மனம் என்பது மகத்தான சக்தி. அதை எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதற்குத் தக்கபடி வெற்றிகள் அமையும். மனதில் அவநம்பிக்கை எண்ணம் இருந்தால் தோல்விதான் கிடைக்கும். அதையே நம்பிக்கையாக மாற்றிவிட்டால் வெற்றிதான்.
உங்களைப் பின்னுக்கு இழுப்பது எது? உங்களது தன்னம்பிக்கைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை, கவலைகள், எதிர்மறை எண்ணங்கள். இந்த எதிரிகளை ஒழித்துக் கட்டுங்கள். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நம்மால் முடியும் என்று நம்புங்கள். நம்பியது நடக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை ஆராயுங்கள்.
நீங்கள் உறுதியாக நம்பி இருக்க மாட்டீர்கள். ஒன்றிலேயே குறியாக இருந்திருக்க மாட்டீர்கள். அடிக்கடி இலக்குகளை மாற்றிக் கொண்டு இருந்திருப்பீர்கள். உங்களால் முடியாது என்று மற்றவர்கள் சொன்னதை அப்படியே நம்பி இருப்பீர்கள். உங்களுக்குத் தெரியாது என்று அடுத்தவர்கள் சொன்னதைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலே இருந்திருப்பீர்கள். இந்தத் தவறுகளை இனியும் தொடரலாமா?
பூவா--தலையா:
ஜப்பானில் அந்தக் காலத்தில் நெபுலா என்று ஒரு சிற்றரசன் இருந்தான். அருகிலுள்ள சிறுநாடுகளைப் போரிட்டுத் தன்வயப்படுத்திய அந்த தைரியத்தில் கொஞ்சம் பெரிய நாட்டினை ஆண்ட நெகி என்ற அரசனை வெற்றி கொள்ள நினைத்தான். படைத்தளபதி திகைத்தான். அந்த அரசனை வெற்றி கொள்ள இயலாது என்ற கருத்தை வெளியிட்டான். படை வீரர்களும் அதே மனோபாவத்தில் இருந்தார்கள். தோற்றுவிடுவோம் என்ற இவர்களின் மனோபாவத்தை மாற்றவேண்டும் என்று தீர்மானித்தான்.
ஒரு புத்தர் கோவிலில் நாளை எல்லோரும் கூடுவோம். புத்தரை வேண்டி ஒரு நாணயத்தைச் சுண்டிப் போடுவோம். தலை விழுந்தால் போர் செய்ய கடவுளுக்குச் சம்மதம் என்று நினைத்து போருக்குப் போவோம். பூ விழுந்தால் போருக்குப் போக வேண்டாம் என்று முடிவெடுப்போம் என்றார் நெபுலா. எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள். மறுநாள் அரசன் படைத்தளபதியிடம் ஒரு நாணயத்தைக் கொடுத்து சுண்டிப் போடச் சொன்னான்.
ஏனென்றால் அவன்தானே போரை முதலில் எதிர்த்தவன். சுண்டிவிடப்பட்ட நாணயம் தரையில் விழுந்ததும் பார்த்தால் தலைதான் விழுந்திருந்தது. பார்த்தீர்களா? புத்தர் பெருமானே அனுமதி வழங்கிவிட்டார். வெற்றி நமக்குத்தான்; புறப்படுங்கள் என்றார். அந்த நாணயத்தை அரசன் எடுத்துக் கொண்டார்.
நம்பிக்கைக்கு திட்டம்:
போர் தொடங்கியது. கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்ற மனோபாவத்தில் வீரர்கள் போரிட்டனர். வெற்றி அவர்களுக்கே கிடைத்தது. வெற்றி விழாவில் அரசனை எல்லோரும் புகழ்ந்தார்கள். குறிப்பாக படைத்தளபதி அரசனின் ராஜதந்திரத்தைப் பாராட்டினான். உடனே நெபுலா, 'இந்த நாணயத்தைப் பாராட்டுங்கள். அதுதான் நமக்கு வெற்றியைக் கொடுத்தது' என்று சொல்லி நாணயத்தை தளபதியிடம் கொடுத்தான்.
நாணயத்தின் இரு பக்கமும் தலையே இருந்தது. அந்த வகையில் அரசன் அந்த நாணயத்தை உருவாக்கியிருந்தான். எப்படிப் பார்த்தாலும் உங்களைப் பாராட்டு கிறேன் அரசே எங்களுக்கெல்லாம் நம்பிக்கையை ஊட்டவே இப்படி ஒரு திட்டம் தீட்டீனீர்கள் என்று புகழ்ந்தான்.
உடைக்கப்பட்ட படகுகள்:
இதைப்போலவே மனோபாவத்தை உருவாக்கி வெற்றி பெற்ற இன்னொரு தலைவனும் உண்டு. ஒரு பகுதியை ஆண்டு கொண்டிருந்த ஓர் அரசன் பக்கத்து பகுதியையும் கைப்பற்ற நினைத்தான். இடையில் பெரிய ஆறு ஓடியது. அதனை கடந்து சென்றால்தான் படையெடுக்க முடியும்.பெரிய படகுகளை ஏற்பாடு செய்தான். அவற்றில் ஆயுதங்களோடு பல போர்வீரர்களை ஏற்றச் சொல்லி தளபதிக்கு உத்தரவிட்டான். அதோடு அவன் காதில் ஒரு ரகசியத்தையும் சொன்னான். தளபதி கனகச்சிதமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்தான்.
இரவு நேரத்தில் படகுகள் ஆற்றில் பயணித்தன.அடுத்த நாட்டின் கரைப்பகுதியை அடைந்தவுடன் அரசனும் தளபதியும் ஆயுதங்களுடன் போர் வீரர்கள் இறங்கியபிறகு, ஏற்கெனவே திட்டமிட்டபடி எல்லாப் படகுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. படைவீரர்கள் பயந்தனர். எப்படி நாம் நமது நாட்டிற்குத் திரும்பிப் போவது என்ற அச்சம் அவர்களைக் கவ்விக் கொண்டது. அப்போது அரசன் ஓர் அறிவிப்புக் கொடுத்தான். போர்வீரர்களே நாம் வந்த படகுகள் எல்லாம் எரிக்கப்பட்டு விட்டன.
நாம் நமது நாடு திரும்ப வேண்டுமென்றால் இந்த அரசனை வென்றே ஆக வேண்டும். அவர்கள் நாட்டைக் கைப்பற்றி அவர்களது படகுகளைப் பயன்படுத்தித்தான் திரும்ப முடியும். அது உங்கள் கையில்தான் உள்ளது. உக்கிரமாகப் போராடுங்கள் என்று துாண்டிவிட்டான். அது நன்றாகவே வேலை செய்தது. நாம் திரும்பிச் சென்று மனைவி மக்களைப் பார்க்க முடியும் என்ற உத்வேகத்தில் உக்கிரமாகப் போராடினர். வெற்றியும் பெற்றனர். அரசன் இப்படிப்பட்ட நெருக்கடியைக் கொடுக்காமல் போயிருந்தால் வெற்றி கிடைத்திருக்குமா?
அனுமனின் மனோநிலை:
சீதையைத் தேடும் பணியில் கடல்தாண்டி இலங்கை செல்லும் பொறுப்பை ராமன் அனுமனுக்கு வழங்கினார். இந்த மாபெரும் பணியைச் செய்து முடிக்கும் வல்லமை தன்னிடம் இல்லை என்று நினைத்து சோர்வுற்று அயர்ந்தான் அனுமன். இதை அறிந்த ஜாம்பவான், அனுமனை அணுகினான். அனுமன் அளப்பரிய ஆற்றலும் அறிவும் பெற்றவன் என்பதை எடுத்துரைத்தான். அவன் சொல்லச் சொல்ல அனுமன் தனக்கு அசுர பலம் வந்ததைப்போல உணர்ந்தான்.
இயலாது என்ற மனோபாவத்தை 'உன்னால்தான் செய்ய முடியும்' என்று உணர்த்தியபோது அனுமனுக்கு மனோபலம் வந்தது. உனது ஆற்றலை உணர்ந்துதான் ராமன் இந்தப் பணியை உன்னிடம் ஒப்படைத்திருக்கிறான் என்று ஜாம்பவான் சொன்னதும் அந்த நம்பிக்கை அனுமனை மேலும் உற்சாகப்படுத்தியது. ராம் ராம் என்று சொல்லியே கடலைத்தாண்டி இலங்கை சென்று சீதையைக் கண்டுபிடித்துத் திரும்பியது நமக்குத் தெரியுமே எனவே 'முடியுமா' என்ற மனோபாவத்தை 'முடியும்' என்று மாற்றினால் வெற்றிதான்.
கொலம்பஸ்:
இந்தியாவுக்கு புதிய கடல்வழிப் பாதையைக் கண்டுபிடிக்க கொலம்பஸ் ஆசைப்பட்டார். ஸ்பெயின் அரசி இசபெல்லா உதவ முன்வந்தார். கப்பலையும் தேவையான பொருட்களையும் கொடுத்து உதவினார். ஆனால் கப்பலை இயக்க மாலுமிகள் முன்வரவில்லை. சிறைக் கைதிகளான மாலுமிகளை தர அரசி முன்வந்தார். கொலம்பஸ் பயணத்தைத் தொடர்ந்தார். கிழக்கு நோக்கிப் பயணித்து இந்தியாவை அடையத் திட்டமிட்டிருந்தார். ஆனால் புயலின் தாக்குதலால் கப்பல் திசைமாறி மேற்கே பயணித்து நாட்கள் கடந்தன. உணவும் நீரும் குறையத் தொடங்கின. எப்படியும் நிலப்பரப்புத் தெரியும் என்ற நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் உதவிக்கு வந்தவர்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை.
ஒருநாள் இரவு கொலம்பஸ் துாங்கிவிட்டதாக நினைத்து மற்றவர்கள் பேசிக்கொண்டது அவர் காதில் விழுந்தது. “இவரை நம்பி இனிமேலும் பயணம் செய்வதில் பயனில்லை. இவரை துாக்கி கடலில் எறிந்துவிட்டு ஊர் திரும்புவோம்” என்று பேசினர். கொலம்பஸ் அவர்கள் மத்தியில் நம்பிக்கை உரையாற்றினார். இன்னும் மூன்று தினங்களில் நிலப்பரப்புத் தெரியாவிட்டால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று உறுதியளித்தார்.
அவரது விடாமுயற்சி அவர்களின் மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது. மூன்றாம் நாள் காலைப் பொழுதில் பசுமையான இலைகளோடு சில மரக்கிளைகள் கடலில் மிதந்து வந்தன. காற்றின் சுழற்சியில் அவை மரங்களிலிருந்து முறிந்து விழுந்திருக்கலாம். அப்படியானால் மிக அருகில் நிலப்பரப்பு இருக்கிறது என்பது உறுதியாயிற்று. அந்த நிலப்பரப்புத்தான் அமெரிக்கா என்பதை அறிவோம். கொலம்பஸின் நம்பிக்கை உரையும் விடாமுயற்சியும் அவர்களின் விரக்தி மனோபாவத்தை மாற்றியதால் அது மனோபலம் ஆயிற்று.
மகாபாரதத்தில் அர்ச்சுனனின் மனோபாவத்தை மாற்றப் பிறந்ததுதானே பகவத்கீதை. கொரோனாவை எதிர்த்து வெற்றி கொள்வோம் என்ற மனோபாவத்தை வளர்த்துக் கொள்வோம். வெற்றி பெறுவோம். பலம் பெறுவோம்.
- முனைவர் இளசை சுந்தரம், வானொலி நிலைய முன்னாள் இயக்குனர், மதுரை.
98430 62817