பொது செய்தி

இந்தியா

அபாய மணியடிக்கும் வங்கிகளின் வாராக்கடன்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
Banks, Bad Debts, weekly credits, risk, danger

புதுடில்லி: இந்திய வங்கிகளின் வாராக்கடன் பிரச்னை மீண்டும் மோசமடையப் போகிறது என்று தெரிவிக்கிறது, கடந்த வாரம் வெளியான, இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஸ்திரத்தன்மை அறிக்கை. இதற்குக் காரணம் என்ன; என்ன பாதிப்புகள் நேரப் போகின்றன?

ஆண்டுக்கு இரு முறை, இந்திய ரிசர்வ் வங்கி, நிதிநிலை ஸ்திரத்தன்மை அறிக்கையை வெளியிடும். அதில், இந்தியாவில் உள்ள வங்கிகளின் பலம், பலவீனங்கள், பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய தெளிவுகள் வழங்கப்படும். கடந்த வாரம் வெளியான 21வது அறிக்கை, இதுநாள் வரை, பல்வேறு தர நிர்ணய அமைப்புகளும், ஆய்வு நிறுவனங்களும் கணித்ததையே பளிச்சென்று போட்டு உடைத்துவிட்டது. கடந்த மார்ச் மாத இறுதியில் 8.5 சதவீதமாக இருந்த பட்டியலிடப்பட்ட வங்கிகளின் ஒட்டு மொத்த வாராக்கடன் 2021 மார்ச் மாதம் இறுதிக்குள் 12.5 சதவீதத்தைத் தொடும். பொருளாதார சூழ்நிலைகள் இன்னும் மோசமாக இருக்குமானால், இந்த அளவு 14.7 சதவீதமாகவும் உயர வாய்ப்புண்டு.இதில், பொதுத் துறை வங்கிகள் தான் அதிகபட்ச பாதிப்பை சந்திக்கப் போகின்றன. 11.3 சதவீதத்தில் இருந்து 15.2 சதவீதமாக வாராக்கடன் உயரப் போகிறது.


நிதிநிலை அறிக்கை


தனியார் வங்கிகளின் வாராக்கடன் 4.2 சதவீதத்தில் இருந்து, 7.3 சதவீதமாகவும், வெளிநாட்டு வங்கிகளின் வாராக்கடன் 3.9 சதவீதமாகவும் உயரும் என்று தெரிவிக்கிறது, நிதிநிலை ஸ்திரத்தன்மை அறிக்கை. முந்தைய வாராக்கடன்களுக்கும் இந்த முறை ஏற்படப் போவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பொதுவாக, பெரிய தொழிலதிபர்கள், நிறுவனங்கள் ஆகியோர் வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகும்போது தான், வாராக்கடன் ஏற்படும். இதில் வேண்டுமென்றே வங்கிகளை ஏமாற்றியோரும் அடங்குவர். ஆனால், இம்முறை வேறு கதை. கொரோனா எல்லாரையும் புரட்டிப் போட்டுவிட்டது. விற்பனை இல்லை, உற்பத்தி இல்லை, வேலைவாய்ப்புகள் இல்லை.


latest tamil news


மொத்தத்தில், பொருளாதார பேரிழப்பை ஏற்படுத்திவிட்டது. இந்தச் சூழ்நிலையில் மத்தியஅரசும், ஆர்.பி.ஐ.,யும் ஒரு நடவடிக்கை எடுத்தன; கடன்களுக்கான மாதாந்திர தவணையை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைத்தன. அது நிறுவனக் கடனாக இருந்தாலும் சரி, தனிநபர்களின் வீட்டுக்கடனாக இருந்தாலும், இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டது. இதை அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அதாவது, இ.எம்.ஐ., ஒத்திவைப்பை 65 சதவீத சிறு, குறு, நடுத்தரத் தொழில்களும், 55 சதவீத தனிநபர்களும் 42 சதவீத கார்ப்பரேட்டுகளும் ஏற்றுக்கொண்டனர். இதை வேறு விதமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

கொரோனா காலத்தில் இவர்களால், வங்கிக் கடன்களைச் செலுத்த முடியாத அளவுக்கு வருவாய் வீழ்ச்சி. இத்தனைக்கும் வருங்காலத்தில் கூட்டுவட்டியோடு, மூலதனத்தைச் செலுத்த வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தாலும் பரவாயில்லை என்று, இவர்கள், இ.எம்.ஐ., ஒத்திவைப்பை ஏற்றுள்ளனர். அப்படியென்றால், உண்மையிலேயே இவர்களுடைய நிலைமை அபாயகரமாகவே இருப்பதாகக் கருத வேண்டும். ஆகஸ்ட் மாதத்துடன் ஆறு மாதங்கள் முடியவடையப் போகிறது. அதன் பின் தான் உண்மையான நிலைமை தெரியவரும்.

எத்தனை பேரால், நிறுவனங்களால், மீண்டும் கடன்களின் மாதாந்திரத் தவணைகளை ஒழுங்காகச் செலுத்த முடியும் என்று தெரியவில்லை. பல கடன்கள் மோசமாகிவிடலாம்; மூழ்கிப் போகலாம். வங்கிகள் மட்டுமல்ல; வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்கள் ஆகியவற்றிலும் வாராக்கடன் பெருகப் போவது உறுதி. முந்தைய தருணங்களில் பெருநிறுவனங்களால் வாராக்கடன்கள் பெருகின. ஆனால், இம்முறை நம்முடைய மத்தியமர்களும், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் திண்டாடுவதால் வாராக்கடன் பெருகப் போகிறது.


latest tamil news
திருட்டுத்தனம்


இதை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. ஆனால், வாராக்கடன் என்பது வங்கிகளின் பார்வையில் பெரும் சுமை தான். மறுப்பதற்கில்லை. ஆனால், அடிப்படை வாழ்வாதாரத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கமே இதற்குக் காரணம்.வங்கியைச் சுரண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இது செய்யப்படவில்லை என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் போதும். இதிலும் ஏதேனும் யுக்தி இருக்குமா, குறுக்கு வழி, திருட்டுத்தனம் இருக்குமா என்பதை வங்கி நிர்வாகங்கள் கண்காணிப்பது நல்லது. பொருளாதார பாதிப்புள்ள மத்தியமர்கள் கடன் ஒத்திவைப்பை பெறுவது நியாயம். ஆனால், தவறாகப் பயன்படுத்த எவரேனும் முனைவர் என்றால், அது தடுக்கப்பட வேண்டும்.அதேபோல் ஆகஸ்டுக்குப்பின், ஒத்திவைப்பை நீட்டிக்கக் கூடாது.

ஒரு முறை கடன் மறுசீரமைப்பு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை, பல சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கோருகின்றன. இன்றைய சூழலில், இது வங்கிகளின் சுமையை மேன்மேலும் அதிகரிப்பதாகவே இருக்கும். அதனால், ஏதேனும் ஒரு வரையறையை உருவாக்கி, அதன்படி கடன் சீரமைப்பை வழங்கலாம். வாராக்கடன் பெருகுவதால் ஏற்படக்கூடிய பிரச்னைகளைச் சமாளிப்பது தான் இப்போது மிகவும் முக்கியம். குறிப்பாக, வங்கிகள் வாராக்கடனால் ஏற்படக்கூடிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கு, அவை ஈட்டும் வருவாயில் ஒரு பகுதியை ஒதுக்கி வைக்கும். அதனால், கடன் கொடுப்பதற்கு அவற்றிடம் போதிய மூலதனம் இருக்காது. அதேபோல், புதிய கிளைகள்திறப்பது அனுமதிக்கப்படாது.


latest tamil news


போதிய மூலதனம் இல்லை என்றால், ஒருசில வங்கிகள்கடன் கொடுப்பதையே ஆர்.பி.ஐ., அனுமதிக்காது. ஏற்கனவே, பொதுத் துறை வங்கிகள் பார்த்து பார்த்துத் தான் கடன் கொடுக்கின்றன. பெரிய ரிஸ்க் எடுக்க அவை தயங்குகின்றன. இனி நிலைமை இன்னும் மோசமாகிவிடும். கொரோனாவில் இருந்து மீளவேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். இந்நிலையில், வங்கிகள் கடன்கள் கொடுக்காமல், இழுத்துப் பிடித்தால், பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடும். ஒவ்வொரு துறையிலும் கடன் வறட்சி ஏற்பட்டு, தொழில் பாதிப்பு ஆழமாக இருக்கும்.

மேலும், பெரும்பாலான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வங்கியல்லாத நிதி நிறுவனங்களிடம் தான் கடன் பெறுகின்றன; அவற்றுக்கும் இதே பிரச்னை தான். அவற்றாலும் கடன் கொடுக்க முடியாது எனும்போது, தொழிலகங்கள் மீள்வதில் சிக்கலும், தாமதமும் ஏற்படப் போவது உறுதி.இதையெல்லாம் பார்க்கும்போது, நத்தை கூண்டுக்குள் சுருங்கிக்கொள்வது போல், நம் பொருளாதாரம் சுருங்கிவிடுமோ என்ற அச்சம் எழாமல் இல்லை. இந்தச் சமயத்தில் தான், மத்திய, மாநில அரசுகள் கூடுதலாக நிதியாதாரங்களை ஏற்படுத்தி, வங்கிகளையும் காப்பாற்றி, நம் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.


அச்சம்


ஆனால், அரசாங்கத்துக்கு வேறோரு கவலை இருக்கிறது. இதையெல்லாம் செய்தால், எங்கே நம் நிதிப் பற்றாக்குறையின் அளவு பெருகிவிடுமோ; கடனுக்கும், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் பெருகிவிடுமோ; அதனால் சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள், இந்தியாவின் முதலீட்டுத் தரத்தைக் குறைத்துவிடுமோ என்று அச்சப்படுகிறது. உண்மையில், நாம் ரேட்டிங் ஏஜன்சிகளுக்காக கவலைப்படக் கூடாது. காலுக்காக செருப்பே அன்றி, செருப்புக்காக காலை வெட்டிக்கொள்ள முடியாது. மேலும் வெளிநாட்டு முதலீட்டை எதிர்பார்த்து, சரிவடையும் உள்நாட்டு அமைப்புகளை நடுத்தெருவில் விட்டுவிடவும் முடியாது.

இந்நிலையில், நம் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம் தெரிவித்துள்ள நம்பிக்கை வார்த்தைகள் உற்சாகமூட்டுகின்றன.'கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன், நம் பொருளாதாரத்தை மீட்பதற்குத் தேவையான இன்னொரு பொருளாதார ஊக்கத் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்யும்' என்று அவர் தெரிவித்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது. அடிப்படையில், இந்த வாராக்கடன் என்பது வங்கிகளின் குறையில்லை, தனிநபர்கள், நிறுவனங்களின் குற்றமும் இல்லை. ஆர்.பி.ஐ.,யின் கையாலாகத்தனமும் இல்லை. கொரோனா என்ற கொள்ளை நோய், நம் இந்தியப் பொருளாதாரத்தை திக்கு தெரியாத காட்டில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. இருள் கண்டு மிரளாமல், நிதி ஆதாரங்கள் எனும் கைவிளக்கைப் பிடித்து, துாரத்து வெளிச்சப் புள்ளியை நோக்கி நகர்வது ஒன்றே இப்போதைக்கு வழி.
-- ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053881

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
27-ஜூலை-202015:43:07 IST Report Abuse
siriyaar ஓடாத கம்பனிக்கெல்லாம் லோன் கொடுத்தா என்னாகும் இப்படித்தான் நடக்கும்.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
27-ஜூலை-202014:50:24 IST Report Abuse
GMM வராக்கடன் என்பதை விட ஊழலால் , ஓட்டை சட்டங்களால் ஏமாற்று கடன் என்று கூறலாம் . திட்டத்திற்கான கடன் தொழில் கூடம் , உபகரணங்கள் வாங்க பெரும் தொகை தேவைப்படும் . இவை நிறுவனம் மற்றும் வங்கியின் பெயரில் கூட்டாக இருக்க வேண்டும். ஒருவரால் நிறுவனத்தை நடத்த முடியாத நிலையில் , WAITING LIST ல் இருவரை தயார் நிலையில் தேர்வு செய்து அவரிடம் ஒப்படைக்க வேண்டும் . COPPER FACTORY போராட்டம், சுற்றுசூழல் காரணமாக மூடப்பட்டது . ஓடிக்கொண்டு இருக்கும் தொழில் சாலையை ஒருபோதும் செயற்கையாக மூட கூடாது .கடன் இருந்தால் அடைக்க முடியாது .பல வங்கியில் முதலீடு , கடன் பெறுவதை தடுக்க வேண்டும் அல்லது முறைப்படுத்த வேண்டும் . ஆபத்து காலங்களில் சேமிப்பு உதவும் . ஆபத்து காலம் (கொரோன) வருவதை தவிர்க்க முடியாது.
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
27-ஜூலை-202013:00:33 IST Report Abuse
svs //...வாராக்கடன் 12 விழுக்காட்டுக்கு மேல் போகும் வாய்ப்பு உண்டு .....//.....இந்த அளவுக்கு வாரா கடன் ரொம்ப அதிகம் ....இந்த செய்தியை பார்த்தால் மொத்த அரசு, தனியார் வங்கிகளும் இந்த நிலைமைதான் போலுள்ளது.. வயதானவர்கள், பணி முதிர்வு அடைந்தவர்கள் போஸ்ட் ஆபீசில் பணத்தை டெபாசிட் செய்வது நல்லது .....வாரா கடனில் வங்கிகள் மூழ்கினால் பிறகு டெபாசிட் தாரர் தலையில் துண்டு .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X