வில்லியனுார் அருகே இறந்தவருக்கு கொரோனா அடக்கத்திற்கு பின் முடிவு வெளியானதால் மக்கள் பீதி | Dinamalar

இந்தியா

வில்லியனுார் அருகே இறந்தவருக்கு கொரோனா அடக்கத்திற்கு பின் முடிவு வெளியானதால் மக்கள் பீதி

Added : ஜூலை 27, 2020
Share

வில்லியனுார்; இறந்தவரின் உடல் அடக்கம் செய்த பிறகு அவருக்கு கொரோனா தொற்று உறுதியான தகவல் தெரிந்ததால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.வில்லியனுார் அடுத்த தர்மாபுரி சாலை கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் கந்தசாமி,59; டிரைவரான இவர் கடந்த வாரம் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். உடன் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதன் முடிவு வருவதற்குள் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 20ம் தேதி இறந்தார்.அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவு கிடைப்பதற்குள், அரசியல் சிபாரிசினால் கந்தசாமியின் உடல் அடக்கம் செய்வதற்கு கிராமத்திற்கு கொண்டு வந்தனர். கடந்த 21ம் தேதி நடந்த அவரது இறுதி சடங்கில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.இந்நிலையில், கந்தசாமிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு கடந்த 22ம் தேதி கிடைத்தது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த தகவல் கூடப்பாக்கம் கிராமத்தில் காட்டு தீயாக பரவியதால், கிராம மக்கள் பீதியடைந்தனர்.அதனால், கந்தசாமியின் இறுதி சடங்கில் பங்கேற்ற அனைவரையும் கொரோனா பரிசோதனைக்கு சுகாதாரத்துறையினர் பரிந்துரை செய்தனர். முதல்கட்டமாக இறந்த கந்தசாமி குடும்பத்தில் 10 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் மூவரின் முடிவு நேற்று இரவு தெரிய வந்தது. அதில் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மற்றவர்களின் முடிவு கிடைக்காததால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X