பொதுநல கட்டடம் ஆக்கிரமிப்பு; கிராம மக்கள் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொதுநல கட்டடம் ஆக்கிரமிப்பு; கிராம மக்கள் போராட்டம்

Added : ஜூலை 27, 2020
Share

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, பொதுநல கட்டடத்தை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தேன்கனிக்கோட்டை அடுத்த அந்தேவனப்பள்ளியில், பழைய ஓட்டு கட்டடம் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த முரளி, 51, என்பவர், பழைய கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை அதிரடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டடத்தை இடித்த கிராம மக்கள், அந்த இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்தாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த, தேன்கனிக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், டி.எஸ்.பி., சங்கீதா, இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர், பொதுமக்கள் மற்றும் முரளி தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய ஆவணங்களை எடுத்து வருமாறு பேச்சுவார்த்தையில் கூறப்பட்டது. இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடந்த, 1979ல், மக்கள் பயன்பாட்டுக்கு பொதுநல கட்டடம் கட்டப்பட்டது. திருவிழா மற்றும் சந்தை காலங்களில், பொதுமக்களுக்கு நீர்மோர் பானங்கள் வழங்கவும், வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் தங்கவும் பயன்படுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அந்தேவனப்பள்ளியை சேர்ந்த முதியவர் ஒருவர் டீ கடை நடத்த கட்டடத்தை வழங்கினோம். அவருக்கு உதவியாக, கல்லாவி என்பவர் டீ கடையில் பணியாற்றி வந்தார். முதியவர் இறந்த பின், உதவியாளர் கல்லாவி, பொது கட்டடத்தை தனக்கு சொந்தமாக்கி கொண்டு, அதில் புதிய கட்டடம் கட்ட முயன்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கைவிட்டார். கல்லாவி இறந்ததால், அவரது மகனான முரளி, வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியோடு, அந்த இடத்துக்கு பட்டா வாங்கி ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X