தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 1,000 காட்டுயானைகள் உயிரிழப்பு

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (7) | |
Advertisement
தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில், 1000க்கும் அதிகமான காட்டுயானைகள் உயிரிழந்துள்ள நிலையில், அவற்றின் உடற்கூராய்வு அறிக்கைகளை வனத்துறை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த, 2017ம் ஆண்டில் தேசிய அளவில் நடந்த யானைகள் கணக்கெடுப்பில், நாடு முழுவதும், 27 ஆயிரத்து 312 யானைகள் இருந்தன. அவற்றில், 10 சதவீத யானைகள், அதாவது, 2,761 யானைகள் தமிழகத்தில் இருப்பது கணக்கெடுப்பில்
elephant, elephants dead, Tamil Nadu, யானை, பலி, உயிரிழப்பு, தமிழகம்

தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில், 1000க்கும் அதிகமான காட்டுயானைகள் உயிரிழந்துள்ள நிலையில், அவற்றின் உடற்கூராய்வு அறிக்கைகளை வனத்துறை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த, 2017ம் ஆண்டில் தேசிய அளவில் நடந்த யானைகள் கணக்கெடுப்பில், நாடு முழுவதும், 27 ஆயிரத்து 312 யானைகள் இருந்தன. அவற்றில், 10 சதவீத யானைகள், அதாவது, 2,761 யானைகள் தமிழகத்தில் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது. தமிழகத்தில் நான்கு புலிகள் காப்பகங்கள், ஒன்பது வனக்கோட்டங்கள், நான்கு வன உயிரினச்சரணாலயங்களில் இவை பரவலாக வாழ்கின்றன.

யானைகளின் வாழ்விடப்பரப்பு குறைவது, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசு, பூச்சிக்கொல்லிகள், சட்டவிரோத மின்வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துகள், பயிர்களைக் காக்க விவசாயிகள் கையாளும் தவறான யுக்திகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.காட்டுயானைகள் தாக்கி உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் இதற்கு இணையாக உயர்ந்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில், காட்டு யானைகள் தாக்கி, மனிதர்கள் உயிரிழப்பது குறைந்துள்ளது. ஆனால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. கோவை, சத்தியமங்கலம் உள்ளிட்ட சில வனப்பகுதிகளில் யானைகள் உயிரிழப்பது அடிக்கடி நடக்கிறது. இது தொடர்பாக ஆய்வு செய்ய சிறப்புக்குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனஉயிரினம்) சேகர்குமார் நீரஜ் தலைமையிலான இக்குழுவில் வனத்துறை அதிகாரிகள், யானை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் என 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.குழு குறித்து சர்ச்சை


யானைகளின் எண்ணிக்கை மற்றும் பிரச்னைகள், மனித-யானை மோதல்கள், வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள சமூக பொருளாதாரப் பிரச்னைகளை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து, டிச.,31க்குள் தமிழக தலைமை வனஉயிரினப் பாதுகாவலரிடம் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு இக்குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. காட்டுயானைகள் இறப்பைப் பற்றி ஆய்வு செய்யும்போது, வனத்துறை அதிகாரிகளின் தவறுகளையும் விசாரிக்க வேண்டிய நிலையில், அத்துறை அதிகாரியை குழுவின் தலைவராக நியமித்ததே தவறு என்ற வாதம் கிளம்பியுள்ளது.

களப்பணியில் இல்லாத, யானை ஆராய்ச்சியை கைவிட்டு பல ஆண்டுகளானவர்களே குழுவில் இடம் பெற்றுள்ளதாக வனஉயிரின ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். உயிரியலாளர்கள், வன ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோரையும் நியமிக்க வேண்டும், அல்லது அந்தந்தப்பகுதிக்கான துணைக்குழு ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

கடந்த 2006 ஜனவரி முதல் 2020 ஜூன் 30 வரையிலான, 15 ஆண்டு காலத் தரவுகளை வைத்து இக்குழு ஆய்வு செய்யவுள்ளது. இவையனைத்தும் வனத்துறையால் தயாரிக்கப்பட்டவைதான். யானை ஆராய்ச்சியாளர்கள், வன உயிரின ஆர்வலர்கள் பலரும் தரும் தகவல்கள், வனத்துறை தகவல்களுடன் முரண்படுகின்றன.1013 யானைகள் இறப்பு


யானை ஆராய்ச்சியாளர்கள் பலரிடமும் தகவல்களைத் திரட்டி நாம் தொகுத்ததில் பல அதிர்ச்சிகரமான விபரங்கள் கிடைத்துள்ளன. 2010 முதல் 2019 வரையிலான பத்தாண்டுகளில் தமிழகத்தில் 1013 யானைகள் இறந்துள்ளன. இவற்றில் 427 ஆண் யானைகள்; 575 பெண் யானைகள்; அழுகிய நிலையில் உடல் கண்டறியப்பட்டதால் பாலினம் கண்டுபிடிக்க முடியாத யானைகளின் எண்ணிக்கை 10.

முதுமை, பிரசவம், வறட்சியால் ஏற்பட்ட உணவு பற்றாக்குறை மற்றும் நோய்களினால் 810 யானைகள் இறந்துள்ளன. 31 யானைகள் ஆந்த்ராக்ஸ்க்கு பலியானவை. நோய்த்தாக்குதல் காரணத்தைக் கண்டறிந்து, தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கான காரணிகளை இந்தக் குழுவினர் ஆய்வு செய்ய வேண்டுமென்று வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உதாரணமாக, கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் குறுகிய காலத்தில் எட்டு யானைகள் நோயினால் இறந்துள்ளன. சீமைக்கருவேலத்தை யானைகள் உண்பதால் அவற்றுக்கு செரிமானப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு விரைவில் இறக்கின்றன என்கின்றனர், யானை ஆராய்ச்சியாளர்கள். தண்ணீரில் கலக்கும் ரசாயனக்கழிவுகள், விளைபயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்து போன்றவையும் நோய்த்தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என்பதும் இவர்களின் சந்தேகம். இதையும் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யவேண்டும்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள 90 யானைகளில், 21 யானைகள், வனப்பகுதிகளிலும் மேய்ச்சல் நிலங்களிலும் தாழ்வாகவுள்ள மின் கம்பிகள் உரசியதால் பலியாகியுள்ளன. மற்றவை விளைநிலங்களில் முறைகேடாக வைக்கப்பட்டுள்ள மின்வேலிகளில் சிக்கி இறந்துள்ளன. கீழ்நிலை வனப்பணியாளர்களை அதிகப்படுத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்தினால் இவற்றைத் தடுக்கலாம்.

வனத்துறையில் ஆள் பற்றாக்குறை தீராத பிரச்னையாகவுள்ளது. வயதாகி பிணி வந்த பின்பே வனத்துறையில் பணி வழங்கப்படுவதால் பெரும்பாலான கீழ்நிலை வனத்துறையினர், காடுகளில் கால் வைப்பதேயில்லை. இதேபோல வனத்தை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் அதிகரிக்கும் குடியிருப்புகளும், சுற்றுலா விடுதிகளும் பெரும் அச்சுறுத்தலாகவுள்ளன. யானைகள் இயற்கையாக இறந்தாலும், மனிதர்களால் கொல்லப்பட்டாலும் ஒரே மாதிரியான பார்வையில்தான் உடற்கூராய்வுகளை மேற்கொள்வதே, யானைகளின் உயிருக்கு உலை வைப்பதாக யானை ஆராய்ச்சியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


latest tamil newsஅவர்கள் நம்மிடம் பகிர்ந்த சில விஷயங்கள்... ''காட்டு யானை இறந்துவிட்டால், உடற் கூராய்வு செய்வதற்கான குழுவை வனத்துறையினர்தான் முடிவு செய்கின்றனர். அதில் அவர்கள் சொல்வதன்படி அறிக்கையைக் கொடுக்கும் கால்நடை மருத்துவர், கேள்வி கேட்காத தன்னார்வலர் அல்லது வன உயிரின அமைப்புகளைச் சேர்ந்தவர்களை மட்டுமே இந்தக் குழுவில் சேர்க்கின்றனர். முன்முடிவுடனே உடற்கூராய்வை மேற்கொள்கின்றனர்.

கால்நடை மருத்துவர்கள் பலருக்கு, யானையின் உடற்கூறு பற்றியே பெரிதாக அறிவோ, அனுபவமோ இருப்பதில்லை. தெங்குமரஹடாவில், 2006ல், இரண்டு யானைகள் அருகருகே இறந்து கிடந்தன. இரண்டு உடல்களும் அழுகிவிட்டன. இரண்டும் ஆண் யானைகள். அவை வேட்டையாடப்பட்டு தந்தங்கள் அகற்றப்பட்டிருந்தன. ஆனால் புதிதாக பணியில் சேர்ந்த பீட் காவலர்களைக் காப்பாற்றுவதற்காக, ரேஞ்சரும் கால்நடை டாக்டரும் பேசி, யானைகளின் உடல்களில் தோட்டாக்கள் இருந்ததையே மறைத்து உடற்கூராய்வு அறிக்கை கொடுத்தனர்.

யானைகளைக் கொன்று தந்தங்களை வேட்டையாடியவர்கள், காட்டு வழியாகவே எளிதில் கர்நாடகாவுக்குச் சென்றிருப்பர். உண்மையை மறைக்காமல் உடற்கூராய்வு அறிக்கை கொடுக்கப்பட்டிருந்தால், கண்காணிப்பை தீவிரப்படுத்தி வேட்டையைத் தடுத்திருக்கலாம்.

'டியூமர்' காரணமாக முதுமலை அருகே மக்னா யானை இறந்தது. வயநாட்டில் அந்த யானையைக் கொல்ல பலமுறை சுட்டுள்ளனர். அதன் உடலில், 15 தோட்டாக்கள் இருந்தன. காய்வெடியில் வாய் கிழிந்து இறந்த, ஒரு யானையின் உடலில் ஆறு தோட்டாக்கள் இருந்தன. இவை எதுவுமே உடற்கூராய்வில் குறிப்பிடப்படவில்லை.

பழநி அருகே கொடைக்கானல் ரோட்டில், காட்டை ஒட்டியுள்ள பகுதியில் மானைக் கொல்வதற்காக வைக்கப்பட்டிருந்த யூரியா கலந்த தண்ணீரைக் குடித்து மக்னா யானை இறந்தது. பூச்சிக்கொல்லி மருந்து கலந்த உணவை அதிகமாக உண்டதால் யானை இறந்துவிட்டது என்று உடற்கூராய்வு அறிக்கை தரப்பட்டது. திட்டமிட்டே கலந்த யூரியாவைச் சாப்பிட்டதால் இறந்தது என்று அறிக்கை வந்திருந்தால், அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கலாம்.

வனத்துறைக்குப் பணியாற்றும் கால்நடை டாக்டர்களுக்கு, கையடக்க மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட நவீன உபகரணங்களை வழங்கி உடற்கூராய்வு சார்ந்த சிறப்புப் பயிற்சிகளையும் அளிக்க வேண்டும். இவற்றையெல்லாம் ஆய்வுக்குழு கருத்தில் கொண்டு, அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.'' என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

குழுவின் தலைவர் சேகர்குமார் நீரஜிடம் கேட்டதற்கு, ''உடற்கூராய்வு அறிக்கை குறித்த புகார்கள் எங்கள் கவனத்துக்கும் வந்துள்ளது. குழுவில் அனுபவமும் நிபுணத்துவமும் வாய்ந்த யானை ஆராய்ச்சியாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இடம் பெற்றுள்ளனர். அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் யானை ஆராய்ச்சியாளர்கள், வனஉயிரின ஆர்வலர்கள், தன்னார்வலர்களின் கருத்துகளைக் கண்டிப்பாகக் கேட்போம். குழுவின் அறிக்கை நிரந்தர தீர்வுகளைக் காணஉதவும்'' என்றார்.

கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தி, புத்துயிர் தந்தார் ஜெயலலிதா. அவருடைய வழியில் நடக்கும் இ.பி.எஸ்., அரசு, காட்டுயானைகளைக் காக்க ஆய்வுக்குழு அமைத்திருக்கிறது.
நல்லதே நடக்குமென்று நம்புவோம்!

''பல்வேறு பரிமாணங்களிலும் குழு ஆய்வு செய்யும். குழுவில் அனுபவமும் நிபுணத்துவமும் வாய்ந்த யானை ஆராய்ச்சியாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனாலும் அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் யானை ஆராய்ச்சியாளர்கள், வனஉயிரின ஆர்வலர்கள், தன்னார்வலர்களின் கருத்துகளைக் கண்டிப்பாகக் கேட்போம். குழுவின் அறிக்கை நிரந்தர தீர்வுகளைக் காணஉதவும்!''

-சேகர் குமார் நீரஜ், சிறப்பு ஆய்வுக்குழுவின் தலைவர்.எப்போது வருமோ 8 யானைகள் ரிப்போர்ட்?


உடற்கூராய்வு அறிக்கைகளில் தவறும் குளறுபடியும் இருப்பதால்தான், அவை ஆண்டுக்கணக்கில் வெளியிடப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது உண்மை என்பதற்கு ஆதாரங்களும் உள்ளன.

உதாரணமாக கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகத்தில், ஆறு மாதங்களில் இரண்டு ஆண் யானைகள் உட்பட எட்டு யானைகள் இறந்துள்ளன. பிப்., 26, ஏப்ரல் 7, 18, மே 11, ஜூன் 23, 25, ஜூலை 2,3 ஆகிய நாட்களில், இந்த யானைகளுக்கு உடற்கூராய்வு நடந்துள்ளது. ஆனால், இப்போது வரையிலும் அனைத்து யானைகளின் உடற்கூராய்வு அறிக்கைகளும் வெளியிடப்படாமல் நிலுவையில்தான் உள்ளன.2010-2019 வரை...


மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகள் - 90
வேட்டை மற்றும் துப்பாக்கி சூடு - 7
விஷம் வைத்து கொல்லப்பட்டவை - 3
ரயில் மற்றும் வாகன விபத்துகளில் இறந்தவை - 7
காய்வெடி கடித்து இறந்தவை - 3
ஆந்த்ராக்ஸ் நோயினால் இறந்தவை - 31

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
27-ஜூலை-202017:21:36 IST Report Abuse
வெகுளி அம்மாஜி தாயுள்ளதுடன் யானைகளை காத்து வந்தார்.... அவரது அரசு யானைகள் பாதுகாப்பில் விழிப்புடன் செயல் பட வேண்டும்...
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
27-ஜூலை-202016:49:31 IST Report Abuse
தமிழர்நீதி பழனி ஒரு வீரப்பன் ஆகிவிட்டார் .
Rate this:
Cancel
27-ஜூலை-202016:48:02 IST Report Abuse
சுப்பிரமணியன் வனத்துறை என்ன செய்து கொண்டு இருக்கின்றது. எவ்வளவு வனத்தை சூறையாடலாம், கொள்ளையடிக்கலாம் என்றுதான் அவர்களின் பெரும்பாலோரின் நடவடிக்கைகள். எதற்க்கு இந்த துறை மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், அமைச்சர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X