வட கொரியாவுக்குள் நுழைந்தது கொரோனா கேசாங் நகரத்தில் முழுமையான ஊரடங்கு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

சியோல் : உலகம் முழுதையும் புரட்டிப் போட்ட கொரோனா வைரஸ், தற்போது முதல் முறையாக வட கொரியாவுக்குள்ளும், தன் ஆட்டத்தை துவக்கி உள்ளது.

தென் கொரிய எல்லையை ஒட்டிய, கேசாங் நகரில் வசிக்கும் ஒருவருக்கு, கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த நகரின் எல்லைகள், 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. முழுமையான ஊரடங்கும் அமலுக்கு வந்துள்ளது.பாதிப்புசீனாவில் உருவான கொரோனா வைரஸ், இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், ரஷ்யா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. நம் நாட்டிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுதும், 1.6 கோடிக்கும் அதிகமானோர், இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர், இதுவரை உயிரிழந்துள்ளனர். ஆனாலும், கிழக்காசிய நாடான வட கொரியாவில், கொரோனா வைரசால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டு வந்தது. சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு வைரஸ் பரவத் துவங்கியதுமே, வட கொரியா அரசு, தன் எல்லைகளை மூடிவிட்டது. தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என, வட கொரிய அதிபர், கிம் ஜங் யுன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தென் கொரிய எல்லை பகுதியில் அமைந்துள்ள, வட கொரியாவின் கேசாங் நகரில் வசிக்கும் ஒருவருக்கு, கொரோனா அறிகுறி இருப்பதாகவும், ஐந்து நாட்களாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தீவிர கண்காணிப்பு : இது குறித்து, கொரியன் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: சில ஆண்டுகளுக்கு முன், தென் கொரியாவுக்குள் சட்டவிரோதமாக சென்ற ஒருவர், கடந்த வாரம், கேசாங் நகருக்கு திரும்பியுள்ளார். அவருக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அவர் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப் பட்டு வருகிறார். இந்த நகரில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்கள் வாயிலாக மற்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, இந்த நகரின் எல்லைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

இந்த நகரில் முழுமையான ஊரடங்கை அமல்படுத்தவும், அதிபர் கிம் ஜங் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக, வட கொரியாவில் இப்போது தான், முதல் முறையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வட கொரிய பொலிட் பீரோ கமிட்டியின் கூட்டத்திலும், இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 'மிக மோசமான வைரஸ், வட கொரியாவுக்குள் நுழைந்து விட்டது' என, இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X