விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றவாளிகளுக்கு, அரசு அறிவித்துள்ள புனர்வாழ்வு திட்டத்தின் மூலம் உதவி அளிக்கப்படும்.விழுப்புரம் எஸ்.பி., ராதாகிருஷ்ணன் செய்திக்குறிப்பு;கள்ளச்சாராயம் மற்றும் வெளி மாநில மதுபானங்கள் விற்பனை செய்தல் உள்ளிட்ட மதுவிலக்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்து, குற்றவாளிகள் ஓராண்டு தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, காவல் துறையின் எச்சரிக்கையை உதாசீனம் செய்து குற்றச் செயல்கள் புரிந்துவந்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த இரண்டு நாட்களில் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 52 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களை தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கள்ளச்சாராய விற்பனை நடைபெறும் கிராமங்களில், அவற்றை அறவே ஒழிக்க தனி போலீஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். .கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்யும் நபர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி சொந்தமாக தொழில் தொடங்கி தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வருவாய் துறையினருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்கள் புரிவோர், இனிமேலும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடாமல் இருக்கும் நிலையில் அவர்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தை பெரும் பொருட்டு அரசு அறிவித்துள்ள புனர்வாழ்வு திட்டத்தின் மூலம் உதவி அளிக்கப்படும். மேலும், சட்டத்திற்கு புறம்பான மேற்படி செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.