூலிக்கிறதுக்கு, ஒங்களுக்கு யாரு 'பர்மிஷன்' கொடுத்தது. இதுக்கு, அந்த 'மணி' தானே, காரணம்னு, டிராவல்ஸ்காரர் பெயரை சொல்லி, 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கியிருக்காராம்,''

டீயை வாங்கி உறிஞ்சிய மித்ரா, ''ரொம்பத்தான் நேர்மை போ. ஆமா, ஆளுக்கட்சி வி.ஐ.பி.,க்கும், கார்ப்பரேஷன் ஆபீசருக்கும் 'ரிலேஷன்ஷிப்' சரியில்லைன்னு சொல்றாங்களே,'' என, கிளறினாள்.

''ஆமா, மித்து! நானும் கேள்விப்பட்டேன். வி.ஐ.பி., வீட்டிலும், அவரை சுத்தியிலும் நடக்குற விஷயங்கள், ஒருத்தர் மூலமா, கார்ப்பரேஷன் ஆபீசருக்கு போயிருக்கு. வி.ஐ.பி., 'மூவ்' தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி, நகர்வுகளை ஆபீசர் செஞ்சிருக்காரு. இதை தெரிஞ்சுக்கிட்ட வி.ஐ.பி., ஆபீசரை, 'வார்னிங்' குடுத்திருக்காராம்,''

''ஆய்வு கூட்டத்திலும், கடுமையா நடந்துக்கிட்டாராமே,''

''கொரோனா பரிசோதனை முடிவு, லேட்டாகிட்டு இருக்குற விஷயத்தை கேள்விப்பட்டுதான், ஆய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்காரு, அமைச்சர். முதல் தடவையா, செக்ரட்டரியும் கலந்துக்கிட்டாரு,''

''வழக்கமா, கோவை கலெக்டர் ஆபீசில்தான், மினிஸ்டர் ஆய்வு கூட்டம் நடக்கும். கலெக்டருக்கே, 'கொரோனா' பாதிப்பு ஏற்பட்டதால், இம்முறை கார்ப்பரேஷன் ஆபீசில் விக்டோரியா ஹாலில் நடத்தினார். சரியான தகவல் சொல்லாத அதிகாரிகளை, 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கியிருக்கிறார்.

கார்ப்பரேஷன் கமிஷனரை பார்த்து, ''சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர், எப்படி வேலை செய்றாருன்னு பாருங்க. 'கொரோனா' தடுப்பு பணியை கண்காணிக்க, எத்தனை குழுக்கள் அமைச்சிருக்கீங்க; இதுவரை எவ்வளவு மெடிக்கல் கேம்ப் நடத்தியிருக்கீங்க? நெறைய முகாம்கள் நடத்தினால்தானே, பரவலை தடுக்க முடியும். கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள், 5,000 முகாம் நடத்தியாகணும்னு உத்தரவு போட்டாராம்,''

''அதிருக்கட்டும், கழிப்பறைக்கு பக்கத்துல வச்சு, ஸ்நாக்ஸ் கொடுத்தது சர்ச்சையாச்சாமே,'' என, கிளறினாள் மித்து.

''அதுவா, கூட்டம் நடந்த, விக்டோரியா ஹால் ஜன்னல் திறந்திருந்ததால, பேசுற விஷயங்கள் வெளியே கேட்டுச்சு. செய்தி - மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள், பத்திரிகையாளர்களை அழைச்சிட்டு போயி, கழிப்பறைக்கு பக்கத்துல ஸ்நாக்ஸ் கொடுத்திருக்காங்க. முகம் சுழிச்ச சில பத்திரிகையாளர்கள், உபசரிப்பை தவிர்த்திட்டாங்களாம்,'' என்ற சித்ரா, ஸ்கூட்டரை 'ஆன்' செய்து, காந்திபுரம் நோக்கி, பாலசுந்தரம் ரோட்டில் முறுக்கினாள்.

பின் சீட்டில் அமர்ந்திருந்த மித்ரா, வட்டார போக்குவரத்து அலுவலகத்தை பார்த்ததும், ''அக்கா, கும்மிடிபூண்டி பக்கத்துல, நம்மூரு பதிவு எண்ணுள்ள காருல இருந்து, 5.5 கோடி ரூபாயை கைப்பத்துனாங்களே, விசாரிச்சீங்களா,'' என, கேட்டாள்.

''அதுவா, நகைக்கடை அதிபருக்கு வர வேண்டிய தொகையாம். ஆந்திராவை சேர்ந்த நகைக்கடை ஊழியரிடம் இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் விசாரிச்சிட்டு இருக்காங்க. கணக்கு காண்பிச்சிட்டு, பணத்தை வாங்கிருவாங்கன்னு சொல்றாங்க,''

விமன்ஸ் பாலிடெக்னிக் முன், சிக்னலை கடந்தபோது, கலெக்டர் அலுவலக வாகனம் முந்திச் சென்றது.

அதைப்பார்த்த மித்ரா, ''கலெக்டருக்கே, 'கொரோனா' பாதிப்பு வந்ததும், பதைபதைப்புக்கு உள்ளாகிட்டாங்களாமே,'' என, கேட்டாள்.

''ஆமாப்பா, அன்னிக்கு ராத்திரி, 11:30 மணிக்கு உடல் வெப்பம் அதிகமானதை உணர்ந்திருக்காரு. கொஞ்சமும் தாமதிக்காம, மருத்துவ குழுவை வரவழைச்சு, 'செக்கப்' செஞ்சிருக்காரு. காய்ச்சல் அளவு அதிகமா இருந்ததால, மருத்துவனைக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க,''

''அட்மிட் ஆக வேண்டிய சூழல் தெரிஞ்சதும், தனக்கு தேவையான பொருட்களை எடுத்து வர, மனைவிக்கு சொல்லியிருக்கார். நள்ளிரவு, 12:00 மணியை தாண்டி விட்டது. இருந்த போதிலும், உதவிக்கு அரசு அதிகாரிகளையோ, அலுவலர்களையோ அழைக்காமல், இரு மகள்களையும், உறவினர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு, கலெக்டருக்கு தேவையான பொருட்களை, தங்களது சொந்த காரில் எடுத்துச் சென்று, ஒப்படைத்திருக்கிறார், அவரது மனைவி,''

''இதுல இருந்து என்ன புரியுது. கொரோனாவுக்கு அதிகாரியா, ஆபீஸ் பியூனான்னு தெரியாது; யாருக்கு வேண்டுமானாலும் வரும்ங்கிறது, நம்மூர்ல நடந்த ஒரு உதாரணம்,''

''வி.ஐ.பி.,யும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்கிறாராமே,'' என, நோண்டினாள் மித்ரா.

''யெஸ், உண்மைதான்! 'ஏ' அறிகுறியாம். தோட்டத்து வீட்டில், குடும்பத்தினருடன் தங்கியிருக்கிறாராம். புதுசா பொதுக்குழாய், தெருவிளக்கு அமைச்சா கூட, அவரது கரங்களால்தான், மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்யணும்னு, எப்பவும் விடாப்பிடியா இருப்பாரு.

''ஆனா, விழாவே நடத்தாம, ஈச்சனாரி பாலத்தை பயன்பாட்டுக்கு திறந்திட்டாங்க. இது சம்பந்தமா விசாரிச்சப்ப, தனித்திருப்பதாக சொன்னாங்க,'' என்றாள் சித்ரா.

''ஓ... அப்படியா... சங்கதி, இனியாவது, 'கொரோனா' நோயாளிகளுக்கு டிரீட்மென்ட் நல்லா இருக்கும்னு நெனைக்கிறேன்,'' என்ற மித்ரா, ''ஆளுங்கட்சி பெயரில் ஆட்டம் போடுறவங்க ஜாஸ்தியாகிட்டாங்களாமே,'' என, கிளறினாள்.

''சித்திரைச்சாவடி அணைக்கட்டுல நடந்ததை கேக்குறியா, 4 பேரு, நீர் நிலையில ஒக்கார்ந்து, மது அருந்திக்கிட்டு இருந்தாங்க. அந்த வழியா போன சமூக ஆர்வலர்கள் சத்தம் போட்டு, ஆலாந்துறை போலீஸ்க்கும், ரூரல் எஸ்.பி.,க்கும் தகவல் சொல்லியிருக்காங்க,''

''போலீஸ்காரங்க விசாரிச்சபோது, 'நாங்க யாரு தெரியுமா; வடவள்ளிக்காரர் ஆட்கள்' என, திமிருடன், மிரட்டியிருக்கின்றனர். சிறிது நேரத்தில், வடவள்ளி, தொண்டாமுத்துார் ஸ்டேஷன்ல இருந்து, அவர்களை விடச் சொல்லி, ஆலாந்துறை போலீஸ்சுக்கு நெருக்கடி வந்திருக்கு,''

''வேறு வழியில்லாம, வழக்கு பதியாம விட்டுட்டாங்க. இந்த விஷயம் எஸ்.பி.,க்கு தெரிஞ்சதும், செம டோஸ் விழுந்திருக்கு. அந்த நாலு பேரையும் தேடி பிடிச்சு, ஸ்டேஷனுக்கு வரவழைச்சு, ஒரு நாள் முழுக்க உட்கார வச்சிருக்காங்க. அதுக்கு பின்னாடி, 'டம்மி'யா ஒரு வழக்கு பதிவு செஞ்சு விட்டுட்டாங்க,''''வன காப்பாளர் ஒருத்தரை தாக்கியதா சொன்னாங்களே,'' என, மறுபடியும் வம்புக்கு இழுத்தாள் மித்ரா.

''அது, இரண்டாவது சம்பவம், மித்து. அ.தி.மு.க., கட்சி கொடி கட்டிய காரில் வந்த, 4 பேரு, நரசீபுரம் ஜவ்காடு பகுதியில், யானை நடமாடும் ஏரியாவில், மது அருந்தியிருக்காங்க. அதை தட்டிக்கேட்ட, வன ஊழியர் மீது தாக்குதல் நடத்தியிருக்காங்க. விவசாயிகள் உதவியோடு, அவுங்களை பிடிச்சு, ஆலாந்துறை போலீசுல வனத்துறையினர் ஒப்படைச்சாங்க.

''ஆனா, அரசாங்க ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது; பணி நேரத்துல அவர்களை தாக்கியது போன்ற குற்றங்களை சேர்க்காமல், சாதாரண பிரிவுல வழக்கு பதிஞ்சு, ஸ்டேஷன் ஜாமின்ல விட்டுட்டாங்களாம்,'' என்றபடி, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் வழியாக, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

''அக்கா, பாரஸ்ட் சம்மந்தமா, நானும் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். சித்திரைச்சாவடி அணைக்கட்டு பக்கத்துல இருக்குற ஒரு தோட்டத்துல, வனத்துறை பர்மிஷன் வாங்காம, தேக்கு மரங்களை வெட்டிட்டாங்களாம். இதை விசாரிச்ச அதிகாரி, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிச்சிருக்காரு; ஆனா, அஞ்சாயிரத்துக்குதான் ரசீது கொடுத்தாராம்,''.

''இதே மாதிரி, முயல் பிடிச்சவங்களிடம், தலா, 10 ஆயிரம் கறந்திருக்காரு. கூடுதலா வசூலிக்கிறதை யாருக்கும் பங்கு பிரிச்சுக் கொடுக்காம, அவரே வச்சிருக்கிறாராம். போளுவாம்பட்டி வட்டாரத்துல வனத்துறை ஊழியர்கள் மத்தியில புகைச்சல் ஓடிக்கிட்டு இருக்கு,''

ஆடீஸ் வீதி வழியாக, உப்பிலிபாளையம் சிக்னலை கடந்து வந்தபோது, போலீஸ் கமிஷனர் ஆபீசை பார்த்த சித்ரா, ''போலீஸ் மேட்டர் எதுவுமே சொல்லலையே,'' என, கேட்டாள்.

''ஆமாக்கா, தடாகத்துல புதுசா ஆரம்பிச்சிருக்கிற ஸ்டேஷனன்ல, 9 போலீஸ்காரங்கதான் இருக்காங்களாம். 10 நாளா, சின்ன தடாகம் ஏரியாவுல, திருட்டு, திருட்டு முயற்சி அதிகமா நடக்குதாம். போலீஸ்காரங்க, ரோந்து வர்றதே இல்லையாம்,''.

''அமைதியா இருந்த கிராமங்கள்ல, திருட்டு பயம் ஆரம்பிச்சிருக்கு. புதுசா வந்திருக்கிற எஸ்.பி., புறநகர் ஏரியாவுல சாட்டையுடன் ஒரு ரவுண்ட் வந்தா, நல்லா இருக்கும்னு கிராம மக்கள் பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.வீட்டுக்குச் செல்ல, ஸ்கூட்டரின் வேகத்தை அதிகப்படுத்தினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X