பல்லடம்:-இடியாப்ப சிக்கலில் சிக்கியுள்ள ஜவுளி துறையினர், உற்பத்தியை நிறுத்தலாமா, என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.பனியன் தொழிலுக்கு அடுத்ததாக, விசைத்தறியில் ஜவுளி உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. திருப்பூர், பல்லடம், அவிநாசி, சோமனுார், மங்கலம் வட்டார சார்ந்து, ஜவுளி உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது.ஊரடங்கு காரணமாக, ஜவுளி உற்பத்தி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதால், உற்பத்தி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இச்சூழலில், அனுப்பிய துணிகளுக்கான பணம் வராததால், ஜவுளி துறையினர் இடியாப்ப சிக்கலில் சிக்கி தவித்து வருகின்றனர்.இது குறித்து, பல்லடம் வட்டார ஜவுளி உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:திருப்பூர், கோவை மாவட்டத்தில் இருந்து, தினசரி ஒரு கோடி மீட்டர் துணிகள் உற்பத்தி ஆகின்றன. ஊரடங்கு காரணமாக, தற்போது, 50 சதவீத உற்பத்தி மட்டுமே நடக்கிறது. உற்பத்தியாகும் துணிகள், உ.பி., குஜராத், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.இந்த மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதால், இங்கிருந்து அனுப்பப்படும் துணிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், பணம் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.ஊரடங்கால், 50 சதவீத உற்பத்தி மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், துணிகளுக்கான பணம் வராததால், தொழில் நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆட்கள் சம்பளம், மின் கட்டணம் மற்றும் வரி என, பல்வேறு செலவுகளுக்கு, பணமின்றி தவிக்கிறோம்.துணிகளுக்கான பணம் வராவிட்டாலும், மேற்கூறிய செலவுகளுக்காக, உற்பத்தி மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். இருப்பினும், உற்பத்தியை நிறுத்துவது குறித்து ஒரு யோசனை உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் கூட, வட மாநிலங்களில் நிலைமை இன்னும் சரியாகவில்லை.இதனால், ஜவுளி தொழில் இன்னும் நெருக்கடியிலேயே உள்ளது. அந்தந்த மாநிலங்களில் நோய் தொற்று அபாயம் குறைந்தால் மட்டுமே துணி விற்னையாகி, பணம் கிடைக்கும். தொழிலாளர்களும் வேலைக்கு திரும்புவர். அதன்பின்னரே, ஜவுளி உற்பத்தி தொழில் பழைய நிலைக்கு திரும்பும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE