இந்தியா

தனியார் மருத்துவ கல்லுாரிகளில் கொரோனா பரிசோதனை கூடம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வசதியாக தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் பரிசோதனைக் கூடங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி கூறினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பரிசோதனையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு, 10 லட்சம் பேரில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளது. 14 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரியில் 35 ஆயிரம் பேருக்கு மேல் உமிழ்நீர் பரிசோதனை செய்துள்ளோம்.கதிர்காமம் கோவிட் மருத்துவமனையில் பரிசோதனையை 400ல் இருந்து ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஜிப்மரில் ஆயிரமாக உள்ள பரிசோதனையை மேலும் அதிகரிக்க கேட்டுள்ளோம். மேலும், அரசு சார்பில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துக்கு கடிதம் எழுதி, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உமிழ்நீர் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் குறைந்தபட்சம் 150 முதல் 300 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்வதற்கான மையத்தை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கதிர்காமம் கோவிட் மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் நிரம்புகின்ற நிலையில் உள்ளன. இதனால் அரசு மருத்துவ கல்லுாரி, ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர். தமிழகத்தைப் போல புதுச்சேரியில் உள்ள ஓட்டல்களில் நோயாளிகளை தங்க வைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் நமக்கான நிதி கிடைக்கவில்லை. இதனால் மாநில பேரிடர் துறையின் நிதியை வைத்து உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்கான செலவுக்கும் பேரிடர் மீட்பு துறையின் நிதியிலிருந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா தொற்று வந்த காரணத்தினால் சட்டசபையை நடத்த முடியாத ஒரு சூழ்நிலை. அதற்கு முக்கிய காரணம், முக்கவசம் அணியாததே. எம்.எல்.ஏ.,க்கள் பொதுமக்கள் உள்ள இடங்களுக்கு, உரிய பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.ஜெயபால் எம்.எல்.ஏ., வுக்கு கொரோனா தொற்று வந்ததால் சட்டசபை மரத்தடியில் நடத்தும் நிலை ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியை கூட முககவசம் அணிந்து கொள்ளுமாறு நான் கூறினேன். ஆனால், அவர் சட்டசபை நடைபெற்றபோது கூட முகக்கவசம் அணியாமல் வந்தார். அவரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளேன்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே விதிமுறைகளை கடைபிடிக்காத காரணத்தால் நமக்கு நிறைய பிரச்னைகள் வருகின்றன. எனவே, பொதுமக்கள் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X