வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 204 பேர் பாதிப்பு: முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை: அமைச்சர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 204 பேர் பாதிப்பு: முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை: அமைச்சர்

Added : ஜூலை 27, 2020
Share

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நேற்று, 204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில், சத்துவாச்சாரி, தோட்டப்பாளையம், காட்பாடி, விருதம்பட்டு, தாராபடவேடு, குடியாத்தம், பேர்ணாம்பட்டு என மாவட்டத்தில் நேற்று, 204 பேர் பாதிக்கப்பட்டனர். அனைவரும் வேலூர், குடியாத்தம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 5,166 ஆக உயர்ந்துள்ளது.


* ராணிப்பேட்டை மாவட்டத்தில், 242 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில், 86 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.


* கொரோனா பாதிப்பால், ராணிப்பேட்டை தலைமை தபால் நிலையம், ஆம்பூரில் உள்ள இரண்டு தோல் தொழிற்சாலைகள், வேலூர் தாலுகா, பென்னாத்தூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகங்கள் மூடப்பட்டன.


* ராணிப்பேட்டை, தி.மு.க., எம்.எல்.ஏ., காந்தி கடந்த வாரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி., யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் மனைவி கமலாவுக்கும் தொற்று பாதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


* கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் வசித்தவர்கள், வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று அங்கிருந்தவர்கள், தங்களை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு டாக்டர்கள், '10 நாள் சிகிச்சை பெற வேண்டும், இது குறித்து கணக்கிட்டு டிஸ்சார்ஜ் செய்வதாக கூறி' அவர்களை சமாதானப்படுத்தினர்.

6 பேர் பலி: ஆந்திரா மாநிலம், சித்தூரை சேர்ந்த, 79 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் இறந்தார். வேலூர் மாவட்டம், வேலூர் கலாஸ்பாளையத்தில், 69 வயது முதியவர், தோட்டப்பாளையத்தில், 85 வயது முதியவர் ஆகியோர் சி.எம்.சி.,யிலும், காட்பாடியை சேர்ந்த, 72 வயது முதியவர் வேலூர் அரசு மருத்துவமனையிலும் இறந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை சேர்ந்த, 70 வயது முதியவர் வேலூர் அரசு மருத்துவமனையில் இறந்தார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பரமேஸ்வர நகரை சேர்ந்த, 65 வயது முதியவர் அங்குள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவரை, நேற்று முன்தினம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். இறந்த ஆறு பேர் உடல்கள், பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டன.

'முழு ஊரடங்கு வாய்ப்பில்லை': திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சோலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், 175 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வீரமணி, நேற்று வார்டை ஆய்வு செய்தார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மற்ற மாவட்டங்களை காட்டிலும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. எனவே, மூன்று மாவட்டங்களில், முழு ஊரடங்கை அறிவிக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X