சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 27) ஒரே நாளில் 5,723 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.62 லட்சத்தை தாண்டியது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 6,993 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,956 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 37 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 117 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 59) மூலமாக, இன்று மட்டும் 63,250 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 24 லட்சத்து 14 ஆயிரத்து 713 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 4,162 பேர் ஆண்கள், 2,831 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,33,930 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 86,763 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,723 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 249 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 77 பேர் உயிரிழந்தனர். அதில், 27 பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,571 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 54,896 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 11,042 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,82,286 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 27 ஆயிரத்து 388 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.