சென்னை : நீண்ட நாட்களாக, 'செட்டாப் பாக்ஸ்'களை செயலில் வைக்காத, அரசு கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி, பல்வேறு மாவட்டங்களில், கேபிள், 'டிவி' நிர்வாகம் சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி'யின் கீழ், 30 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு சேவை வழங்க, 20 ஆயிரம் ஆப்பரேட்டர்கள் செயல்படுகின்றனர்.நுாற்றுக்கணக்கான ஆப்பரேட்டர்கள், கேபிள், 'டிவி' நிர்வாகத்திடம் பெற்ற, செட்டாப் பாக்ஸ்களை செயலில் வைக்காததாலும், அதை திரும்ப கொடுக்காததாலும், நிர்வாகம் தரப்பில், போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் கூறியதாவது:அரசு கேபிள், 'டிவி' இணைப்பு பெறுவோருக்கு, செட்டாப் பாக்ஸ் இலவசம் என, அரசு விளம்பரம் செய்தது; ஆனால், ஆப்பரேட்டர்களிடம் இருந்து, நிர்வாகம் தரப்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், கேபிள் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்கள், வீடு மாறும் போதோ, வேறு இணைப்பிற்கு செல்லும் போதோ, அரசு கேபிள், 'டிவி'யின், செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கொடுப்பதில்லை. பாக்ஸ்களை பல மாதங்களாக செயலில் வைக்கவில்லை; திரும்ப கொடுக்கவும் இல்லை எனக்கூறி, ஒரு பாக்ஸ்க்கு 1,850 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்த, நிர்வாகம் வலியுறுத்துகிறது.
பல்வேறு மாவட்டங்களில், கேபிள் ஆப்பரேட்டர்கள் மீது நடவடிக்கை கோரி, போலீஸ் நிலையத்தில், மாவட்ட துணை மேலாளர்கள் புகார் அளிக்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஆப்பரேட்டர், 75 பாக்ஸ்களை திரும்ப தரவில்லை; அதற்கான தொகை, 1.39 லட்சம் ரூபாயையும் திரும்ப தரவில்லை எனக்கூறி, ஈரோடு மாவட்ட தனி வட்டாட்சியர் வீரலட்சுமி, சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.எனவே, செட்டாப் பாக்ஸ்களை திரும்ப தராததற்கான காரணத்தை அறிந்து, அதற்கேற்றவாறு, அரசு கேபிள், 'டிவி' நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE