சென்னை : கலை மற்றும் அறிவியல், இன்ஜினியரிங், பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கான, செமஸ்டர் தேர்வுகள், சமீபத்தில் ரத்து செய்யப்பட்டன.
அதனால், தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பாடங்கள் அனைத்திலும், மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், முந்தைய செமஸ்டர் தேர்வில், தோல்வி அடைந்த பாடங்களுக்கான, அரியர் தேர்வுகளை, பின்னர் எழுத வேண்டும் என, தெரிவிக்கப் பட்டு உள்ளது. தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலர், பூர்வா பிறப்பித்துள்ள அரசாணை: கொரோனா தொற்று பரவல் காரணமாக, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வழிமுறைகளின்படி, செமஸ்டர் தேர்வு நடத்துவது தொடர்பாக, உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
நடப்பு செமஸ்டர் அந்த குழுவின் பரிந்துரைப்படி, நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய் யப்பட்டது குறித்த அறிவிப்பை, முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்டார். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., பரிந்துரைப்படி, மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.கலை, அறிவியல் கல்லுாரிகளில், இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும், முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள், பாலிடெக்னிக்கில், முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்கள். மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள், இன்ஜினியரிங்கில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும், நடப்பு செமஸ்டர் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில், முதலாம் ஆண்டு மற்றும் எம்.சி.ஏ., படிப்பில் இரண்டாம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கும், செமஸ்டர் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த செமஸ்டர் தேர்வுக்கு மட்டும் விலக்களித்து, அடுத்த பருவத்துக்கான கல்வி ஆண்டுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.முந்தைய செமஸ்டர் தேர்வில் பெற்ற, புறமதிப்பீட்டு மதிப்பெண்களில் இருந்து, 30 சதவீதமும், அக மதிப்பீட்டு மதிப்பெண்களில் இருந்து, 70 சதவீத மதிப்பெண்களும் கணக்கில் எடுக்கப்பட்டு, தேர்வு ரத்தான பாடங்களுக்கு, 100 சதவீத மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.
அனைத்து முதன்மை பாடங்களுக்கும், மொழி பாடங்களுக்கும், இதே முறை கணக்கிடப்படும். செய்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால், ஆய்வக பதிவேட்டின்படி மதிப்பெண் வழங்கப் படும். மாணவர்கள் முந்தைய செமஸ்டரில் தேர்வுகள் எழுத வேண்டியிருந்தால், அரியர் தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும்.தொலைநிலை கல்விதொலைநிலை கல்வியிலும், இதேமுறை பின்பற்றப்படும். தொலைநிலை கல்வியில் எங்கெல்லாம் அக மதிப்பீடு இல்லையோ, அங்கே அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இந்த மதிப்பீட்டு முறையில், உடன்பாடு இல்லாத மாணவர்கள், பின்னர் நடத்தப்படும் தேர்வில் பங்கேற்று, தங்களின் மதிப்பெண்ணை உயர்த்தி கொள்ளலாம். கொரோனா தொற்று சூழலை கருத்தில் கொண்டு, மதிப்பெண்கள் குறைவாக உள்ளவர்களுக்கு, கருணை மதிப்பெண் அளித்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE