தமிழக பா.ஜ., தலைவர் பதவியை எதிர்பார்த்த, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு, துணை தலைவர் பதவி வழங்கியதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவர், தி.மு.க.,வில் சேருகிறார் என்ற, தகவல் பரவியது. இதையடுத்து, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், அவரை சந்தித்து சமரசப்படுத்தியதால், தி.மு.க.,வுக்கு செல்லும் முயற்சி தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக பா.ஜ., தலைவர் பதவியை, நயினார் நாகேந்திரன் எதிர்பார்த்தார்; அப்பதவி கிடைக்கவில்லை. தமிழக பா.ஜ., நிர்வாகிகள் பட்டியல், சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், தலைவர் பதவிக்கு அடுத்ததாக, பொதுச்செயலர் பதவி தான், அக்கட்சியில் முக்கியமாக கருதப்படுகிறது. அதாவது, தமிழக பா.ஜ., எடுக்கும் முக்கிய முடிவுகளை ஆராய்வதற்கான, மையக் குழுவில் பங்கேற்க வேண்டும் என்றால், பொதுச்செயலர் பதவியில் இருக்க வேண்டும். எனவே, மற்ற பதவிகளை விட, பொதுச்செயலர் பதவியை பெறுவதில், கட்சியினர் ஆர்வம் காட்டுவர்.
நயினார் நாகேந்திரன் எதிர்பார்த்த தலைவர் மற்றும் பொதுச்செயலர் பதவி கிடைக்கவில்லை.அவருக்கு, துணை தலைவர் பதவி தான் வழங்கப்பட்டது. இதனால், அவர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தி.மு.க., துணைப் பொதுச்செயலராக இருந்த, வி.பி.துரைசாமி, பா.ஜ.,வில் இணைந்தார். அவரது வாயிலாக, தி.மு.க.,வில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு வலை விரிக்கப்பட்டது. அதேபோல், பா.ஜ.,வில் உள்ள அதிருப்தியாளர்களை இழுக்க வேண்டும் என, மாவட்டச் செயலர்களுக்கு, தி.மு.க., மேலிடம் உத்தரவிடப்பட்டது.

சமீபத்தில், பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேதரத்தினம் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த, பா.ஜ., நிர்வாகிகள் சிலர், தி.மு.க.,வில் இணைந்தனர். இந்த வரிசையில், நயினார் நாகேந்திரனையும் இழுக்க முயற்சி நடந்தது. இத்தகவல், தமிழக, பா.ஜ., தலைவர் முருகனுக்கு தெரிய வந்ததும், அவர், திருநெல்வேலிக்கு சென்று, நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசினார். அப்போது, முருகனுக்கு தடபுடல் விருந்து அளித்து உபசரித்தார், நயினார் நாகேந்திரன்.
இந்த சந்திப்புக்கு பின், நயினார் நாகேந்திரன், தி.மு.க.,வில் இணைய போகிறார் என்ற செய்திக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE