சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

வேலை கொட்டி கிடக்குது!

Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வேலை கொட்டி கிடக்குது!

பொன்.கருணாநிதி, கோட்டூர், பொள்ளாச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: படித்தோருக்கு, வேலை தேடுவது என்பதே, இங்கு ஒரு பெரிய வேலையாக போய் விட்டது!அரசுப் பணிக்காக எழுத்துத் தேர்வு, சில ஆண்டுகளாக நடைபெற்று வருவதால், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதையே, பலர் புறக்கணித்து விட்டனர்.

அப்படி இருந்தும் கூட, சமீபத்திய புள்ளி விபரப்படி, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, காத்திருப்போர் எண்ணிக்கை, 68 லட்சம் பேர் எனும் போது, வியப்பாக உள்ளது. உண்மையில், தமிழகத்தில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை, ஒரு கோடிக்கும் மேலாக இருக்கும்.'படிப்புக்கு ஏற்ற வேலை' என்பதெல்லாம், இங்கே பழங்கனவாக போய் விட்டது. இன்றைய சூழ்நிலையில், அரசாலும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது.

எனவே, அரசு வேலைக்கு செல்வதெல்லாம், மிக சிலருக்கு மட்டுமே சாத்தியமானது; பிறர், தனியார் துறையை தேடுவதை தவிர, வேறு வழி இல்லை.இன்றைய இளைஞர்கள், கவுரவம் பாராது, எந்த பணிக்கும் செல்ல தயாராக உள்ளனர் என்பது, எதார்த்தமான உண்மை.

பட்டதாரி இளைஞர்கள், துப்புரவு பணியாளர் பணிக்கு செல்ல விரும்புவதும், '100 நாள்' வேலை வாய்ப்புத் திட்ட பணிக்கு செல்ல ஆயுத்தம் ஆவதும், மருத்துவக் கல்லுாரி மாணவர், நுங்கு விற்பதை பார்க்கும் போதும், ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும், மறுபக்கம் பெருமையாக இருக்கிறது.செய்யும் தொழிலே தெய்வம். எனவே, எந்த வேலையாக இருந்தாலும், அதை ஏற்றுச் செய்வதில் தவறு இல்லை.

உழைத்து உண்பதை விடவும், உயர்ந்த செயல், உலகில் வேறு எதுவும் இல்லை.'கொரோனா' வந்த பின் தான், வட மாநிலத் தொழிலாளர்கள், பல லட்சம் பேர், தமிழகத்தில் பணியாற்றிய விபரமே, பலருக்கும் தெரிந்திருக்கிறது. சொந்த ஊருக்கு இடம் பெயர்ந்த, அந்த உழைப்பாளியின் பணி இடங்கள், தமிழகத்தில் இன்று, காலியாக உள்ளன.கட்டுமானத் துறை துவங்கி, ஓட்டல் வரை, காலி பணியிடங்கள் நிறைய உள்ளன.

எனவே, தமிழக இளைஞர்கள், கவுரவம் பாராது, இப்பணிகளில் சேர வேண்டும். அரசுப் பணிக்கு முயற்சிப்பது, தவறு இல்லை. அதற்கு முயற்சித்தபடியே, தனியார் நிறுவனங்களில் பணி புரியலாமே.

***


பார்வையற்றோர் தடவும் யானை!


ஏ.ஸ்ரீவாஸ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா'விற்கு நிரந்தர தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, அந்நோய் தொடர்பான குழப்பங்கள் தீரவே தீராது!அந்நோய் தொற்று காற்றில், வியர்வையில், சளியில் என, எவ்வகையில் பரவுகிறது என, திடமாக அறிவிக்கப்படவில்லை.நோய் பரவலை தடுக்க முகக் கவசம், சமூக இடைவெளி, மாத்திரை, நோய் எதிர்ப்பு சக்தி உணவு என, பல வழிமுறைகளை, அரசு அறிவித்துள்ளது.

இவை, அந்நோய் பரவலை முழுமையாக தடுக்குமா என்றால், அதற்கு உறுதியான பதில் இல்லை.கொரோனா பரவ ஆரம்பித்த நாளில் இருந்தே, முகக் கவசம் அணிவது பற்றி, முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்தபடியே இருக்கின்றன. சுவாசக் கருவியுடன் கூடிய, 'என் - 95' என்ற முகக் கவசம் மட்டுமே, நோய் பரவலைத் தடுக்கும் என, சில ஆய்வுகள் தெரிவித்தன.

இதனால் பலர், விலை அதிகமிருந்தாலும், அந்த முகக் கவசத்தை பயன்படுத்த துவங்கினர். இப்போது, மத்திய சுகாதாரத்துறை, 'என் - -95 முகக் கவசம் அணிய வேண்டாம்' என, அறிவுறுத்தியுள்ளது. அப்படியென்றால், இதுநாள் வரை, அந்த கவசங்களை வாங்கி உபயோகித்தோர் நிலை என்ன?

கொரோனாவைப் பொறுத்தவரையில், இது மட்டுமல்ல... பல்வேறு குளறுபடிகளும், குழப்பங்களும் நீடிக்கின்றன. தொற்று பரவுவது எப்படி, அது சமூக பரவல் ஆகிவிட்டதா, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா உட்பட, பல்வேறு கேள்விகளுக்கு, எண்ணிலடங்காத விடைகள் தரப்படுகின்றன!'ஹைட்ராக்சி க்ளோரோ குவின், ரெமிடீசிவேர், இபுஜேசிக், பாராசிட்டமால்' என, எந்த மருந்து, கொரோனாவுக்கு எதிராய் வேலை செய்யும்?

இந்த கூத்துகளுக்கு இடையில், நம் நாட்டில், இறப்பு எண்ணிக்கை குறையவில்லை; ஆனால், பிற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவு என, அரசிடம் இருந்து, 'பெருமை'யோடு, அறிக்கைகள் வெளியாகின்றன.நடக்கிற விஷயங்களை பார்த்தால், பார்வையற்ற, ஐந்து பேர், ஒரு யானையை தடவி, அதை விளக்கியது போல இருக்கிறது!

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடித்தல் தான்; அதற்காக, இறைவனை வேண்டுவோம்!

***


அரசுப் பள்ளிமாணவர்களின்நிலை என்ன?


பி.சிவகுரு, புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகத்தையே ஆட்டிப் படைக்கும், கொரோனா வைரசால், கல்வித்துறையும் பாதிப்பை சந்தித்துள்ளது.'ஆன்லைன்' கல்வி என்பது, இதுவரை, தமிழகத்தில், 50 சதவீதம் அளவிற்கு கூட சாத்தியமாகவில்லை. மேலும், பணம் படைத்தோரின் குழந்தைகள் படிக்கும், தனியார் பள்ளிகளில் தான், ஆன் லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அரசுப் பள்ளிகளில் படிக்கும், ஏழை - எளிய குழந்தைகள் பாடம் படிக்காமல், வீட்டில் இருக்கின்றன. இதனால், சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி விடாதா?ஆண்டு முழுதும் படிக்கும் குழந்தைக்கும், ஆறு மாதங்கள் மட்டும் கற்பிக்கப்படும் குழந்தைக்கும், தேர்வு நடத்தினால், அது முறையானதா?

'டிவி' வாயிலாக நடத்தப்படும் பாடத்தால், எத்தனை மாணவர்கள் பயனடைகின்றனர் என்பது தெரியவில்லை.எனவே, அரசு, ஒவ்வொரு கிழமையும், ஒவ்வொரு வகுப்பு மாணவர்கள் என, தனித்தனியாக பள்ளிக்கு வரவழைத்து, போதிய பாதுகாப்பு அம்சங்களுடன், பாடம் கற்பிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீதமுள்ள ஆறு நாட்களும், வீட்டில் படிக்கச் சொல்லி, குறிப்புகள் கொடுக்கலாம். 'டிவி' வழி கற்பித்தல் குறித்து, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.அரசு பள்ளியில் படிக்கும், ஏழை - எளிய மாணவர்களின் கல்வி குறித்தும், சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
27-ஜூலை-202006:08:09 IST Report Abuse
D.Ambujavalli மாணவர்கள் எந்தளவு மனதில் வாங்கிக் கொண்டனர், எவ்வளவு புரிந்தது என்ற ஒன்றையும் அறியாமல், டிவியில் பாடம் எடுத்துவிட்டுக் கடனை முடித்துக் கொள்வார் ஆசிரியர், தேர்வில் தவிக்கப்போவது ஆசிரியரில்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X