காந்திநகர்: குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதியில், ஆண் சிங்கத்துடன் பெண் சிங்கம் நேருக்கு நேர் மோதும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீங்கள் எத்தனையோ சிங்கங்கள் குறித்த வீடியோவை பார்த்திருப்பீர். ஆனால் பெண் சிங்கம், ஆண் சிங்கத்துடன் மோதும் வீடியோ பார்த்திருக்கிறீர்களா. குஜராத்தை சேர்ந்த பா.ஜ., தலைவரும், வனவிலங்கு புகைப்படக் கலைஞருமான ஜூபின் ஆஷாரா தான் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். மூன்று ஜீப்களில் தொலைவில் நிற்கும் சுற்றுலா பயணிகள், மண் சாலையின் நடுவே சிங்கங்கள் சண்டையிட்டு கொள்வதை நேரில் பார்க்கின்றனர்.
எப்போது படம்பிடிக்கப்பட்டது என தெரியாத நிலையில், வைல்டு லைப் என்னும் டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது. 22 நொடிகள் கொண்ட வீடியோவில், சிங்கங்கள் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் உறுமியப்படி பார்த்து கொண்டே முன்னங்கால்களை தூக்கி சண்டையிடுகின்றன. சிங்கங்கள் சண்டையிட்டு கொள்ளும் வீடியோவை ஒரே நாளில் டுவிட்டரில் 2.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். காய்கறிகள் வாங்க சென்று, கொத்தமல்லி வாங்காமல் வீட்டுக்கு வரும் கணவன் எனவும், இரு சிங்கங்கள் இடையேயான சண்டையை கணவன் மனைவி பிரச்னை என நெட்டிசன்கள் பலர் கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.
கடந்த மாதம் பிரதமர் மோடி, கிர் வனப்பகுதியில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். குஜராத் அரசின் கணக்கெடுப்பின்படி, தற்போது கிர் சரணாலயத்தில் 674 ஆசிய சிங்கங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சிங்கங்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடைசியாக 2015ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், கிர் தேசிய பூங்காவில் 523 சிங்கங்கள் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE