திருப்பதி : ஆந்திராவில் எருதுகளுக்கு பதிலாக ஏரில் தன் இரு மகள்களை பூட்டி நிலத்தில் உழவு செய்த விவசாயிக்கு ஹிந்தி நடிகர் சோனு சூட் டிராக்டர் நன்கொடையாக அளித்து உதவினார். அவருக்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்தார். மேலும் அவரின் இரு மகள்களின் படிப்பு செலவை ஏற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் மஹால்ராஜூவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகேஸ்வரராவ் என்பவர் நடத்தி வந்த தேநீர் கடை வியாபாரம் கொரோனா தொற்று பரவல் காரணமாக நசிந்து போனது. அதனால் அவர் தன் கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிரிட திட்டமிட்டார். ஆனால் டிராக்டர் மற்றும் உழவு மாடுகள் வாடகைக்கு வாங்க பணமில்லாததால் தன் இரு மகளை ஏரில் பூட்டி நிலத்தில் உழவு செய்தார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த ஹிந்தி நடிகர் சோனு சூட் மனவருத்தம் அடைந்து அவருக்கு டிராக்டர் வாங்கி தந்து உதவி செய்துள்ளார். நேற்று மாலை விவசாயியிடம் அந்த டிராக்டர் ஒப்படைக்கப்பட்டது. மேலும், தந்தைக்கு உதவி செய்த பெண்களை படிப்பில் கவனம் செலுத்துமாறும் கூறியிருந்தார்.

இந்நிலையில், சோனு சூட் செய்த உதவிக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: நாகேஷ்வரராவின் குடும்பத்திற்கு டிராக்டரை அன்பளிப்பாக வழங்கிய சோனு சூட்டை தொடர்புகொண்டு பேசி, அவருக்கு பாராட்டு தெரிவித்தேன். இந்தக் குடும்பத்தின் நிலை கருதி, இரு மகள்களின் கல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். அவர்களின் கனவு நனவாக உதவி செய்வேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.