கைகோர்த்து நிற்கிறாராம் அந்த லேடி...!

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
மார்க்கெட்டுக்குச் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், மழை காரணமாக, டவுன்ஹால் விக்டோரியா ஹால் அருகே, ஒதுங்கி நின்றிருந்தனர்.மாநகராட்சி பறக்கும் படை ஜீப் ஒன்று புறப்பட்டுச் சென்றது.அதை பார்த்த மித்ரா, ''அக்கா, 'கொரோனா' காலத்திலும், ஆபீசர்ஸ் காசு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களாமே,'' என, நோண்ட ஆரம்பித்தாள்.'ஆமா மித்து, நானும் கேள்விப்பட்டேன். 'ரெய்டு'க்கு ரெண்டு
 கைகோர்த்து நிற்கிறாராம் அந்த லேடி...!

மார்க்கெட்டுக்குச் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், மழை காரணமாக, டவுன்ஹால் விக்டோரியா ஹால் அருகே, ஒதுங்கி நின்றிருந்தனர்.மாநகராட்சி பறக்கும் படை ஜீப் ஒன்று புறப்பட்டுச் சென்றது.

அதை பார்த்த மித்ரா, ''அக்கா, 'கொரோனா' காலத்திலும், ஆபீசர்ஸ் காசு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களாமே,'' என, நோண்ட ஆரம்பித்தாள்.

'ஆமா மித்து, நானும் கேள்விப்பட்டேன். 'ரெய்டு'க்கு ரெண்டு அதிகாரிங்க போறாங்க. சமூக இடைவெளி இல்லைன்னு குற்றம் சுமத்தி, கடையை இழுத்து மூடி, சாவியை ஒரு அதிகாரி எடுத்துட்டு போறாரு.

''கடைக்காரங்களிடம் பேரம் பேசுறதுக்கு, ஊழியர்களை நியமிச்சிக்கிறாங்க. கரன்சி கை மாறியதும், கடையை திறந்து விடுறாங்க. மார்க்கெட் விவகாரத்திலும் பெரிய தொகை கை மாறியிருக்குதாம். 'கொரோனா - கரன்சி'யில், சில ஆபீசர்ஸ் குளிக்கிறாங்களாம்,''

''ஆமாக்கா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டுல இருக்குற ஒரு மொபைல் போன் கடையில ஏகப்பட்ட கூட்டம் இருந்துச்சு; ஒரு லேடி அதிகாரி, ஏகத்துக்கும் சத்தம் போட்டாங்க. கடைக்காரங்க, 500 ரூபாயை எடுத்து நீட்டியிருக்காங்க. பணத்தையும் வாங்கிட்டு, அதே மதிப்புக்கு, மொபைல் போன் அக்சசரீஸ் எடுத்துட்டு கெளம்பிட்டாங்களாம்.

''முக கவசம் அணியறதில்லை; சமூக இடைவெளி இல்லைன்னு சொல்லி, அபராதம்ங்கிற பெயருல்ல, கலெக்சனை அள்ளித் தட்டுறாங்க. பொதுமக்கள் மத்தியில, ஆளுங்கட்சி மீது அதிருப்தி ஏற்பட ஆரம்பிச்சிருக்கு,''

''ஆளுங்கட்சின்னு சொன்னதும், எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. அ.தி.மு.க.,வை கோவை புறநகர் வடக்கு, தெற்கு, மாநகர் மாவட்டம்னு, மூணு பிரிவா பிரிச்சதால, கட்சிக்குள்ள கசமுசா ஏற்பட்டிருக்காமே,''

''மித்து, அடுத்தாண்டு நடக்கப் போற, சட்டசபை எலக்சனுக்கு, ஆளுங்கட்சிக்காரங்க, இப்பவே தயாராக ஆரம்பிச்சிட்டாங்க. வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான பி.ஆர்.ஜி., மாநகர் மாவட்ட செயலாளராவும் இருந்தாரு; இவருக்கு, வடக்கு மாவட்டம் ஒதுக்கிருக்காங்க. வடக்கு தொகுதியை மாநகரோட இணைச்சிட்டு, அவிநாசியை கொடுத்திருக்கிறது, எம்.எல்.ஏ., ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கு,''

''அவரு, ஓ.பி.எஸ்., அணிக்கு போயிட்டு, திரும்பி வந்ததுல இருந்து, ஒதுங்கியே இருந்தாரு. மறுபடியும் மாநகர் மாவட்ட பொறுப்பு கொடுத்தும், 'ஆக்டிவ்'வா வேலை பார்க்கலை.

''தி.மு.க., - எம்.எல்.ஏ., கார்த்திக், ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய போதும், கண்டுக்கலை. அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவா, எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுணன் அறிக்கை வெளியிட்டாரு. இப்ப, அவருக்கு மாநகர் மாவட்ட பொறுப்பு கெடைச்சிருக்கு,''

''பதவி, அந்தஸ்து கிடைக்கறது பெரிசில்லீங்க. மூணு தொகுதியிலும் ஜெயிச்சுக் காட்டணுமே,''

''பார்ப்போம், சட்டசபை எலக்சன் சமயத்துல, என்னென்ன கூத்து நடக்கப் போகுதோ,'' என சித்ரா சொன்னபோது, ஒரு ஜீப்பில் இருந்து, ஏகப்பட்ட, 'டவுன் பிளானிங்' பைல்கள், கார்ப்பரேசன் ஆபீசுக்குள் எடுத்துச் செல்லப்பட்டன.

அதை கவனித்த மித்ரா, ''அக்கா, கார்ப்பரேஷன்ல இருக்கற டவுன் பிளானிங் செக்சனையும், ரெவின்யூ செக்சனையும் கலைச்சிட்டு, நேர்மையான, திறமையான, லஞ்சம் வாங்காத அலுவலர்களை நியமிக்கணும்,'' என்றாள்.

''ஏம்ப்பா, என்னாச்சு, பைல் 'மூவ்' ஆகுறதுக்கு கரன்சி கேக்குறாங்களா,'' என, கிளறினாள் சித்ரா.

''கரன்சி வாங்குறது வழக்கமானதுதான். கார்ப்பரேசன் சொத்தை உரிமை கொண்டாடிய ஒருத்தருக்கு, வரி புத்தகம் போட்டுக் கொடுக்குறதுக்கு, ஆளுங்கட்சிக்காரங்க ஆதரவுல, பைல் அனுப்பியிருக்காங்க,''

''அச்சச்சோ... கொஞ்சம் விளக்கமாச் சொல்லு,''

''கிழக்கு மண்டலத்துல, எஸ்.எம்.எஸ்., லே-அவுட் கார்ப்பரேஷன் ஸ்கூல் பக்கத்துல, பிளே கிரவுண்டு இருந்துச்சு. ஆக்கிரமிப்புல சிக்கியிருக்கிற அந்த மைதானத்தை மீட்குறதுக்கு பதிலா, வரி புத்தகம் போட்டுக் கொடுக்க, ரெவின்யூ டிபார்ட்மென்ட்டுல இருக்குற லேடி ஆபீசர் முயற்சி செஞ்சிருக்காரு. இதை கடைசி நேரத்துல கண்டுபிடிச்ச உயரதிகாரி, தடுத்து நிறுத்திட்டாராம்,''

''ஓ... அப்படியா,'' என்ற மித்ரா, ''டீசல் திருட்டையும் கையும் களவுமா கண்டுபிடிச்சதா சொன்னாங்களே,'' என, இழுத்தாள்.

''ஆமா மித்து, நானும் கேள்விப்பட்டேன். கவுண்டம்பாளையம் ஏரியாவுல, கார்ப்பரேசன் லாரியில டீசல் திருடுறதை கமிஷனர் நேரில் பார்த்து, கொதிச்சிட்டாராம். மொத்தம், 35 லிட்டர் டீசல் நிரப்பணுமாம்; ஆனா, 25 லிட்டர் நிரப்பிட்டு, 10 லிட்டருக்கான பணத்தை அமுக்கிட்டாங்களாம். டிரைவரை கண்டித்த கமிஷனர், இனி, அவருக்கு வண்டி ஒதுக்கக் கூடாதுன்னு, சுகாதாரப் பிரிவினருக்கு கறாரா உத்தரவு போட்டிருக்காராம்,''

''அதிருக்கட்டும், கார்ப்பரேசன் ஆபீசர்ஸ் சில பேரு, வேற ஆளுங்க பெயரில் கம்பெனி நடத்துறாங்களாமே. அவுங்களே, கான்ட்ராக்ட் எடுத்து, வேலை செஞ்சு, நிதியை, 'லபக்'குறாங்களாமே,''

''அதுவா, சிங்காநல்லுார், ஜெய்சாந்தி தியேட்டர் பக்கத்துல, ஆர்.கே.எஸ்., நகர் இருக்கு. புதுசா மழை நீர் வடிகால் கட்டுறதா சொல்லிட்டு, பழைய வடிகாலில் பூசி, மெழுகி, பல லட்சம் ரூபாயை அமுக்கிட்டாங்களாம். 'ரேம்ப்' இருக்குற பல வீடுகளுக்கு முன், வடிகால் கட்டவே இல்லையாம்.

''சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், மாநகரின் முக்கியமான பொறியாளர் ஒருவருடைய ஆள் என்பதால், இவருடைய வேலையை கண்காணிப்பது இல்லையாம். இது சம்பந்தமா, ஆளுங்கட்சி வி.ஐ.பி., கவனத்துக்கு கொண்டு போயிருக்காங்களாம்,''மழை ஓய்ந்ததும், ஸ்கூட்டரில் இருவரும் புறப்பட்டனர்.சிக்னல் அருகே, போலீஸ் ஜீப் நின்றிருந்தது.

''அக்கா, எனக்கொரு விஷயம் தெரியும். எஸ்.பி., ஆபீசுல ரெண்டு வருஷத்துக்கு மேலாக, முக்கியப் பொறுப்பில் இருக்குற 'ஸ்பெஷல்' ஆன ஆபீசர் மீது எக்கச்சக்கமா புகார் வருதாம். இந்தப் பொறுப்புக்கு, அவர் வந்ததும், பல கோடி ரூபாய் அளவுக்கு சம்பாதிச்சிருக்காராம்.

''பிரமாண்டமா வீடு கட்டுறாராம். ஆளும்கட்சி வி.ஐ.பி.,க்கு நெருக்கமானவரை, கைக்குள் போட்டுக்கொண்டு, கச்சிதமாக காய் நகர்த்துவதால், இவரை யாராலும் அசைக்க முடியலைன்னு சொல்றாங்க. அவருடன் கைகோர்த்து செயல்படும், இன்னொரு லேடி ஆபீஸர் மேலேயும் ஏகப்பட்ட புகார் கிளம்பியிருக்காம். புதுசா வந்துருக்கிற எஸ்.பி.,கிட்ட, இவங்க 'பருப்பு' வேகாதுன்னு சொல்றாங்க... பார்ப்போம்,''

''ஆமா, பீளமேடு ஏரியாவுல இன்னொரு அதிகாரி, வீடு கட்டுறதா சொன்னாங்களே,'' என, கிளறினாள் மித்ரா.

''மித்து, அதெல்லாம் செவி வழிச் செய்தி. விசாரிச்சிட்டு, உண்மையா இருந்தால் சொல்றேன்,'' என்ற சித்ரா, ''கலெக்டர், புதன்கிழமை (நாளை) பணிக்கு திரும்புறாராம். 'கொரோனா' பீதியில இருக்குற அலுவலர்கள், அவரை சந்திச்சு, இனிமே அடிக்கடி மீட்டிங் நடத்துறதை தவிர்க்கணும். அவசியமான கூட்டமா இருந்தா, யார் யார் வரணும்னு முன்கூட்டியே, 'லிஸ்ட்' தயாரிச்சு, அவுங்களை மட்டும் வரவழைக்கணும்னு, கோரிக்கை விடுக்கப் போறாங்களாம்,'' என்றாள்.

''அதுவும் நல்லதுதானே! சென்ட்ரல் கவர்மென்ட் தரப்புல, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில தான், கூட்டம் நடத்துறாங்க. அதே மாதிரி, கூட்டம் நடத்தலாமே,'' என்ற மித்ரா, ''மருத்துவ முகாமும் ஏனோ தானோன்னு நடக்குதாமே,'' என, கேட்டாள்.

''ஆமாப்பா, சில இடங்களுக்கு நானும் போயிருந்தேன். செவிலியர்களுக்கு பாதுகாப்பே இல்லே. அவுங்களும் ஒழுங்கா 'மாஸ்க்' அணியுறதில்லை. இதுவரை, அஞ்சு செவிலியர்களுக்கு தொற்று உறுதியாகி, நாலு மையங்களை மூடி வச்சிருக்காங்க,'' என்றபடி, மார்க்கெட் முன், ஸ்கூட்டரை நிறுத்தினாள் சித்ரா.

இருவரும் நடந்து சென்று, காய்கறி வாங்க ஆரம்பித்தனர்.அப்போது, ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டதும், ''அக்கா, பிரைவேட் ஹாஸ்பிடலில், 'பேக்கேஜ்' சிஸ்டம் அமலுக்கு வந்திருக்காம்,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.

''அதென்னப்பா, 'பேக்கேஜ்' சிஸ்டம், புரியுற மாதிரி சொல்லேன்,''

''கொரோனா நோயாளிகளை அட்மிட் செய்யணும்னா, 50 ஆயிரம் ரூபாய், 'டிபாசிட்' செய்யணுமாம். ஐ.சி.யு., வார்டுல சிகிச்சை அளிக்கிறதுக்கு, 15 ஆயிரமாம்; சாதாரண வார்டா இருந்தா, 7 ஆயிரம் ரூபாயாம்.''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஒருத்தரு இறந்துட்டாரு. ஆஸ்பத்திரி தரப்புல, டிரீட்மென்ட் கட்டணம், ஒரு லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் கேட்டிருக்காங்க.

''உறவுக்காரங்களோ, 'எப்படியும் முகத்தை பார்க்க விட மாட்டீங்க; இறுதி சடங்கு செய்ய விட மாட்டீங்க. நீங்களே, புதைச்சிடுங்க'ன்னு சொல்லிட்டு, 'எஸ்கேப்' ஆகிட்டாங்களாம். அரசாங்க தரப்புல புதைச்சிடலாம்னு, ஆலோசனை செஞ்சிருக்காங்க. உறவுக்காரங்க முன்னால தான் புதைக்கணும்னு உயரதிகாரி கண்டிப்பா, ஆர்டர் போட்டதுனால, மூணு நாளா, ஆஸ்பத்திரியில பாதுகாப்பா சடலத்தை வச்சிருந்தாங்களாம்,''

''அச்சச்சோ... அப்புறம், என்னாச்சு,''''ஆஸ்பத்திரி தரப்புல இருந்து, போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து, உறவுக்காரங்களை வலுக்கட்டாயமா வரவழைச்சிருக்காங்க. அதுக்கு பின்னாடி, அந்த சடலத்தை புதைச்சிருக்காங்க,''

''மித்து, இன்னும் மருந்தே கண்டுபிடிக்காத நோய்க்கு, லட்சக்கணக்குல பில் தீட்டுனா, மக்களும் என்ன செய்வாங்க, ஆஸ்பத்திரிக்காரங்களும், மனசாட்சியோடு நடந்துக்கிடணும்,'' என்ற சித்ரா, ''ஹவுசிங் போர்டு ஆபீசுல புரோக்கர் சொல்றதுதான், சட்டமாமே,'' என, கிளறினாள்.

''அடடே... அந்த விஷயம் ஒங்களுக்கும் தெரிஞ்சு போச்சா. சிவானந்தா காலனியில, ஹவுசிங் போர்டு ஆபீஸ் இருக்கு. நான்கெழுத்து புரோக்கர் ஒருத்தரு ஆபீசும், பக்கத்திலேயே இருக்கு. ஹவுசிங் போர்டு ஆபீசுக்கு ஏதாச்சும் வேலையா போனா, புரோக்கர் ஆபீசுக்கு கை நீட்டுறாங்க,''

''அங்க போயி, செட்டில்மென்ட் முடிந்ததும், 'பார்கோடு' மாதிரி, பைலில் குறியீடு போடுறாங்களாம். அந்த குறியீடு இருந்தா மட்டுமே, பைல் 'மூவ்' ஆகுதாம். இல்லேன்னா, பைலை கிடப்புல போட்டுடுறாங்களாம்,'' என்றபடி, கூடையில், காய்கறி எடுக்க ஆரம்பித்தாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X