காங்., முன்னாள் தலைவர் ராகுல்: சட்டம் மற்றும் அரசியல் அமைப்பின்படி நாட்டில் ஆட்சி நடக்கிறது. மக்கள் உத்தரவுபடி பெரும்பான்மை அடிப்படையிலேயே அரசுகள் அமைக்கப்பட்டு ஆட்சி செய்கின்றன. ராஜஸ்தான் அரசை கவிழ்க்க, பா.ஜ., சதி செய்வது தெளிவாகியுள்ளது. இது, ராஜஸ்தானில் வசிக்கும், எட்டு கோடி மக்களையும் அக்கட்சி அவமதிப்பதாகும்.
'டவுட்' தனபாலு: காங்கிரசின், 'டிரேட் மார்க்' ஆக இருக்கும், கோஷ்டி மோதலை தீர்க்க, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இளம் தலைவர்களுக்கு ஆட்சி செய்ய வாய்ப்பு அளிக்காமல், பா.ஜ., மீது மட்டும் குற்றம்சாட்டுகிறீர்களோ என்ற, 'டவுட்' எழுகிறது. அசோக் கெலாட்டை விட்டால், ராஜஸ்தானில், முதல்வராக, காங்கிரசுக்கு ஆளே கிடையாதா; மாத்தி யோசியுங்க!
***
தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்: உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல்படி, இணை நோயால் இறந்தவர்களுக்கு தொற்று உறுதியானால் கொரோனா இறப்பாக கருதப்படுகிறது. எந்த மரணங்களையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. அரசு மருத்துவமனை, மயானங்களில் இறந்தவர்கள் குறித்து, பதிவு செய்யப்படுவதால், மறைக்கவும் முடியாது.
'டவுட்' தனபாலு: கொரோனா ஒழிப்பு மற்றும் சிகிச்சையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக, நடுநிலையாளர்கள் கூறுகின்றனர். எனினும், அவ்வப்போது ஏதாவது சிக்கலில் தானாக போய் சிக்கிக் கொள்கிறதோ என்ற, 'டவுட்' 444 கொரோனா மர்ம மரணம் போன்ற விவகாரங்களால் அவ்வப்போது எழுகிறதே!
***
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: 'மரம் நடும் அறமே மாபெரும் அறம்' என்பதற்கு இணங்க, என், 82வது பிறந்த நாளை, தமிழகம் முழுதும் உள்ள பாட்டாளி சொந்தங்கள், மரக்கன்றுகளை நட்டு கொண்டாடினர். மரம் நட்டவர்களுக்கு நன்றி.
'டவுட்' தனபாலு: 'ஆல் போல் தழைத்து, அருகுபோல வேரூன்றி, நீடுழி நீங்கள் வாழ வேண்டும்' என்பதை, 'சிம்பாலிக்காக' தெரிவிக்கும் வகையில், மரக்கன்றுகளை உங்கள் ஆதரவாளர்கள் நட்டிருப்பர். மேலும், இதனால் உங்கள் மீதான அவப்பெயர் நீங்கட்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருந்திருக்குமோ என்ற, 'டவுட்' வருகிறது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE